Sunday 24 January 2021

 குறு நாவல் 4:

திரிவேணி சங்கமம்

ஆசி கந்தராஜா

 -1-

காரை உரிய இடத்திலே நிறுத்தினேன்.

நான் வந்திருக்கும் தகவல் அறிவிக்கப்பட்டதும், சிறைக் கதவு திறந்தது! சிறை அதிகாரி என்னை சிறைச்சாலை நூலகத்துக்கு அழைத்துச் சென்றார்.

மாதத்தின் இறுதி வெள்ளிக் கிழமைகளில், சிட்னியின் புறநகர் பகுதியிலுள்ள அந்தச் சிறைச்சாலைக்குத் தவறாது சென்று வருகிறேன். கடந்த ஒன்றரை வருடங்களாக என் மாணவன் அமீர் அங்கே தான் சிறையிருக்கிறான்.

அமீர் ஈரான் நாட்டவன். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஈரான் அரசாங்கத்தால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டவன். இங்கு அவன் தாவர இனவிருத்தி பற்றிய மரபணு மாற்ற ஆராய்ச்சி; செய்யவேண்டுமென அவன் வருவதற்கு முன்னரே, ஈரானிய அரசு தெரிவித்திருந்தது. அந்தவகையில் அமீர் எனது மேற்பார்வையின் கீழ் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இவ்வாறே அமீர் என் மாணவன் ஆனான். பல்கலைக்கழக அலுவலகத்தில், அவன் என்னைச் சந்தித்த முதல் நாள் இன்றும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. தன் மனைவி றொஸ்நாக்குடனும் இரு குழந்தைகளுடனும் வந்தவன், மூத்தது பெண் பன்னிரண்டு வயதென்றும், இளையது ஆண் ஏழு வயதென்றும் அறிமுகம் செய்தான். பாரசீகத்து பெண்களும் பாரசீகத்து கம்பளமும் உலகிலேயே மிகவும் அழகானவை என்பார்கள். உண்மைதான்! றொஸ்நாக் மிகவும் அழகாக இருந்தாள். பர்தாவால் முக்காடிட்டு, உடலை மறைத்து முழுநீள சட்டை அணிந்திருந்தாலும், அவளது பேரழகு வெளியே பளிச்சிட்டது. அமீரைக் கைகுலுக்கி வரவேற்று ஆய்வுகூடத்துக்கு அழைத்துச் சென்றேன். பிற ஆண்களின் ஸ்பரிசம் படுவதைத் தவிர்க்கும் இஸ்லாமிய கலாசாரத்தினால் றொஸ்நாக் தலைகுனிந்து, வலக்கையை தன் முகத்தருகே கொண்டுசென்று சலாம் வைத்தாள்.

அவுஸ்திரேலியாவுக்கு அமீர் வந்த காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஈரானிய அரசால் அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்படார்கள். அவர்கள் அனைவரும் மணம் முடித்த ஆண்களே. குடும்பத்துடன் வந்திருந்தார்கள். இதனால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் சேர்த்தே ஈரானிய அரசு செலவுப் பணம் வழங்கியது.

நீங்கள் எல்லோரும் குடும்பமாக இங்கு வந்தால் உங்கள் அரசுக்கு அதிக செலவாகாதா?’ என ஒரு சந்தர்ப்பத்தில் அமீரைக் கேட்க நேர்ந்தது.

பணம் அல்ல முக்கியம். அந்நிய சூழலில் எமது வாழ்க்கை முறையும் கலாசாரமும் சீர்கெடக்கூடாது என்பதுதான் எங்கள் அரசின் நோக்கம். இங்கு படிக்க வருவதற்கு கல்வித் தகமை மட்டும் போதாது. பாரசீகத்து இஸ்லாமிய கலாசாரத்தில் நல்ல அறிவும் பயிற்சியும் இருக்கிறதா எனவும் பரீட்சிப்பார்கள்’ என அமீர் விளக்கம் சொன்னான். அவனது நாட்டுப்பற்று எனக்கு மகிழ்ச்சி தந்தது.

எனது மேற்பார்வையின் கீழ் தனது ஆராய்ச்சியை ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அமீரின் விவேகம், நேர்மை, நாணயம் ஆகியன என்னைக் கவர்ந்தன. அவனை நீண்ட காலம் என் ஆராய்ச்சிக்கூடத்தில் இணைத்து வைத்திருக்க நான் விரும்பினேன்.

படிப்பு முடிந்தவுடன் உன் திட்டமென்ன? விரிவுரையின் பின் ஒரு நாள் நடந்த சம்பாஷனையில், மேலெழுந்தவாரியாகக் கேட்டேன்.

என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? எனது நாடு என்னை நம்பி இங்கு அனுப்பியிருக்கிறது. நான் திரும்பிச் சென்று ஈரானிய நாட்டின் அபிவிருத்திக்கு என் பங்களிப்பைச் செலுத்த வேண்டாமா? என எதிர்க்கேள்வி எழுப்பினான்.

உன் நேர்மை எனக்குத் தெரியும். உன்னைப்போல் எல்லோரும் இருக்க மாட்டார்கள் அல்லவா? வந்தவர்களுள் சிலர் நாடுதிரும்பாவிட்டால் என்ன நடக்கும….?’

பெறுமதியான சொத்தொன்றை நாங்கள் எங்கள் அரசுக்கு ஈடு வைத்துவிட்டே இங்கு வரவேண்டும். அந்த வகையில் எங்கள் குடும்பத்தின் பெறுமதி மிக்க பரம்பரை வீடு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. அதை எப்படி இழக்கமுடியும்?’

அமீரின் பதிலில் எப்பொழுதும் நாட்டுப்பற்றும் குடும்ப அக்கறையும் தூக்கலாகத் தொனிக்கும்.

அதிகாலை ஏழு மணிக்கே அமீர் ஆய்வுகூடம் வந்துவிடுவான். நண்பகல் ஒரு மணிக்கு மனைவி றொஸ்நாக், மதிய உணவு கொண்டுவருவாள். ஆய்வுகூடத்தினருகே ஓங்கி வளர்ந்திருந்த செரி மரத்தின் கீழ் இருவரும் அமர்ந்திருந்து உணவு உண்ணுவார்கள். மாலையில் பாடசாலையால் திரும்பிவந்த குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அதே செரி மரத்தின்கீழ் அமீருக்காக காத்திருப்பாள். அந்த நேரங்களில் பிற ஆடவரை றொஸ்நாக் நிமிர்ந்து பார்த்ததை நான் கண்டதில்லை.

குடும்பமும் ஆராய்ச்சியுமாக கடினமாக உழைத்த அமீர் பல ஆராய்ச்சி கட்டுரைகளைப் பிரசுரித்து தனக்கும், எனக்கும், பல்கலைக் கழகத்துக்கும் பெருமை தேடித்தந்தான். அவனையிட்டு நான் உண்மையிலேயே பெருமைப்பட்டேன். அப்படிப்பட்ட அமீர் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப் பட்டபோது நிம்மதியிழந்து நான் பல நாள்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

சிறை அதிகாரியும் நானும் சிறைச்சாலை நூலகத்தை ஒட்டியுள்ள சந்திப்பு அறைக்கு வந்தோம். வழமை போல அங்கு அமீர் எனக்காகக் காத்திருந்தான். சிறை அதிகாரி, ஜோசெப் மிகவும் நல்ல மனிதர். சிறை எனபது கைதிகளைத் திருத்தி, மறுசீரமைத்து, நல்லவர்களாக மாற்றும் இடம் என்பதை பரிபூரணமாக நம்புகிறவர். ஒவ்வொரு கைதியும் தண்டனைக்காலம் முடிந்த பின் சமூகத்தில் நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டுமென்று மனதார விரும்புபவர். அமீர் தனது ஆராச்சிகளை முடித்து டாக்டர் பட்டத்துக்கான கட்டுரை எழுத ஆரம்பித்த காலத்தில் சிறைக்கு வர நேர்ந்ததை ஜோசெப் அறிவார். அவன் தன் படிப்பிற்கான பட்டத்தைப் பெறவேண்டுமென்ற அக்கறையினால் ஜோசெப் எங்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். சிறை நூலகத்தில் அவனுக்காகவே ஒதுக்கப்பட்ட மூலையில், மடிக்கணனியைப் பயன்படுத்தி அமீர் தன் வேலைகளைச் செய்வான். மாதத்தின் இறுதி வெள்ளிக் கிழமைகளில் அமீரைச் சந்தித்து தரவுகளைச் சரிபார்த்து கட்டுரையை செப்பனிடும் வேலைகளுக்காகவே, சிறைச் சாலைக்கான என் இன்றைய வரவும் அமைந்தது.

