Sunday 16 January 2022

Saturday 4 December 2021

 தினக்குரலில் வெளிவந்த வரலரற்று நாவல். முழுவடிவம்.


'அகதியின் பேர்ளின் வாசல்'

ஆசி கந்தராஜா



-1-

னத்த கனவுகளுடன் தவராசா பேர்ளினில் காலடி வைத்தபோது, எல்லாமே அவனுக்குப் பிரமிப்பாக இருந்தன. தான் வந்து சேர்ந்த இடம் கிழக்கு ஜேர்மனி என்பதோ, ஜேர்மன் நாடு கிழக்கு மேற்கென இரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததோ அவனுக்குத் தெரியாது. தவராசாவைப் பொறுத்தவரை, அவன் ஒரு வெளி நாட்டுக்கு வந்திருக்கிறான். அதுபோதும் அவனுக்கு.

தவராசா ஜேர்மனிக்கு வந்துசேர்ந்த 1982, தை மாதம், ஐந்தாம் திகதியை அவனால் மறக்க முடியாது. அதை நினைத்தால் இதயம் ஒருமுறை நின்று துடிக்கும். அன்றுதான் அவன் மேற்கு பேர்ளின் பொலீசாரால் கைது செய்யப்பட்டு, பங்கருக்குள் அடைக்கப்பட்ட நாள்!

தவராசாவை பேர்ளினுக்கு கூட்டிவந்த ஏஜென்ட், அவனுடன் மேலும் பதினைந்து பேரைக் கூட்டி வந்தான். அனைவரும் இலங்கைத் தமிழர்கள். மும்பை விமான நிலையத்தில் தவராசாவின் பறப்பில் இணைந்தவர்கள். ஒருசிலர் தவராசா படித்த பள்ளிக்கூடத்தில் முன்னுக்குப் பின்னாகப் படித்தவர்கள். படித்தவர்கள் என்றால் வகுப்பில் உட்கார்ந்திருந்தவர்கள். குழப்படிகாரர்கள் எனப் பெயரெடுத்தவர்கள். இவர்களுள் பாலனும் சந்திரனும் பற்பனும் பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே  இயக்கத்துக்குப் போன ஊரவர்கள். பின்னர் குட்டித் தாதாக்கள் போல ஊரில் வலம் வந்தவர்கள். நீண்ட காலத்தின் பின்னர், தவராசா இவர்களை மும்பை தாராவியில் கண்டிருக்கிறான். மும்பை பொலீசார் துரத்த, பருத்துத் திரண்ட உடம்பைத் தூக்கிக்கொண்டு தாராவியின் மூலை முடுக்குகளுக்குள் புகுந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு முறை சில பெண்களுடன் யாழ்ப்பாணத் தமிழில் பேசிச் சிரித்தபடி ஒரு வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டிருக்கிறான். எந்த சந்தர்ப்பத்திலும் இவர்கள் தவராசாவைத்  தெரிந்ததாகக் காட்டிக் கொண்டதில்லை.

விமானப் பறப்புக்கு நேரமிருந்தது. விமான நிலைய கழிவறைக்கு முன்னால் அனைவரும் கூட்டமாக நின்று தமிழில் பேசிக் கொண்டிருந்தார்கள். பலர் நீண்ட காலத்துக்கு முன்பே மும்பைக்கு வந்திருக்க வேண்டுமென்பது, அவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது. அனைவருக்கும் பற்பனே கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். கழிவறைக்குப் போவதற்கும் அவனிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. சந்திரனும் அவர்களுடன் கழிவறைக்குப் போய் வந்த காரணம் தெரியாது. இவர்களின் ஒவ்வொரு அசைவையும் நோட்டம் விட்டபடி பாலன் கமுக்கமாக ஒரு வாங்கில் அமர்ந்திருந்தான். தவராசா பல முறை முயன்றும் அவர்கள் அவனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால், பாலன் அமர்ந்திருந்த வாங்கின் ஒரு அந்தலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். போர்டிங் பாஸை சரிபார்த்துப் பயணிகளை உள்ளே அனுப்பும் நேரம்தான் ஏஜென்ட் செந்தில் அங்கு வந்து சேர்ந்தான். ...

Sunday 31 January 2021

 

முகவுரை

உண்மையைக் கதைக்கும் கதைகள்:

ஆசி கந்தராஜாவின் ‘கீதையடி நீயெனக்கு…!

