Sunday 31 January 2021

 

முகவுரை

உண்மையைக் கதைக்கும் கதைகள்:

ஆசி கந்தராஜாவின் ‘கீதையடி நீயெனக்கு…!

-மாலன்- 


ன்றைய உலகில் மிகவும் கடினமானது எது?

எளிமையாக இருப்பதுதான்!

நீங்கள் வீதியில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் நடந்து பாருங்கள், அல்லது ஒரு ‘மாலில்’ திரையரங்கில், ஏன் பள்ளிக்கூடத்தில்கூட நுழைந்து பாருங்கள். ஒப்பனையற்ற முகங்களை எதிர்கொள்வது அரிது. ஒரு நாளில் நாம் கேட்கிற அலங்காரமற்ற வார்த்தைகள் எத்தனை என எண்ணிப்பாருங்கள். எளிமையாக இருப்பது கடினமானது எனத் தெரியும்.

இவ்வளவு மெனக்கிட உங்களுக்கு விருப்பமில்லையா?

ஏதாவது ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து அண்மைக்காலத்தில் வெளிவந்த பெயர் ‘வாங்கிய’ எழுத்தாளர்களது ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பத்துப் பக்கம் புரட்டிப் பாருங்கள். அங்கு நீங்கள் எதிர்கொள்கிற சொற்குவியல்களும் பாவனைகளும் எளிமையாக இருப்பது கடினம் என உங்களுக்குச் சொல்லும்.

எளிமையாக இருப்பது ஏன் கடினமாகிப் போனது?

ஒரு காலத்தில் மக்கள் எளிமையாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அறிவு பெருகப் பெருக வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. புத்தகங்கள் எழுதத் துவங்கினார்கள். இதனால் மக்களின் துயரங்கள் அதிகமாகிவிட்டன’ என்கிறது தாவோயிசம்.

புத்தகங்கள்தான் வாழ்வில் இருந்த எளிமையைக் களவாடிக் கொண்டுவிட்டனவா?

முற்றிலுமாக அது உண்மை இல்லை. ஆனால் புத்தகங்களில் தத்துவங்களைச் சொல்ல முற்பட்டார்கள் பாருங்கள், அப்போதுதான் எளிமை விடைபெற்றுக்கொண்டது. எல்லாப் புத்தகங்களுக்கும் இந்த உண்மை பொருந்துமா என எனக்குத் தெரியாது. ஆனால் இலக்கியங்களுக்கு இது பொருந்தும். ஏதாவது ஒன்றை நியாயப்படுத்த ‘ரேஷனலைஸ்’ செய்ய, சூத்திரம் சொல்ல, தத்துவ சிம்பு வைக்க இலக்கியத்தை பயன்படுத்த முற்படும்போது எளிமை ஒதுங்கிக் கொள்கிறது.

அப்படியானால் இலக்கியம் என்னதான் சொல்ல வேண்டும்?

புத்தரின் பிரசங்கதத்தைக் கேட்பதற்காக மக்கள் கூடினர். புத்தர் வந்தார். மேடைக்குப் போய் அமர்ந்து கொண்டார். அங்கே இருந்த ஒரு பூவைக் கையில் எடுத்துப் பார்த்தார். பக்கத்தில் இருந்த சீடன் காசியப்பனைப் பார்த்துச் சிரித்தார். கூட்டத்தைப் பார்த்து முறுவலித்தார். பூவைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்து போய்விட்டார். அவ்வளவுதான். பிரசங்கம் முடிந்துவிட்டது.

ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எப்படி பிரசங்கம் நடந்ததாகச் சொல்ல முடியும்?

வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம், ஆனால் உண்மைகளை விளக்காது. புத்தகங்கள், பாராயணங்கள், உபதேசங்கள் இவற்றின் மூலம் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. உண்மை என்பது மழையைப் போல எளிமையானது. மழையைப் பார்க்கலாம் கேட்கலாம் உணரலாம். ஆனால் அதை மொழிபெயர்க்க முடியாது என்பது ஜென்னின் அடிப்படை.