 

2

டுத்தமுறை நான் சிறைச்சாலைக்கு சென்றபோது புதிய இளைஞர்கள் இருவரை ஜோசெப் அறிமுகம் செய்தார். அவர்கள் இருவரும் அந்த மாதம் தண்டனைபெற்று சிறைக்கு வந்தவர்கள். சமீபத்தில்தான் அவர்கள் ‘ரீன்ஏஜ்|’ என்னும் வளரிளம் பருவத்தைத் தாண்டியிருப்பார்கள் என பார்த்தவுடன் தெரிந்தது. ஒருவன் ஆங்கிலேய வெள்ளைக்கார இளைஞன். மற்றவன் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அவனுடைய முகத்திலே அச்சமும் சோகமும் அப்பிக்கிடந்தது.

மற்றைய கைதிகளிலிருந்து இவர்களைப் பிரித்து நூலகத்தின் அருகேயுள்ள அமீரின் அறையில் வைத்துள்ளேன். இவர்கள் வாழவேண்டிய இளம் வயதினர். சந்தர்ப்ப சூழ்நிலை இவர்களை இங்கு கொண்டுவந்துள்ளது. முடியுமென்றால் இவர்களது கல்விக்கும் உதவி செய்யுங்கள். ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பான்’ எனச் சொல்லிய ஜோசெப், இளைஞர்களுடன் நான் உரையாடுவதற்கு வசதியாக அவ்விடத்தை விட்டகர்ந்தார். நான் பிறந்த நாட்டின் சிறை அதிகாரிகளின் அடாவடித் தனங்களை நினைத்துப் பார்த்தேன். ஜோசெப் ஒரு நடமாடும் தெய்வமாகவே அப்போது எனக்குத் தோன்றினார். வெள்ளைக்கார இளைஞன் தன்னை ரோனி என அறிமுகப்படுத்திய பின்னர் மௌனமாக இருந்தான். ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அங்கு அமைதி நிலவியது. மரியாதையின் நிமிர்த்தம் நானும் மேலதிக விபரம் எதையும் கேட்கவில்லை. அவர்களாகவே வாய் திறக்கட்டுமெனக் காத்திருந்தேன். நிசப்தத்தை கலைத்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. கிறீஸ்தவ மதபோதகர் ரோனியை சந்திக்க வந்திருப்பதாகத் தகவல் வரவே அவன் பார்வையாளர் சந்திக்கும் இடத்துக்கு சென்றுவிட்டான். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி மற்றவன் பேசத் துவங்கினான்.

சேர், நீங்கள் இலங்கைத் தமிழரென அமீர் சொன்னான். நானும் இலங்கைத் தமிழன்தான். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன்…’ பேச்சைத் தொடர விடாது விம்மல் தடுத்தது.

அவன் பேசிய ஆங்கில ‘மொழி நடை’ அவன் சமீபத்தில் அவுஸ்திரேலியா வந்தவனல்ல என்பதைக் காட்டியது. தண்டனைக் கைதியாகச் அந்தச்சிறைக்கு வந்து சில நாட்களேயான அவனது உணர்ச்சிகளை நான் புரிந்துகொண்டேன். மேசைமேல் இருந்த ரிசூப் பேப்பரால் அவனது கண்ணீரை துடைத்தபடி ‘உன் பெயரென்ன?’ எனக்கேட்டேன். தன்னைத் தொட்டு நான் கண்ணீரைத் துடைத்ததை அவன் எதிர் பார்க்கவில்லை. எனது பரிவு அவனுள் ஒருவகை நட்புரீதியான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என் விரல்களைத் தன் இரு கரங்களாலும் இறுகப்பிடித்தபடி தமிழில் தன் கதையை சொல்லத் துவங்கினான்.

என் பெயர் ராகுலன். மூதூருக்குக்கிட்ட உள்ள தம்பலகாமத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவுக்கு தம்பலகாமத்தில் அதிகமான நெல் வயல்கள் இருந்தன. தம்பலகாமத்தின் வயல் விதானையும் அவர்தான். பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. படிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தால் அப்பா என்னை திருகோணமலையிலுள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

கல்லூரி விடுதியிலேயே தங்கிப்படித்தேன். படிப்பும், விடுமுறைக்கு வீடுமென மகிழ்ச்சியாக வாழ்ந்த காலமது. பத்தாம் வகுப்பில் எல்லாப்பாடத்திலும் அதிவிசேட சித்திகள் பெற்றேன். தம்பலகாமமே என்னைக்கொண்டாடியது. உள்ளூர் பத்திகையில் என் படத்துடன் செய்தியும் வெளிவந்தது. பதினொராம் வகுப்பு முடிந்து நான் பன்னிரண்டாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் எங்கள் வீட்டிலே அந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்குமேல் ராகுலனால் பேசமுடியவில்லை. நிலத்தைப் பார்த்தவாறு அமைதியாக இருந்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. எனக்காக அங்கு வைக்கப்பட்ட தண்ணீர் போத்தலை திறந்து அவன்முன் வைத்தேன். தன் வரைபடங்களுக்கு விளக்கம்கேட்டு இடையில் அமீர் வந்துபோனான். சடுதியாக போத்தல் தண்ணீர் முழுவதையும் ஒரேமூச்சில் குடித்த ராகுலன்

உங்களை நான் ‘அங்கிள்’ என கூப்பிடலாமா…?’ எனக் கேட்டான். ‘தாராளமாக அழைக்கலாம். என்னால் முடிந்த உதவிகளை உனக்கு நிச்சயம் செய்வேன். ஆட்சேபனை இல்லையென்றால் உன்னைப்பற்றி நான் முழுவதும் அறிந்துகொள்ளலாமா…?’

நீரில் தத்தளித்த ஒருவனுக்கு எதிர்பாராத விதமாக ஒரு மரக்கட்டை கிடைத்த மனோநிலையில் ராகுலன் தன் கதையைத் தொடர்ந்தான்.

வடக்கு மாகாணத்தைப் போலவே கிழக்கு மாகாணத்திலும் பல போராளிக் குழுக்கள் இயங்கி வந்தன. பெருந்தொகையான பணம் கேட்டு ஒரு போராளிக் குழு என் அப்பாவிடம் வந்தது. அது அறுவடைக்கான காலம். போராளிக் குழு கேட்ட தொகையை அப்பாவால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் ஒரு காலக்கெடு வைத்தார்கள். காலக்கெடு முடிந்த பின் பணம் கேட்டு வீட்டுக்கு வந்தவர்கள் தகராறு செய்யவே அப்பா கோபத்தில் அவருடைய வேட்டைத் துவக்கை எடுத்தாராம். அங்கிருந்து சென்றவர்கள் அடுத்தநாள் அதிகாலை மூன்று மணிக்கு மீண்டும் வந்தார்கள்…!’ வாக்கியத்தை முடிக்காமல் ராகுலன் அழுதான்.

அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. ராகுலன் அமைதியடையட்டும் என அமீரிடம் சென்று அவனது தரவுகளைச் சரிபார்த்தேன். மீண்டும் வந்தமர்ந்தவுடன் ராகுலன் தானாகவே தொடர்ந்தான்.

வீடு எரிக்கப்பட்டு, அப்பா அம்மா இரண்டுபேருமே கொலை செய்யப்பட்ட நிலையிலும் ஆசிரியர்களின் உதவியினால் தொடர்ந்து படித்து அந்த வருட பல்கலைக்கழக புகுமுக பரீட்சையில் கிழக்கு மாகாணத்திலேயே முதல் மாணவனாகச் சித்தியடைந்தேன். எனது பரீட்சைப் பெறுபேறுகள் பற்றியும் எனது பின்னணி பற்றியும் திருகோணமலை நிருபர் கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் புகைப் படங்களுடன் ஒரு செய்திக் கட்டுரை எழுதியிருந்தார். என் அதிஷ;டம் அது அவுஸ்திரேலிய ஸ்தானிகராலய அதிகாரி களின் கவனத்துக்குச் சென்றிருக்க வேண்டும். ஓர் அதிகாரி நான் படித்த பாடசாலை அதிபரூடாக என்னைத் தொடர்பு கொண்டார். கொழும்பிலேயே அகதி அந்தஸ்துடன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்;களே பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அநுமதியும் பெற்றுத் தந்தார்கள்.’

இவற்றைச் சொல்லும்போது ராகுலனின் உடம்பு நடுங்குவதை அவதானித்தேன். அளவுக்கதிகமான உணர்ச்சி வசப்படுதலின் வெளிப்பாடே அது. அவனைச் சகஜ நிலைக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் நான் உரையாடலில் குறுக்கிட்டேன்.

தமிழிலே பன்னிரண்டாம் வகுப்பை படித்திருப்பாய். இங்கு வந்து ஆங்கிலத்தில் மருத்துவம் படிக்க மொழிச் சிக்கல் இருக்கவில்லையா..?’