-மாலன்- 


ன்றைய உலகில் மிகவும் கடினமானது எது?

எளிமையாக இருப்பதுதான்!

நீங்கள் வீதியில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் நடந்து பாருங்கள், அல்லது ஒரு ‘மாலில்’ திரையரங்கில், ஏன் பள்ளிக்கூடத்தில்கூட நுழைந்து பாருங்கள். ஒப்பனையற்ற முகங்களை எதிர்கொள்வது அரிது. ஒரு நாளில் நாம் கேட்கிற அலங்காரமற்ற வார்த்தைகள் எத்தனை என எண்ணிப்பாருங்கள். எளிமையாக இருப்பது கடினமானது எனத் தெரியும்.

இவ்வளவு மெனக்கிட உங்களுக்கு விருப்பமில்லையா?

ஏதாவது ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து அண்மைக்காலத்தில் வெளிவந்த பெயர் ‘வாங்கிய’ எழுத்தாளர்களது ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பத்துப் பக்கம் புரட்டிப் பாருங்கள். அங்கு நீங்கள் எதிர்கொள்கிற சொற்குவியல்களும் பாவனைகளும் எளிமையாக இருப்பது கடினம் என உங்களுக்குச் சொல்லும்.

எளிமையாக இருப்பது ஏன் கடினமாகிப் போனது?

Sunday 24 January 2021

 குறு நாவல் 1:

பாவனை பேசலன்றி

ஆசி கந்தராஜா

-1-

சின்னத்துரை வாத்தியார் சிட்னியில் நேற்றுக் காலமானார்…’ எனத் துவங்கி, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் முழக்கம், தமிழ் வானொலியின் மரண அறிவித்தல் தொடர்ந்தது.

இவர் டாக்டர் பேரம்பலத்தின் அருமைத் தந்தையும், ரெலிக்கொம் நிறுவனத்தின் நிதிக் கட்டுப்பாளரும், கணக்காளருமான அனுஷாவின் அன்பு மாமனாரும், கொழும்பின் பிரபல கண் வைத்திய நிபுணர் அமரர் பொன்னம்பலம், மற்றும் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி காயத்திரி பொன்னம்பலம் ஆகியோரின் சம்பந்தியும், காலஞ்சென்ற விசாலாட்சியின் சகோதரரும், லண்டன் இந்து, அமெரிக்கா மகேஷ், வசந்தி, தென்ஆபிரிக்கா பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் திவ்வியா, தினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்…’


உலகளாவி வேரோடிக் கிடந்த உறவுகளைப் பட்டியலிட்ட அறிவிப்பாளர், வாத்தியாரின் பூதவுடல் அவரது மகனின் இல்லத்தில் நாளையும், நகர மண்டபத்தில் மறுநாளும் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர், றுக்வூட் மயானத்தில் தகனம் செய்யப்படுமெனவும், இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறும் வாத்தியார் மகன் சார்பில், உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

சின்னத்துரை வாத்தியாரே எனக்கு எழுத்தறிவித்தவர்.

 குறுநாவல் 2:

அடிவானம்

ஆசி கந்தராஜா

 

ன்று அரசு விடுமுறை!

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இரண்டு துருவங்களாக இருந்த, கிழக்கு மேற்கு ஜேர்மனிகள் மீண்டும் ஒன்றிணைந்த நாள். அதை நினைவு கூர அன்று பொதுவிடுமுறை. விடுமுறை என்றால் சோம்பலை அடைகாத்துப் பொழுதைப் போக்குவது தான் வீரசிங்கத்தின் விருப்பம். அவருடைய விருப்பத்தைக் கடைக்குட்டி மகன் உடைத்தெறிந்தான். சமையலறையில் அவன் பிரளி செய்து கொண்டிருந்தான்.

என்னப்பா… இவனை உந்த Parkக்கு கூட்டிக்கொண்டு போய் வாருங்கோவன். அவனுக்குக் கொஞ்சம் பிராக்காக இருக்கும்.’

சமையலறை அலுமாரிக்குள் இருந்த சாமான்களை இழுத்துப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த மகனின் காதைத் திருகியவாறே மனைவி சத்தம் போட்டாள்.

 குறுநாவல் 3:

உயரப்பறக்கும் காகங்கள்

ஆசி கந்தராஜா

 

னது வீட்டுக்கு சுகுமார் வந்திருந்தான்!