மரத்தைச் செதுக்குகிற ஒரு தச்சன் சொன்னான், ‘உளியை மரத்தின்மீது வைத்து சுத்தியலால் மெதுவாகத் தட்டினால் உளி நழுவி விழுகிறது. வேகமாக ஓங்கித் தட்டினால் உளி மரத்தில் சிக்கிக் கொள்கிறது. எவ்வளவு மெதுவாக அல்லது வேகமாகத் தட்ட வேண்டும் என்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. தானாக வேலை செய்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்’.

அனுபவங்கள் உண்மைகளைச் சொல்லும் சித்தாந்தங்கள் அல்ல என்பது ஜென் நம்பிக்கை.

ஆசி கந்தராஜாவின் ‘கீதையடி நீயெனக்கு’ குறுநாவல் தொகுதியிலுள்ள கதைகள் சித்தாந்தங்கள் அல்ல, போதனைகள் அல்ல, புனைவுகள் அல்ல. வாழ்க்கை! ஒப்பனையற்ற எளிமையான மொழியில் சொல்லப்பட்ட வாழ்க்கை. அவை வெறும் ‘கதைகள்’ அல்ல. தமிழில் கதை என்பது பொய். கற்பனை என்றும் பொருள் கொள்ளும். ‘பிள்ளைக் கதைகள் பேசுகிறாய்’ எனப் பாரதி ஓரிடத்தில் சீறுகிறான். பாரதி மட்டுமல்ல ‘என்ன கதைவிடுகிறாய்?’ எனப் பாமரன்கூட எள்ளுவதுண்டு. Fiction என்பதற்கு புனைவு என அர்த்தம் உண்டென ஆங்கிலம் அறிந்த அகராதிகள் சொல்லும். ஆனால் ஆசி.கந்தராஜா பேசுவது அவர் எதிர்கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை. அந்த வாழ்க்கையை, அவற்றின் முக மூடிகளைக் கழற்றி எறிந்து, ஒப்பனைகளை உரித்து, நிர்வாணமாக உங்கள் முன் வைக்கிறார். அதன் உண்மை, குரூரம் நம்மைத் தாக்குகிறது.

வெறுமனே வாழ்க்கையைப் படம் போட்டுக் காட்டிவிட்டு, இன்றையத் தலைமுறையின் வார்த்தைகளில் சொன்னால் ‘பிலிம் காட்டிவிட்டு’ அவர் நகர்ந்து விடுவதில்லை. அந்த வாழ்க்கை எழுப்பும் கேள்விகளையும் முன் வைக்கிறார். அவை நம்மைத் திகைக்க வைக்கின்றன.

திகைக்க வைக்கக் காரணம், அந்தக் கேள்விகள் தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிய கேள்விகள்.

அவருக்கு மாணவர்களாக அறிமுகமான மூவரைப்பற்றிய கதை ‘திரிவேணி சங்கமம்’. ஒருவன் ஆஸ்திரேலியன், ஒருவன் இரானியன், இன்னொருவன் இலங்கைத் தமிழன். தாயகம் கடந்து படிக்க வந்த இடத்தில் பாதை தப்பி அவர்கள் சிறைக்குப் போய்ச் சேருகிறார்கள். அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அவர் வைக்கும் கேள்வியை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

ஆங்கிலேயர்கள் குடும்ப உறவில் லாபநட்டக் கணக்குப் பார்ப்பதில்லை. டாக்டராகப் பணிபுரியும் பெண், ஒரு தச்சுத் தொழிலாளியைக் காதலித்து மணம் முடிப்பதும், பேராசிரியரின் மனைவி றெஸ்றோறன்றில் பணிபுரிவதும் எமது வாழ்க்கை முறையில் இயல்பானது’ என்று சொல்லும் அந்த ஆங்கிலேய சிறை அதிகாரி, அடுத்து ஓர் கேள்வி எழுப்புகிறார். ‘ராகுலன் யாரைக் காப்பாற்ற முயன்று இப்போது தண்டனை அனுபவிக்கிறானோ, அவர்கள் சாட்சி சொல்லாததும், அவனை வந்து பார்க்காததும் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கலாசாரப் பெருமை கொண்டது உங்கள் தமிழ் நாகரீகம் என அண்மையில் வாசித்து வியந்தேன். அவசர உலகத்தில் அதைத் தொலைத்து விட்டீர்களா?’