ஆங்கில அறிவு போதாதென கொழும்பிலேயே கணித்திருந்தார்கள். இதனால் ஒருவருட தீவிர ஆங்கில மொழிப்பயிற்சியின் பின் மருத்துவ கல்லூரிக்கு சென்றேன். படிக்கும்போது ‘யுத் அலவன்ஸ்’ எனப்படும் கொடுப்பனவு களையும் ஸ்தானிகராலயமே ஒழுங்கு செய்திருந்தது.’

மருத்துவக் கல்லூரியில் எதத்தனை வருடம் படித்தாய்?’

மூன்று வருடங்கள்’ என்றவன் இரு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி விம்மினான். அவனின் உடம்பு வேர்த்தது. எழுந்து அவன் பக்கம் சென்று, ஒருகையால் அவனை அணைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தேன். அவனாகச் சொல்லாமல் மேலும் விபரம் கேட்க நான் விரும்பவில்லை. கைதிகளைத் தொடுவதும் தண்ணீர் கொடுப்பதும் சிறைச்சாலை விதிகளுக்கு முரண்பட்டவை. எனவே ராகுலனுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் கல்வி சம்பந்தமான விடயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அமீர் தனது வரைபடங்களை முடித்திருந்தான். அவை புதிய பல விஞ்ஞான தகவல்களைத் தந்ததில் நாம் மகிழ்ந்தோம். மதபோதகரைச் சந்திக்கச் சென்ற ரோனியும் நூலகத்துக்கு திரும்பியிருந்தான். ரோனியின் முகம் இப்பொழுது அமைதியாகக் காணப்பட்டது.

 

3

ல்கலைக்கழக முகவரிக்கு ஜோசெப்பிடமிருந்து ஒரு மின் அஞ்சல் வந்திருந்தது. அதன் வாசகம் இதுதான்: ‘ரோனி பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். இரவில் அவன் நித்திரை கொள்வதில்லை என சிறை வாடன்களின் குறிப்பு சொல்கிறது. குற்ற உணர்வினால் அவன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவனது கவனத்தை வேறு திசையில் திருப்புவது அவசியமென்றும், மனோதத்துவ நிபுணர் சொல்லியுள்ளார். முடிந்தால் சிரமம் பாராது என்னைச் சந்திக்க முடியுமா? வேலை நாட்களில் கஷ்டமென்றால் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் சந்திக்கத் தயாராக உள்ளேன். பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.’

அடுத்த சனிக்கிழமை சிறைச்சாலை அலுவலகத்தில் ஜோசெப்பைச் சந்தித்தேன். பரஸ்பர குசலம் விசாரிப்புக்கு பின் நேரடியாகவே விடயத்துக்கு வந்தார்.

ரோனி பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதிமுடித்த பின்னர் நடந்த சம்பவம் ஒன்றினால் சிறைச்சாலைக்கு வந்தவன். சொன்னால் நம்பமாட்டீர்கள், சமீபத்தில் வெளிவந்த பரீட்சை பெறுபேறுகளின்படி நூற்றுக்கு 99.6 ருயுஐ புள்ளிகள் பெற்றுள்ளான். இதுபற்றி இன்னமும் நான் அவனுக்குச் சொல்லவில்லை. சென்ற வாரம் இவனது காதலியின் இளைய சகோதரி ரோனியைக் காண வந்துள்ளாள். ஆதன்பின்பு ரோனி பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்குறிப்பு சொல்கிறது. இந்த விடயத்தில் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.’

சுங்கானிலே கிடந்த சாம்பலை அதற்குரிய கிண்ணத்தில் கொட்டி, அதனைச் சுத்தப் படுத்தியவாறே ஜோசெப் எனது பதிலுக்காக காத்திருந்தார். ஒரு சிறை அதிகாரி கைதிகள் மீது இந்தளவுக்குக் கரிசனை கொள்வது தொழிற் கடமையல்ல. கைதிகளுடைய நலன் குறித்த அவருடைய அக்கறை என்னை நெகிழச் செய்தது.

உங்கள் உணர்வில் சிறிதளவேனும் எனக்கு இருக்க வேண்டாமா? ரோனியின் படிப்பு விடயத்தில் என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்’ என அவருக்கு வாக்கு கொடுத்தேன்.

ஜோசெப் இன்ரகொம் மூலமாக சிறை வாடன்களுக்கு தகவல் கொடுத்து ரோனியை வரவழைத்தார். நாங்கள் பேசுவதற்கு வசதியாக எங்களைத் தனியே விட்டு, தனது சுங்கானில் புதிதாக புகையிலையை நிரப்பியவாறு அவ்விடத்தை விட்டகர்ந்தார். என் முன்னால் கதிரை நுணியில் ரோனி அமர்ந்திருந்தான்.

சௌக்கியமாக இருக்கிறாயா? ஜோசெப் உனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். உன்னைப்பற்றிய சில விபரங்களை நான் அறிந்து கொள்ளலாமா?’ என உரையாடலை ஆரம்பித்து வைத்தேன்.

என்னைப்பற்றி என்ன சொல்வது?’ பக்க வாதத்தால் படுக்கையில் இருக்கும் எனது தாய்க்கு நான் ஒரேபிள்ளை. தந்தை இல்லை. இதற்கு மேல் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.’

நீ எதுவரை படித்திருக்கிறாய்…?’ மேலும் தகவல் பெற ஏதுவாக இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

பன்னிரண்டாம் வகுப்புவரை. பரீட்சை முடிந்து பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தபோதுதான் என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்தச் சம்பவம் நடந்தது’.

ரோனி அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை. மேசை மேலிருந்த துண்டுப் பேப்பரில் ஜோசெப்பின் பென்சிலால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் வரையத் தொடங்கினான். அவன் வரைந்த சிக்கலான கோடுகள், மன அழுத்தத்தின் ஒருவகை வெளிப்பாடே. திடீரென தான் வரைந்த சில கோடுகளை கூந்தலாக உருவகித்து ஒரு பெண்ணின் முகத்தை வரையத் துவங்கினான். அவன் கீறி முடியும் வரை காத்திருந்த நான், ‘இது யார், உன் காதலியா…?’ எனக்கேட்டேன்.

கண்கள் கலங்கிய நிலையில் என்னை நிமிர்ந்து பார்த்தான், முதன்முறையாக என் முன் அழுவதுபோல…, கரை உடைந்தது!

ராகுலனைத் தேற்றியது போல ரோனியை தொடுவதோ அணைப்பதோ முறையல்ல. இது வெள்ளைக்கார அவுஸ்திரேலியர்களின் நடைமுறை வழக்கமுமல்ல. ரோனிக்கு தெம்பைத்தரும் வகையில் கனிவுடன் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தன் கண்ணீரைத் துடைத்தபடி தொடர்ந்தான்.

சொறி சேர், உங்களை அசௌகரியத்துக்கு ஆளாக்கியிருந்தால் என்னை மன்னியுங்கள’|.

அப்படி எதுவுமில்லை. உனக்கு உதவுவதற்காகவே இங்கு வந்துள்ளேன். தொடர்ந்து சொல்’ என அவனுக்கு நம்பிக்கை ஊட்டினேன்.

மேரி என்னுடன் படித்தவள். நாங்கள் இருவரும் மனதாரக் காதலித்தோம். எங்கள் காதலை இருபகுதி பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். பரீட்சை முடிந்த பின் இருவரும் மகிழ்ச்சியுடன் சுற்றித்திரிந்தோம். விடுமுறையில் மேரி ஒரு கோப்பிக் கடையில் வேலை செய்தாள். நான் ‘சுப்பமாக்கற்’ ஒன்றில் பணிபுரிந்தேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் ஒழுங்கு செய்திருந்த டிஸ்கோ விருந்துக்கு அன்று போகத் தீர்மானித்திருந்தோம். எதிர்பாராத வகையில் மேரி அன்று சில மணித்தியாலங்கள் மேலதிகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. டிஸ்கோவுக்கு பிந்தி போக விரும்பாத மேரி, விருந்துக்கான ஆடையுடன் தனது காரை எடுத்துக்கொண்டு கோப்பிக் கடைக்கு வருமாறு சொன்னாள். ஆனால் என்னிடமிருந்ததோ ‘எல்’ லைசென்ஸ்…’

இந்த இடத்தில் நிறுத்தி குற்ற உணர்வுடன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நான் எதுவும் பேசாது அமைதியாக இருந்தேன். அவனாகவே மீண்டும் தொடர்ந்தான்.