நான் சிட்னியில் வாழ்ந்த பத்து வருட காலத்தில் ஒருமுறையேனும், அவன் என்னைத்தேடி என் வீட்டுக்கு வந்ததில்லை. ஈழத்து சிற்றூண்டிகள் விற்கும் உணவகம் ஒன்றிலே வாங்கிய வடை கொழுக்கட்டைப் பாசலுடன் என்னைக் காண இன்று வந்திருக்கிறான். எல்லாவற்றிலும் மேலாக நான் முற்றிலும் எதிர்பாராத சங்கதி ஒன்று என்னைத் திக்குமுக்காட வைத்தது. அதுவேறொன்றுமல்ல. அவனுடன் வந்திருந்த பெண்ணைத் தன் மனைவியென அவன் அறிமுகப்படுத்தியதே. ஆச்சரியத்தை வெளியே காட்டிக் கொள்ளாது, இன்முகத்துடன் வரவேற்று அவர்களை என் மனைவிக்கு அறிமுகம் செய்தேன். என் மனைவி யாழ்ப்பாணத்து கிராமிய விருந்தோம்பல் குணத்தை தொலைத்து விடாது வாழ்பவள். சிட்னியில் ஒரு தசாப்தகாலம் வாழ்ந்தாலும் இன்றும் ஊரில் இருந்து வரும் மெய்கண்டான் கலண்டர்படி காலத்தை ஓட்டுபவள்.

உரையாடல் மூலம் எனக்கும் சுகுமாருக்குமுள்ள நீண்டகால உறவை உணர்ந்துகொண்டு ‘வந்த நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவிக்கிறன்…’ என விருந்துக்கு அழைத்தாள். சுகுமார் மறுப்பேதும் பேசாது அவளுடைய அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். இது கூட சுகுமாரிலே ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடையாளப் படுத்துவதாகவே, நான் விளங்கிக்கொண்டேன். ஒன்றன்பின் ஒன்றாக அங்கு நடக்கும் அதிசயங்கள் அனைத்தையும் நான் வியப்புடன் உள்வாங்கிக் கொள்வதை சுகுமார் இலகுவில் புரிந்துகொண்டான். அவன் எப்போதும் ஒரு ‘Sharp‘ ஆன பேர்வழி.

 குறு நாவல் 4:

திரிவேணி சங்கமம்

ஆசி கந்தராஜா

 -1-

காரை உரிய இடத்திலே நிறுத்தினேன்.

நான் வந்திருக்கும் தகவல் அறிவிக்கப்பட்டதும், சிறைக் கதவு திறந்தது! சிறை அதிகாரி என்னை சிறைச்சாலை நூலகத்துக்கு அழைத்துச் சென்றார்.

மாதத்தின் இறுதி வெள்ளிக் கிழமைகளில், சிட்னியின் புறநகர் பகுதியிலுள்ள அந்தச் சிறைச்சாலைக்குத் தவறாது சென்று வருகிறேன். கடந்த ஒன்றரை வருடங்களாக என் மாணவன் அமீர் அங்கே தான் சிறையிருக்கிறான்.

அமீர் ஈரான் நாட்டவன். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஈரான் அரசாங்கத்தால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டவன். இங்கு அவன் தாவர இனவிருத்தி பற்றிய மரபணு மாற்ற ஆராய்ச்சி; செய்யவேண்டுமென அவன் வருவதற்கு முன்னரே, ஈரானிய அரசு தெரிவித்திருந்தது. அந்தவகையில் அமீர் எனது மேற்பார்வையின் கீழ் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இவ்வாறே அமீர் என் மாணவன் ஆனான். பல்கலைக்கழக அலுவலகத்தில், அவன் என்னைச் சந்தித்த முதல் நாள் இன்றும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. தன் மனைவி றொஸ்நாக்குடனும் இரு குழந்தைகளுடனும் வந்தவன், மூத்தது பெண் பன்னிரண்டு வயதென்றும், இளையது ஆண் ஏழு வயதென்றும் அறிமுகம் செய்தான். பாரசீகத்து பெண்களும் பாரசீகத்து கம்பளமும் உலகிலேயே மிகவும் அழகானவை என்பார்கள். உண்மைதான்! றொஸ்நாக் மிகவும் அழகாக இருந்தாள். பர்தாவால் முக்காடிட்டு, உடலை மறைத்து முழுநீள சட்டை அணிந்திருந்தாலும், அவளது பேரழகு வெளியே பளிச்சிட்டது. அமீரைக் கைகுலுக்கி வரவேற்று ஆய்வுகூடத்துக்கு அழைத்துச் சென்றேன். பிற ஆண்களின் ஸ்பரிசம் படுவதைத் தவிர்க்கும் இஸ்லாமிய கலாசாரத்தினால் றொஸ்நாக் தலைகுனிந்து, வலக்கையை தன் முகத்தருகே கொண்டுசென்று சலாம் வைத்தாள்.