இந்தப் பாத்திரத்தின் மூலமாக கந்தராஜா அடுத்து வீசும் கைகுண்டு கணநேரமேனும் உங்களை யோசிக்கச் செய்யும்.

படகில் அகதிகளாக வந்து தடுப்பு முகாமில் எத்தனை தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது தெரியுமா? உங்களில் எத்தனை பேர் அவர்களை அகதி முகாமில் சந்தித்திருக்கிறீர்கள்? அவர்கள் எல்லோரும் வேலைவாய்ப்பைத் தேடி வந்தவர்களாக இருக்க முடியாதல்லவா? எனது பெற்றோர்களும் வேலை வாய்ப்புக்காக அயர்லாந்திலிருந்து இங்கு வந்தவர்கள்தான். ஏன் இங்கு வளமாக வாழும் உங்களிலே பலரும் அகதி அந்தஸ்துப் பெற்றவர்களாக இருக்கலாம். மனிதன் சுலபமாக மறக்கக்கற்றுக் கொண்டு சுயநலமாக வாழ முற்படுவதுதான் பிரச்சனைகளின் ஆணிவேர்’.

சுயநலங்களைப் பேணுவோருக்கு பாவனைகளும் வேண்டியிருக்கின்றன. எளிமையான வாழ்க்கையில் லாபநோக்கம் இல்லை. அதனால் அதை வாழ அதிக சாமர்த்தியம் தேவையில்லை. ஆனால் சுயநலமான வாழ்க்கை பாவனைகளில் காலூன்றி நிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் மரணித்த சின்னத்துரை வாத்தியாரின் இறுதிச் சடங்குகளைப் பின்புலமாகக் கொண்டு அவர் அங்கு வாழ்ந்த நாள்களில் எதிர்கொண்ட துன்பங்களை எடுத்துரைக்கும் கதை ‘பாவனை பேசலின்றி’. உயிரோடு வாழ்ந்தபோது அவரை இயல்பாக வாழவிடாதவர்கள் அவர் இறந்தபிறகு, தங்களது கௌரவத்திற்காக உடலிற்கு செய்யும் அலங்காரங்களையும் ‘சுள்’ எனச் சுட்டிக்காட்டும் இந்தக் கதையும் ‘கதை’ எனத் தள்ளிவிடமுடியாது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் முதியவர்களைப் பற்றிய வாழ்க்கைப் பதிவு.

கந்தராஜா எழுப்பும் கேள்விகள் உங்கள் மனசாட்சியை தட்டிப் பார்க்கும். நீங்கள் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழராக இருந்தால் இந்த வீரிய எழுத்துக்கள் உங்களை உலுக்கி எழுப்பும்.

ஆசி கந்தராஜாவின் பன்முகத்தன்மைகளை நானறிவேன். உயிரியல் விஞ்ஞானி, பல்கலைக்கழகப் பேராசிரியர், நாடகக்கலைஞர், ஒலிபரப்பாளர். எழுதித்தான் பொருளோ புகழோ சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் என் பார்வையில் அவர் விஸ்வரூபம் எடுத்து வியத்தகு மனிதராக விளங்குவது அவரது எழுத்துக்களின் மூலம்தான். காரணம் அந்த எழுத்துக்களில் ஒளிர்ந்து நிற்கும் உண்மை. உண்மையைக் காணவும் உரைக்கவும் ஓர் உரம் வேண்டும்.

தெரியாமலா சொன்னான் பாரதி…, ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’


No comments:

Post a Comment