மேரியும் நானும் ஒன்றாகவே ஓட்டுநர் பரீட்சைக்குச் சென்றோம். செய்முறைப்பரீட்சையின் போது திருப்ப மொன்றில் சிக்னல் போடவில்லை என்பதைக் காரணம் காட்டி மீண்டும் பரீட்சை செய்ய இரு வாரங்களின் பின் நேரம் ஒதுக்கினார்கள். நான் சித்தியடையாததை, எனது பயிற்றுனராற்கூட நம்ப முடியவில்லை.தன்னிலும் பார்க்க நன்றாகவும் நிதானமாகவும் வண்டி ஓட்டுவதாக மேரி அடிக்கடி சொல்வாள். ஓருவகையில் உண்மையும் அதுதான். அந்தத் தைரியத்தில் தான் காரை எடுத்துக்கொண்டு கோப்பிக் கடைக்குச் சென்றேன். மேரி நீண்ட நேரம் வேலை செய்ததால் மிகவும் களைத்திருந்தாள். ஏதொ ஒரு வகை அசட்டுத் தைரியத்தில் தொடர்ந்தும் நானே கார் ஒட்டினேன்.’

ரோனி சடுதியாக நிறுத்தினான். மௌனமாக யன்னலுக்கு வெளியே வெகு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியாத நிலையில் அவன் தயங்குவதாகத் தோன்றியது. தொடர்ந்து பேசுவதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘உம்’ சேர்த்தேன்.

சிறிது தூரம் சென்றிருப்போம். மேரி என்னை இறுக அணைத்து முத்தம் கொடுத்தாள். உணர்ச்சியில் தடுமாறிய நான் எதிரேவந்த லொறியுடன் மோதினேன். மேரி இருந்த பக்கத்தில் லொரி மோதியதால் எனது உயிரிலும் மேலான அவளின் உயிர் அந்த இடத்திலேயே போய்விட்டது. ஆனால் நான் பாவி… இன்னமும் உயிருடன் இருக்கிறேன்.’

கண்களிருந்து தொடர்ந்து வழியும் கண்ணீரை துடைக்கக்கூட சக்தியற்றவனாக, ரோனி பிரமை பிடித்தவனைப் போல அமர்ந்திருந்தான்.

அவனை எப்படி தேற்றுவது என்று தெரியாத நிலையில் ‘என்ன நடந்தது என்பதை நீதி மன்றத்தில் சொன்னாயா?’ எனக் கேட்டேன்.

சேர், நான் செய்தது குற்றம். அதை நியாயப்படுத்தக் கூடாது. அதற்குரிய தண்டனையை நான் அனுபவிக்க வேண்டும். எனது உயிருக்குயிரான மேரியே போய்விட்டாள். அவளைக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. செய்த குற்றத்தை நான் ஒத்துக் கொண்டேன். மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை தந்திருக்கிறார்கள்.’

ரோனி இதனைச் சொல்லி முடிக்கவும் ஜோசெப் தனது அலுவலகத்துள் நுழையவும் சரியாக இருந்தது. ரோனியின் படிப்பைப்பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமல்ல என்பது எனக்குத் தெரியும். ஜோசெப்பும் அது பற்றிக் கேட்கவில்லை. அதன் பின் பொதுவான பல விடையங்களைக் கதைத்தபின் மீண்டும் சந்திக்கிறேன் என ரோனிக்கு கூறி, இருவரிடமிருந்தும் விடை பெற்றேன்.

 

4

மீரின் மனைவி றொஸ்நாக், ஈராக்-ஈரான் எல்லையோரம் இருந்த பிரதேசத்தில் பிறந்தவள். அவள் பாரசீக அராபிய கலப்பின சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவள். இவர்கள் தனி இனமாகக் கருதப்படுகிறார்கள். இதனால் இவர்கள் ஈரானிய பாரசீகர்களுடன் சேர முடியாமலும் ஈராக்கிய அராபியர்களுடன் வாழ முடியாமலும் தனித்து விடப் பட்டவர்கள். ஈரான் ஈராக் யுத்தத்தின் போது றொஸ்நாக்கின் குடும்பம் பாதிக்கப் பட்டதால் அவர்கள் தலைநகர் தேரானுக்கு இடம் பெயர்ந்ததாக ஒருமுறை அமீர் சொல்லியிருக்கிறான். பாரசீக அராபிய கலப்பு. பதின் பருவ வயது. றொஸ்நாக் தேரான் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த முதல் வருஷமே அழகு ராணிப் போட்டி ஒன்றில் பேரழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவளின் அழகில் மயங்கி அமீர் காதலித்தான். அமீரின் பெற்றோர் பாரசீக பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக பெருவாரியான சொத்துக்கள் ஈரானில் உண்டு. தன் மகனுக்காக வளைகுடா நாடுகளின் வழக்கப்படி பெண் கேட்டு, தன் குடும்பத்துக்கு எந்த வகையிலும் ஒவ்வாத ஒரு கலப்பின குடும்பத்திடம் செல்ல அமிரின் தந்தை மறுத்துவிட்டார். இந்த விடையத்தில் அமீர் உறுதியாக நின்றதால், தன் ஒரே மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஷஅமீர் றொஸ்நாக்,  திருமணத்துக்கு அவர் அரைகுறை மனதுடன் ஒத்துக்கொண்டார். அமீர் இங்கு படிக்க வந்த காலத்தில், ஒரு வருட பட்டப் பின்படிப்பை அவுஸ்திரேலியாவில் முடித்தவர்கள் தொழில் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பெருவாரியான வெளிநாட்டு மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொண்டார்கள். இதுபற்றி அமீர் என்னிடம் ஒருமுறை கேட்டான். தன் மனைவி அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்க விரும்புவதாகவும் அதற்காக பட்டப் பின்படிப்பை (Post graduate) படிக்க கேட்பதாகவும் சொல்லிக் குறைப்பட்ட அமீர், இதுபற்றித் தன் மனைவியுடன் பேசுமாறும் கேட்டுக்கொண்டான்.

அமீர், இதை நீ மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்! நீயும் உனது குடும்பமும் இங்கு நிரந்தரமாக தங்குவது பற்றிய உன் அபிப்பிரயமென்ன…?’

சேர், எனது குடும்பம் மிகவும் பாரம்பரியம் மிக்கது. பல தலைமுறைகளுக்குத் தேவையான சொத்தும், வாழ்க்கை வசதிகளும் எமக்கு தேரானில் உண்டு. எனது நாடும் குடும்பமும் எனக்காக காத்திருக்கிறது..? நான் எதற்காக இங்கு வாழவேண்டும்…?’

பின் எதற்காக உன் மனைவி ஆசைப்படுகிறாள்?’

இங்குள்ள ஆடம்பர வாழ்வும் அளவுக்கதிகமான பெண்கள் சுதந்திரமுமே இதற்கான காரணிகளாக இருக்கலாம்’ என்று சொன்னவன், அவனாகவே மேற்கொண்டு இதுபற்றிப் பேச விரும்பாதவனாக ஆய்வு கூடத்துக்கு சென்றான். இது பற்றி றொஸ்நாக்குடன் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அதற்குள் அவளாகவே, அமீருக்குத் தெரியாமல் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து அனுமதியும் பெற்றுவிட்டாள் என அறிந்தேன். இதற்கு மேல் நான் இதில் தலையிடுவது நாகரிகமில்ல என உணர்ந்து அமைதியானேன்.

றொஸ்நாக் ஒரு வருட Post graduate படிப்பைத் தொடர்ந்தாள். அவளது கற்கை நெறியில் சில விரிவுரைகளை நான் நிகழ்த்தினேன். அப்பொழுதெல்லாம் என்னுடன் பேசுவதை வெகு தந்திரமாக தவிர்த்துக் கொண்டாள். றொஸ்நாக்கின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கின. நண்பர்கள் சேர்ந்தார்கள். பெண்ணியம் பேசுபவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். பர்தா அணியாமல் வெளியே வரத் துவங்கினாள். பின்னர் மயிரைக் குட்டையாக வெட்டி, நிறமடித்து வெள்ளைக்கார குட்டிகள் போல உலாவரத் துவங்கினாள். காலப்போக்கில் றொஸ்நாக்கைப் பற்றிப் பல்வேறுகதைகள் ‘கிசுகிசு’க்கப்பட்டன. ‘தூய பாரசீக ரத்தத்துடன் வந்திருந்தால் இப்படிச் செய்யாள்|’ என மற்றைய ஈரானியப் பெண்கள் குசுகுசுக்கவும் செய்தார்கள். றொஸ்நாக் இவை பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. பாரசீக அராபிய அழகின் கலவையுடன், அவுஸ்திரேலிய மேலைத்தேச நாகரீகமும் உடையும் சேர அவள் பல்கலைக் கழகத்தில் தேவதை போலப் பவனி வந்தாள். அவளைச் சுற்றி இள வட்டங்கள் வயது வித்தியாசமில்லாமல் மொய்த்தார்கள். உண்மையைச் சொன்னால் அவள் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் என்பதை அப்போது யாரும் நம்பமாட்டார்கள்.