 குறுநாவல் 5:

தூதர்கள்

ஆசி கந்தராஜா

-1-

டிஸ்கோ பண்டா, பேர்ளின் சுரங்கவண்டி நிலைய வாங்கொன்றில் அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் நிறை வெறியில் சில்வா!

டிஸ்கோ பண்டாவின் வாயிலிருந்தும் அல்க்ககோல் நெடி வீசியது.

அவன் போதையில் தடுமாறவில்லை. நிதானமாகவே புகையை உள்ளுக்கு இளுத்து வளையம் வளையமாக வெளியே ஊதிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரதும் வாழ்க்கை தடம்மாறி, தள்ளாட்டத்துடன் உருண்டு கொண்டிருப்பதை அவர்களுடைய தோற்றங்கள் வெளிப்படுத்தின. இருவரும் ஒரு காலத்தில் என்னுடன் படித்த கலாசாலை மாணவர்கள்.

 குறுநாவல் 6:

கீதையடி நீயெனக்கு…

ஆசி கந்தராஜா

 

மீண்டும் விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான் சந்திரன்.

சரிகைக் குஞ்சமெல்லாம் வைத்து அந்த அழைப்பிதழ் வெகு ஆடம்பரமாகவே அமைக்கப் பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தபால்காரருக்கு அந்த அழைப்பிதழ் விசித்திரமாகத் தெரியக்கூடும். அது தவறாமல் அந்த விலாசத்துக்கு போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே, தெருவோரமுள்ள தபால்பெட்டி ஒன்றிலே போடாது, வடபழனி தபால் நிலயத்துக்கு அவன் வந்திருக்கிறான்.

அவுஸ்திரேலிய தொடர் மாடிக் குடியிருப்புகளின் முன்னால் வீதி ஓரமாக, தபால் பெட்டிகள் புறாக் கூண்டுகள் போன்று அமைந்திருக்கும். வீதியில் வலம் வரும் விடலைகள் அதன் மினுமினுப்பில் கவர்ந்து அழைப்பிதழை உருவி எடுக்கலாம். இதனால் பாதுகாப்பாக அதனை வேறொரு தடித்த தபாலுறையில் வைத்திருந்தான். தபாலுறையை ஒட்ட முன்பு அழைப்பிதழை விரித்து மீண்டும் படித்துப் பார்த்தான். மணமகளின் பெயருக்கு முன்னால் அச்சடித்திருந்த ‘டாக்டர்’ என்ற பட்டத்துக்கு வந்தவுடன், நின்று நிதானித்து, அந்த எழுத்துக்களை ஒருமுறை தடவிப் பார்த்தான். இப்பொழுதெல்லாம் திருமண அழைப்பிதழில் மணமக்களின் பெயருக்கு முன்னால் பட்டங்களோ அல்லது பெயரின் கீழ் அவர்களின் தொழில் விபரங்களோ அச்சிடுவதில்லை. ஆனால் சந்திரனுக்கு மணமகளின் ‘டாக்டர்’ பட்டம் அழைப்பிதழில் அச்சிடுவது மிகமிக அவசியமாய் இருந்தது. மணமகள் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவளாம். தந்தை இல்லை. ஆரம்பத்தில், தாயுடன் ‘குயில் குப்பத்தில்’ வாழ்ந்தவள். வீட்டில் வறுமை. மாநிலத்தில் சிறந்த புள்ளிகள் பெற்றமையால் புலமைப் பரிசில்பெற்று அவள் மருத்துவம் படித்தாக, திருமண ஏஜென்சிக் குறிப்பில் இருந்தது. டொலர்களில் சம்பாதிக்கும் அவனுக்கு, அவளின் குடும்ப வறுமை ஒரு பொருட்டல்ல. அவனுக்கு தேவையாய் இருந்த தெல்லாம் அவளின் டாக்டர் பட்டமே!