அமீர் முற்றிலும் உடைந்து போனான். ஆய்வுகூடப் பணிகளிலும் தடுமாறினான். எதை நம்புவது எதை விடுவது என்ற நிலையில் அவனையிட்டு நான் மிகவும் கவலைப் பட்டேன். அமீர் இப்போது யாரிடமும் பேசுவதில்லை. என்னுடன் பேசுவதையும் வெகுவாக குறைத்துக் கொண்டான். வீட்டில் அவள் அமீரை மதிப்பதில்லை என்றும், அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதாகவும் அருகில் வசிக்கும் மற்ற ஈரானிய மாணவர்கள், அவன்மீதுகொண்ட அக்கறை தொனிக்கச் சொன்னார்கள். அமீரும் மிகவும் அழகானவன். றொஸ்நாக்கிற்கு மிகவும் பொருத்தமானவன். இருப்பினும் றொஸ்நாக்கின் பாதை ஏன் தடம் மாறியது…? சூழலா, சுதந்திரமா, பெண் விடுதலை பற்றி அக்கறை கொண்ட பெண்ணியம் பேசும் நண்பர் கூட்டமா…? இவற்றுள் எது அவளில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது…? அமீர் மீது நான் அக்கறை கொண்ட காரணத்தினால் என் இயல்பையும் மீறிய தோரணையில் என் மனம் சிந்திக்கலாயிற்று. அமீருடன் படிக்க வந்த ஈரானிய மாணவன் ஒருவன், அமீரின் குடும்ப விஷயம் பற்றி பேசுவதற்காக அன்றொருநாள் என் அலுவலகம் வந்திருந்தான்.

நாங்கள் பாரசீகர்கள், எங்களுக்கென்று தனித்துவ கலாசாரம் உண்டு. என்னதான் நாங்கள் தலை கீழாக நின்றாலும் வெள்ளையர்களாக மாறப்போவதில்லை. பல்லினபல் கலாசாரத்தை ஏற்றுக்கொண்ட நாடு அவுஸ்திரேலியா. புலம் பெயர்ந்த நாட்டில் ஒரு இனத்தின் கலாசார மாற்றமென்பது இரவோடு இரவாக, ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று முடியக்கூடியதல்ல. இது சுற்றம் சூழல் என பலரையும் பாதிக்கக்கூடிய விஷயம். பெண்ணியம் பேசுபவர்கள் தங்கள் மட்டத்திலிருந்து பார்க்காமல் அமீரைப் பற்றியும் சிறிது சிந்திக்க வேண்டும். அமீருக்கு வசதியான வாழ்வொன்று ஈரானில் காத்திருக்கிறது. றொஸ்நாக்கிற்காக தந்தையையே எதிர்த்து நின்றவன் அமீர். ஆரம்பத்தில் இது பற்றி றொஸ்நாக்குடன் நாம் பேசினாலும், இப்போது அவள் எம் பேச்சைக் கேட்கும் நிலையில் இல்லை. அமீரின் குடும்ப நலன் கருதி அவளுடன் ஒருமுறை பேசிப் பாருங்களேன்’ என வேண்டுகோள் வைத்தான். றொஸ்நாக்குடன் பேசுவதற்கு பல முறை நான் முயன்றும் அவள் என்னைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தாள். அவள் இப்போது பழைய றொஸ்நாக் இல்லை. விரிவுரைகளின் முடிவில் நான் வலிந்து பேச முயன்றால், பேராசிரியரின் ‘Harassment’ என்ற குற்றச்சாட்டு என்மீது சுமத்தப் படக்கூடிய வாய்ப்பும் உண்டு. சென்ற வருடம் இப்படியானதொரு சூழ்நிலையில் அது ஊடகங்களால் பெரிது படுத்தப்பட்டு, என்னுடன் பணி புரிந்த சகா ஒருவன் சிக்கலில் மாட்டிக் கொண்டான். அமீர் குடும்பத்தை இணைத்து வைக்க முடியாத அவல நிலமையை எண்ணி என்னையே நான் நொந்துகொண்டேன். குடும்ப பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமீர் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் தேவையான பரிசோதனைகளை முடித்திருந்தது எனக்கு ஆறுதல் தந்தது. இனி தரவுகளைக் கணித்து கட்டுரை எழுதி முடிக்க வேண்டியதுதான். இந்த நேரத்திலே தான் அது நடந்தது!

றொஸ்நாக் கர்ப்பமடைந்தாள். கருத்தரித்து ஆறுமாதங்களின் பின்பே இது அமீருக்கு தெரியுமென்று சக ஈரானியர்கள் பேசிக் கொண்டார்கள். றொஸ்நாக் கர்ப்பமடைந்தது பற்றி பல வதந்திகள் உலாவின. சட்டக் கல்லூரியில் பட்டப் பின்படிப்புபடித்த அவுஸ்திரேலிய வெள்ளையன் ஒருவனுடன் றொஸ்நாக் சுற்றித் திரிந்ததை நான் கண்டிருக்கிறேன். வயிற்றில் வளரும் குழந்தை அவனதே என ஈரானியர்கள் சத்தியம் செய்யவும் தயாராக இருந்தார்கள். அதற்குப் பின்பு அமீர் ஆய்வு கூடத்துக்கு வரவில்லை. இருப்பினும் அவனது தரவுகளைச் சரி பார்த்து எனது கணினியில் சேமித்துக் கொண்டேன். அந்தக் காலகட்டத்தில், ஈரானிய மதகுரு ஓருவர் அவுஸ்திரேலியா வந்திருந்தார். அவர் முன் அமீரின் குடும்பப் பிரச்சனை, சக ஈரானிய நண்பர்களால் கொண்டு செல்லப்பட்டது. ‘தான் இனி மத ஒழுக்கப்படி வாழ்வதாகவும், வயிற்றில் வளரும் குழந்தை அமீரது’ என்று றொஸ்நாக் சத்தியம் செய்ததாகவும் அறிந்து, நான் மனதார சந்தோசமடைந்தேன். ஆராய்ச்சிக் கட்டுரை எழுதத் தேவையான தரவுகளைப் பெற, அமீர் என்னிடம் வருவானென காத்திருந்தேன். அவன் வரவில்லை. ஆனால், ஈரானிய மாணவன் ஒருவன் றொஸ்நாக் பற்றிப் புதிய தகவலுடன் வந்தான். காதலனின் சாயலில், தூய செம்பட்டை (Blond) நிற மயிருடன் றொஸ்நாக் நேற்று ஓர் ஆண்குழந்தையைப் பெற்றுள்ளதாக சொன்னான். ஈரானிய மாணவன் ஆய்வு கூடத்தில் நிற்கும் போதே, அங்கு எமது அலுவலக செயலாளர் அவசர அவசரமாக வந்தாள். உள்ளூர் பொலீஸ் நிலையத்திலிருந்து விவசாய பீட அலுவலகத்துக்கு தொலை பேசி அழைப்பு வந்ததாகவும் அமீர் விடயமாகப் பேச என்னை உடனடியாக பொலீஸ் நிலையத்துக்கு வரமுடியுமா எனக் கேட்டதாகவும் சொன்னாள். ஈரானிய மாணவனையும் அழைத்துக் கொண்டு உடனே பொலீஸ் நிலையம் சென்றேன். நிலைய வாசலில் சட்டக் கல்லூரி மாணவனான றொஸ்நாக்கின் வெள்ளைக்கார நண்பன் சிகரெட் புகைத்தபடி உலாத்தினான். பொலீஸ் நிலையத்தின் உள்ளே கை விலங்குடன் அமீர் அமர்ந்திருந்தான். அவனது உடை எங்கும் திட்டுத் திட்டாக இரத்தம் படிந்திருந்தது. உற்றுப் பார்த்தேன். அவனது உடலில் சிறு, சிறு கீறல்களே இருந்தன. பாரிய காயம் எதுவுமில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஒரளவு ஊகிக்க முடிந்தது! அன்று காலை றொஸ்நாக்கையும் குழந்தையையும் பார்க்க அமீர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறான். அப்போது றொஸ்நாக்கின் வெள்ளைக்கார நண்பனும் வந்திருக்கிறான். அங்கு வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி பூவாஸால் றொஸ்நாக்கை தாக்கியிருக்கிறான். அவளின் மண்டை உடைந்து, வலது கை சுட்டு விரலும் முறிந்து விட்டது. அமீர் எனக்கு விபரம் தெரிவிக்கும்படி சொன்னதன் பேரில் என்னை அழைத்ததாக பொலீஸ் உத்தியோகத்தர் சொன்னார். றொஸ்நாக்கின் வெள்ளைக்கார நண்பன், அமீர் தன்னைத் தரக்குறைவாகப் பேசித் தாக்க வந்ததாகவும், றொஸ்நாக்கை அடித்து படுகாயமேற்படுத்தி கொலை செய்ய முயன்றதாகவும், வைத்திய சாலையின் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும், தனக்குத் தெரிந்த சட்டப்பிரிவுகள் எல்லாவற்றையும் துணைக்கு இழுத்து வழக்குப் பதிவு செய்திருந்தான். கண்கண்ட சாட்சிகளாக மருத்துவமனை ஊழியர்களின் பெயர்கள் முறைப்பாட்டில் குறிக்கப்பட்டிருந்தன. இக்குற்றச்சாட்டுகளிலிருந்து அமீர் சுலபமாகத் தப்புதல் சிரமம் என்பதை விளங்கிக்கொண்டேன். அமீர் என்னை பொலீஸ் நிலையத்துக்கு அழைக்கும்படி சொல்லியிருந்த போதிலும், அவன் என்னுடன் பேசும் நியையிலில்லை. என்னுடன் வந்த ஈரானிய மாணவனை நேர்கொள்ள அமீர் சங்கடப் பட்டான். நீதிபதி முன் ஆஜர் படுத்தும்போது, நான் பிணை கொடுப்பதாகவும், வழக்குரைஞர் ஒருவரை அமர்த்துவதாகவும் வாக்களித்தேன். பின்னர் அவனுக்கு ஆறுதல் சொல்லி அலுவலகம் திரும்பினேன். இரண்டு மணித்தியாலங்களின் பின் பொலீஸ் உத்தியோகத்தர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். தனக்கும் தனது குழந்தைக்கும் அமீரால் உயிராபத்து இருப்பதாக றொஸ்நாக் மேலதிக முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருப்பதால் அமீரை பிணையில்விட ஏலாத நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இவை எல்லாம் றொஸ்நாக்கின் வெள்ளைக்கார நண்பனின் கைங்கரியம் என்பது எனக்குத்தெரியும். றொஸ்நாக்கின் நண்பன் எனது பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவனுடன் பேசுவது அவுஸ்திரேலிய நீதி அமைப்பின் கீழ் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நல்லதொரு வழக்குரைஞரை ஒழுங்கு செய்து ஈரானிய தூதுவராலயத்துக்கும் அறிவித்த பின் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு வரட்டுமென்று காத்திருந்தேன்.

 

5

ழத்தமிழன் என்ற காரணத்தினாலோ என்னவோ, ராகுலன் என்னை முழுமையாக நம்பி, பாசமுடன் பழகலானான். சந்தர்ப்பங்கள் வரும்போது தனக்கு நடந்த அனைத்தையும் மனந்திறந்து சொல்லவும் செய்தான். இருப்பினும், மற்றவர்கள் இருவரும் நான் சொந்த நாட்டவன் என்று ராகுலன் மீது பரிவு காட்டுவதாக, தப்பவிப்பிராயம் கொள்ளக்கூடாது என்பதிலும் நான் கவனமாக இருந்தேன். புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களுடைய திருமண அணுகுமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது சீதனம் கேட்பதில்லை. ஆண்களின் உழைப்புக்கு ஏற்றபடி பெண்களும் சரிக்குச்சமமாக சம்பாதிப்பதால் இது வந்ததாக இருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால், திருமணத்தில் ஊரிலிருந்த ஆணாதிக்க முறை இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம். ‘பெண்களும் அவர்களது அம்மாக்களும் தான் இப்ப Choosy…!’ என்று, மூன்று பெடியங்களை வைத்துக்கொண்டு பொருத்தமான மணப்பெண்களைத் தேடி அலையும் பரிதாபத்துக்குரிய அம்மா ஓருவர் சொல்லி வருத்தப்பட்டார். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே, ‘நல்ல பெடியனாய்ப் பாத்துப்பிடியடி…’ என்று தூண்டிவிடும் அம்மாக்களும் இப்பொழுது உருவாகத் துவங்கியுள்ளார்கள். இந்தியா இலங்கை போலல்லாமல், அவுஸ்திரேலியாவின் பல்கலைக்கழக அமைப்பின்படி என்ஜினியருக்கு படிக்க அதிகமான மாக்ஸ் தேவையில்லை. ஏனென்றால் என்ஜினியருக்கு ஒப்பீட்டளவில் இங்கு சம்பளம் குறைவு. வேலைத்தலத்திலோ அல்லது சமூகத்திலோ அவர்களை ‘என்ஜினியர்’ என்று அழைப்பதுமில்லை. ஆனால் டாக்டர், லோயர் போன்ற படிப்பு படிப்பவர்களுக்கு, பெண்கள் மத்தியில் ‘மவுசு’ கூட. அதிலும் ‘டாக்குத்தர்’ என்றால் அல்லது ‘லோ-எக்கவுண்டிங்’ என்ற இரட்டை பட்டப்படிப்பென்றால் கேட்கவே வேண்டாம். ‘பிடிச்சுக் கொண்டுவாடி…’ என்று, பெட்டை கூட்டிவரும் பெடியனை அம்மாக்கள் விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். இந்த வகையில், பெண்ணைப் பெத்த ஒரு தமிழ் அம்மாவிடம் சிக்குண்டவனே ராகுலன். டாக்குத்தர் படிப்புத்தான் படிக்க வேண்டுமென்று தாயும் மகளும் தலைகீழாக நின்றும் முயற்சி கைகூடவில்லை. கடைசி டாக்குத்தர் மாப்பிளையாவது பிடிக்க வேணும் என்ற அங்கலாய்ப்புடன் அவர்கள் ஒடித்திரிந்தபோது வகையாக ராகுலன் மாட்டுப்பட்டான். பெற்றோரை இழந்த நிலையில், யாருமற்றவனாக ராகுலன் நின்றது அவர்களுக்கு மேலும் வசதியாயிற்று. ராகுலன் படித்த பல்கலைக் கழகத்திலேயே ராம்ஜியும் படித்தாள். ‘அவை மகிழ்ச்சியான காலங்கள்’ என்ற ராகுலன் அந்த நினைவுகளை அழிக்கச் சிரமப்பட்டான். புலம்பெயர்ந்த மண்ணிலே தமிழப் பெற்றோர்கள், இறுகப் பற்றிக் கொண்ட இன்னொரு விஷயம், இந்தியக் கலைகள்! பெடியன் பெட்டைக்கு விருப்பமோ இல்லையோ, திறமை இருக்குதோ இல்லையோ சங்கீதம், நாட்டியம், மிருதங்கம், தபேலா என நாயோட்டம் பேயோட்டமாகப் பிள்ளைகளைக் கூட்டித்திரிவார்கள். இறுதியில் இந்த எலியோட்டம், ஒர் அரங்கேற்றத்துடன் முற்றுப்பெறும்.ராஜிக்கும் மிக ஆடம்பரமாக அரங்கேற்றம் நடந்தது. அங்கு ராகுலன் முன்னிலைப்படுத்தப்பட்டான். ‘ராஜியின் பெடியன், தமிழ்ப் பெடியன், டாக்குத்தருக்குப் படிக்கிறான்’, என ஓடி ஓடி பெண்கள் மத்தியில் தகவல் சொல்லப்பட்டது.

மற்றவை பெடியனைப் பிடிச்சுப்போடாமல் இருக்க தந்திரமாய் ‘பப்பிளிக்கிலை’ கதை பரப்பிவிடுகினம்’ என்பதுதான் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த பெண்களிடையே அன்று கலகலப்புடன் பரிமாறப்பட்ட ‘விடுப்பு’ ஆகும்.

ராஜியின் பெற்றோர் யார்…?|’ என்று அறியும் ஆர்வம் என்னுள் எழுந்த போதிலும், படிப்பு நாகரீகத்தைக் கடைப்பிடிப்பதிலே நான் மிகவும் கவனமாக இருந்தேன். ராகுலனின் படிப்புச் சம்மந்தமாக அவனைச் சந்திக்க அன்றும் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். கிறிமினல் குற்றமுள்ள ஒருவன் மருத்துவம் படித்துமுடித்தாலும் மருத்துவராக பணிபுரிய மெடிக்கல் ‘கவுன்சில்’ அனுமதிக்காது. எனவே, ராகுலனின் விருப்பப்படி சிறையிலிருந்தே, தபால் மூலம் பயிலக்கூடிய ‘ஜேர்னலிசம்’ கற்கைநெறிக்கு, பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றிருந்தேன். அதற்கான பத்திரங்களைப் பூர்த்திசெய்து அவனுடைய கையெழுத்தைப் பெறுவதற்காகவே அன்று நான் அங்கு சென்றிருந்தேன்.

ராகுலனுடன் பேசுவதற்கு சிறை அதிகாரி, ஜோசெப் கணிசமான நேரம் ஒதுக்கியிருந்தார். இதற்கான காரணமுமிருந்தது. ராகுலன் செய்த குற்றம் தவிர்க்க முடியாத சூழலில், தற்காப்பின் நிமிர்த்தம் நிகழ்ந்திருந்தால், மெடிக்கல் ‘கவுன்சில்’ கருணை அடிப்படையில் அனுமதிக்கக்கூடுமென்றும், இதேபோல முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் தகவல் தந்திருந்தார். இதனை நான் ஜோசெப்புக்குத் தெரியப் படுத்தியிருந்தேன். விதிவிலக்கான இந்த வசதியை ராகுலனுக்கு விளங்கப்படுத்தி, நடந்த விஷயத்தை விரிவாகச் சொல்லும்படி கேட்டேன்.

பல்கலைக்கழக விடுதியில் வசித்த நான் அவர்களின் அழைப்பின் பேரில், சனி ஞாயிற்றுக் கிழமைகளில் ராம்ஜியின் வீட்டுக்குச் சென்று வந்தேன். ஞாயிறு மாலை விடுதிக்குத் திரும்பும்போது அந்த வாரம் வைத்துச் சாப்பிடுவதற்கு போதுமான உணவுப் பண்டங்களையும் மறக்காது தந்து விடுவார்கள். பெற்றோரை ஒரே நேரத்தில் சடுதியாக இழந்திருந்த நிலையில் அவர்களது உபசரிப்பும் பரிவும் எனக்குத் தந்த ஆறுதல் கொஞ்ச நஞ்சமல்ல…’

அவர்கள் உன்னை சிறையில் வந்து பார்ப்பதில்லையா?’

இந்தக் கேள்வி அவனைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். கண்கள் கலங்கிய நிலையில் எதுவும் பேசாது யன்னலுக்கு வெளியே பார்த்தபடி இருந்தான். இதற்கு அவன் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

எனது கேள்வி உன்னைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடு…’

இல்லை அங்கிள். இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீர்கள்’ என்று என் கையைப் பற்றியபடி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

இருவர் இணைந்து செய்யும் மருத்துவ செய்முறை வகுப்பில், என்னுடன் மருத்துவம் படிக்கும் ஒரு வட இந்தியப் பெண் இணைந்திந்தாள். இவள் ஓரு ஜாலியான ‘party type’. இதை தெரிந்து கொண்ட ராஜி மிகவும் possessiveஆக என்னை விட்டுப்பிரியாது ஒட்டிக்கொண்டே இருக்க முயன்றாள்’

வடஇந்தியப் பெண்ணை நீ விரும்பினாயா…?’

இல்லை அங்கிள். எனது குடும்ப சோகமே என்னை விட்டுப் போகாத நிலையில் நான் காதலைப் பற்றிச் சிந்திக்கும் நிலையிலா இருக்கிறேன்’? ஆரம்பத்தில் எனக்கு ஒரு ஆதரவு தேவைப்பட்டது. அது ராஜியின் பெற்றோரிடமிருந்து கிடைத்தது. ஆனால் போகப் போக நிலமை மாறி அது புலி வாலைப்பிடித்த நிலமைக்கு வந்து விட்டது…’

ராகுலன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. நிலத்தை வெறித்துப் பார்த்தபடி அமைதியாக இருந்தான். எமது சந்திப்புக்கு ஓதுக்கப்பட்ட நேரத்தில் இன்னும் நேரமுள்ளதா என்பதை அறிய கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நேர அவசரத்தை அவனாகவே புரிந்துகொண்டு மேலும் தொடர்ந்தான்.

வார விடுமுறையில் நான் வட இந்தியப் பெண்ணுடன் போய்விடக் கூடும் என்ற எண்ணத்தில் டிஸ்க்கோவும் பாட்டியுமென ராஜி என்னைக் கூட்டித்திரிந்தாள். இலங்கையிலிருந்து வந்த எனக்கு இவை எல்லாம் புதிதாவும் பிரமிப்பாக வும் இருந்தன’.

ஒரு சனிக்கிழமை இரவு அது நடந்தது. சிற்றி சென்ரரிலுள்ள டிஸ்க்கோவுக்கு ராஜி ரிக்கற் வாங்கியிருந்தாள். ஆட்டம் முடிய நள்ளிரவைத் தாண்டிவிட்டது. இப்படியான நேரங்களில் எம்மை திரும்ப அழைத்துச்செல்ல ராஜி கொடுக்கும் தொலைபேசி அழைப்பின் பேரில் அவளுடைய அப்பா வருவார்’.

வழமை போல அன்றும் வந்து கார் தரிப்பில் நின்றபடி அவர் தகவல் கொடுக்கவே நாம் வெளியில் வந்தோம். நிறைவெறியில் வெளியே நின்ற வெள்ளைக்கார இளைஞர்கள் ராஜியுடன் சில்மிசம் செய்யவே இழுபறி ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற ஒருவன் ராஜியை கட்டிப்பிடித்து எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்தான். அலறிக்கொண்டே அவள் என்னை உதவிக்கு அழைத்தாள். அவனை ராஜியிடமிருந்து பிரிப்பதற்கு எனது முழுப் பலத்தையும் பிரயோகித்து தள்ளவேண்டியதாயிற்று. அப்போது வெறியில் நின்ற அவன் நிலை தடுமாறி அருகிலிருந்த சீமெந்துக் குந்தில் தலையடிபட விழுந்துவிட்டான். அவனது தலை உடைந்து ரத்தம் பெருகி மூர்ச்சையாகவே அம்புலன்ஸ்ஸூம் போலீசும் வந்து விட்டது…!’

ராஜியின் அப்பா அங்கு நின்றாரா…?’

இவ்வளவும் அவர் முன்னிலையில்தான் நடந்தது’.

அவர் உதவிக்கு வரவில்லையா…’?

சொன்னால் நம்பமாட்டீர்கள் அங்கிள், போலீஸ் வந்தவுடன் அவர் மகளைக் கூட்டிக்கொண்டு, எப்படி அங்கிருந்து மறைந்தாரோ எனக்குத் தெரியாது.’

உண்மையாகவா…’? அவன் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் உரத்துக் கத்திவிட்டேன். ராகுலன் ஓர் விரக்திப் புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மண்டை அடிபட விழுந்தவனுக்கு என்ன நடந்தது…’? ராகுலனின் தண்டனையின் தீவிரத்தை அறிவதற்காகவே, இதனை அவசரமாகக் கேட்டேன்.

அவன் உடம்பில் அதிக அளவு அல்க்ககோல் இருந்தது. அதனால் இரத்தப்பெருக்கு தீவிரமடைந்ததால் அவன் இறந்துபோனான்….!’

எந்தவிதமான உணர்ச்சியுமில்லாமல் இதைச்சொன்ன பின் அவன் அமைதியானான். வாழ்க்கையில் அவனுக்கு ஏற்பட்ட கஷ;டங்கள், இழப்புக்கள், ஏமாற்றங்கள் எல்லாம் அவனது மனதை மரத்துப்போகச் செய்திருக்க வேண்டும். இப்போது அவன், சிறையில் நான் முதன் முதலில் சந்தித்த ராகுலன் அல்ல!

எது எப்படி இருந்தாலும், இதை கைமோசக் கொலையெனக் கணித்திருப்பார்கள். தண்டனை தீவிரமாக இருக்குமே…, என நான் மூளையைக் குழப்பவே, ‘அங்கிள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.’ என்று கூறிய அவன் தனது மீதிக் கதையைத் தொடர்ந்தான்.

வழக்கு நடந்தது. விளக்க மறியலில் இருந்த போது எனக்காக வாதாட வழக்கறிஞரை வைக்கக்கூட ஆளில்லாத நிலையில் அரசே ஒருவரை நியமித்தது. யாருமற்ற நிலையில் அனாதையாக நின்ற நான், தம்பலகாமம் தொடக்கம் என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். என்மீது நீதிபதிக்கு அநுதாபம் ஏற்பட்டிருக்கலாம். மூன்று வருடங்கள் தீர்ப்பாயிற்று…’!

அவர்கள் உன்னை வந்து பார்த்தார்களா…’?

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அங்கிள்…’?

நீயே சொல்லு. அவர்கள் உனக்கு ஆதரவாக இருந்தார்களா…’?

அவன் தன்னை அறியாமல் உரக்கச்சிரித்தான். ‘அங்கிள் இந்தச் சிறை வாழ்க்கையும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு பல்கலைக் கழகமே. இது எனக்கு நிறையவே கற்றுத்தந்துள்ளது. எமது சமூகத்தின் கபடத்தனங்களையும், சுயநலத்துக்காகச் செய்யும் குள்ளத்தனங்களையும் எண்ணி நான் பலநாள் சிறையில் ஆத்திரப்பட்டிருக்கிறேன். உண்மையைச் சொன்னால் அங்கிள், உங்களைச் சந்தித்த பின்புதான் வாழ்க்கையில் மீண்டும் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது’.

நீங்கள் கேட்ட விடயத்துக்கு வருகிறேன். ராஜியும் தந்தையும்தான் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள். விளக்கமறியல் காலத்தில் என்னை அவர்கள் ஒரு நாளாவது வந்து பார்க்காத நிலையிலும், வழக்கறிஞர் மூலமாக அவர்களை வந்து சாட்சிசொல்லுமாறு அழைத்தேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். சாட்சிசொல்ல அவர்கள் வராததை நீதிபதி தனது தீர்ப்பில் கண்டித்து, எனது எதிர்கால நன்மை கருதி குறைந்த பட்ச தண்டணை தருவதாக தீர்ப்பில் குறிப்பிட்டார். இப்பொழுது நீங்கள் ஒருவர் தான் எனது வெளி உலகத்துடனான தொடர்பு’ என்று நிறுத்தினான்.

அவன் விழியோரத்திலே பனித்த கண்ணீர்த் துளிகள் மின்னின. ஆனாலும் மனம் நிம்மதி அடைந்தவனைப்போல பாசம் புரளும் புன்னகை ஒன்று அவன் உதடுகளில் நெளிந்தது.

 

6

மீர் போலீஸ் காவலிலும், றொஸ்நாக் தலையில் காயங்களுடன் மருத்துவமனையிலும் இருந்த காலங்களில் இரண்டு பிள்ளைகளையும் அமீருடன் படிக்க வந்த ஈரானியக் குடும்பமொன்று பராமரித்ததை அறிந்து மகிழ்ந்தேன். அமீரின் பிள்ளைகளைப் பராமரித்த ஈரானிய மாணவன் அன்று என்னிடம் வந்திருந்தான். மருத்துவமனையிலிருந்து,

பிறந்த குழந்தையுடன் வெளியேறிய றொஸ்நாக், வெள்ளைக்கார நண்பனுடன் சென்று, அவனது வீட்டில் வாழ்வதாகத் தகவல் சொன்னான்.

முதலிரண்டு குழந்தைகளின் நிலமை என்ன’? என்று கேட்டேன்.

தனது பராமரிப்பில் இருக்கும் இரண்டு பிள்ளைகளையும், அமீர் தேரானுக்குத் தனது பெற்றோரிடம் அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகச் சொன்னான்.

இரண்டு வாரங்களின் பின், அமீரின் தந்தை ஈரானிய தூதுவராலய அதிகாரி ஒருவருடன் சிட்னி வந்திருந்தார். அமீரைச் சந்தித்த அவர், இரண்டு பிள்ளைகளைகளையும் தன்னுடன் கூட்டிச் சென்றார். மொழி தெரியாத நிலையிலும், என்னையும் சிறையதிகாரிகளையும் சந்தித்து அமீரின் படிப்பை முடிக்க உதவுமாறு கேட்டார். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே, அந்த வெள்ளிக்கிழமை சந்திப்புகளைச் சிறை அதிகாரி ஜோசெப் ஏற்பாடு செய்து தந்தார். மனைவியை அடித்து காயமேற்படுத்தி கொலை செய்ய முயன்றது முதற்கொண்டு பல்வேறு குற்றங்களை, றொஸ்நாக்கின் சட்டம் படித்த நண்பன் அடுக்கியிருந்தாலும், அவற்றில் பல, நீதிமன்றத்தில் எடுபடவில்லை. ஈரானிய கலாசாரமும், இஸ்லாமிய ஆசாரங்களும், இந்த வழக்கில் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென அமீரின் வழக்குரைஞர் வைத்த வாதத்தை ஓரளவு ஏற்றுக்கொண்ட நீதவான், அமீருக்கு இரண்டுவருடச் சிறைத்தண்டனையைத் தீர்ப்பாக அளித்தார். அமீரின் தண்டனை முடிய ஆறு மாதங்கள் மாத்திரம் பாக்கி உள்ளது. அதற்குள் அவன் தன் டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து விடுவான். ஆனால் ரோனியும் ராகுலனும் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது சிறையிற் கழிக்க வேண்டும். இவர்களையொத்த வளரிளம் பருவத்துப் பிள்ளைகள் பலர், வெளியே வாழக்கையைச் சுகிக்க, சந்தர்ப்ப வசத்தால், எதிர்பாராதவிதமாகச் செய்த குற்றங்களுக்காக இவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதால், தொலைதூரக் கல்லூரியில் படிக்க ரோனிக்கு இப்பேது அனுமதி கிடைத்துள்ளது. பக்க வாதத்தால் தாக்குண்டு நேர்ஸிங் கோமிலுள்ள ரோனியின் தாயால் அவனை வந்து சிறையில் பார்க்க முடியவில்லை. அவன் சார்ந்த கிறீஸ்தவ கோவிலின் மதபோதகர் இடையிடையே வந்து பார்த்து ஆறுதல் சொல்லிச் செல்வது எனக்குத் தெரியும். அன்று சிறைச்சாலைக்கு சென்றபோது, சிறையதிகாரி ஜோசெப் சொன்ன தகவல் என்னை வியக்க வைத்தது. மேரியின் பெற்றோரும், தேவாலய பாடகர் குழுவில் ரோனியுடன் பங்கு கொண்ட மேரியின் தங்கையும், ரோனியை வந்து பார்க்கிறார்களாம்.

மேரியின் பெற்றோருக்கு, ரோனிமேல் கோபமில்லையா’? என, நெடுங்காலமாக என் மனதை குடைந்த அந்தக் கேள்வியை, ஜோசெப்பிடம் கேட்டேன்.

மேரியுடன் நட்பாய் இருந்த காலத்தில் அவளது பெற்றோருடன் ரோனி அன்யோன்யமாகப் பழகியவன். மகளை இழந்த வலி அவர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த விபத்துக்கு ரோனிமட்டும் காரணமல்ல என்பதும் அவர்களுக்குப் புரியும். மேரியின் மரணச்சடங்குக்கு, அவர்களாகவே ரோனியைச் சிறைச்சாலை அனுமதியுடன் அழைத்துச் சென்றார்கள்.

அவர்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள் அல்லது வாழ்க்கையைப் புரிந்தவர்கள்| என்று வைத்துக்கொள்ளுங்களேன்’ என்ற யோசெப், பிறிதொரு விடயத்தையும் தொடர்ந்து சொன்னார். ‘மேரியின் பெற்ரோரை விட மேரியின் தங்கைதான் ரோனியை அடிக்கடி வந்து பார்த்து அவனுக்கு ஆறுதல் வழங்குகிறாள்…’

இதை அவர்களுக்கு இடையேயான ஆழமான நட்பாக எடுத்துக்கொள்ளலாமா…’?

நீங்கள் கேட்பதின் அர்த்தம் எனக்குப் புரிகிறது. அப்படி நடந்தால் நல்லதுதான். மூன்று வருடங்களின் பின் அவன் வெளியே வரும்போது அவளின் நட்பு, வாழ்க்கையில் அவனுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆங்கிலேயர்களின் குடும்ப உறவில் நாம் இலாப நட்டக் கணக்குப் பார்ப்பதில்லை. டாக்ராகப் பணிபுரியும் பெண் ஒரு தச்சுத்தொழிலாளியைக் காதலித்து மணம் முடிப்பதும், பேராசிரியர் ஒருவரின் மனைவி றெஸ்றோறன்றில் பணிபுரிவதும் எமது வாழ்க்கை முறையில் இயல்பானது| என்றார்.

தர்மசங்கடமான சில நிமிடங்களை அடைகாத்த பின்னர், ‘இலங்கைத் தமிழர்கள் சிட்னியில் எத்தனை பேர் வாழ்கிறார்கள்…’? என்ற கேள்வியுடன் ராகுலன் விஷயத்துக்கு வந்தார்.

சரியான புள்ளிவிபரம் தெரியாது. ஆனால் குத்து மதிப்பாக இருபதினாயிரம் பேர் வாழ்வதாக நம்பப்படுகிறது.’

இன்று வரையில் இவர்களுள் ஒருவர்கூட ராகுலனை வந்து பார்த்ததில்லை. பல்கலைக் கழகத்தில் படிக்கும் அடுத்த தலை முறையின் பிரதிநிதிகளான, அவனது நண்பர்கள் கூட வந்து பார்க்காதது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ராகுலன் யாரைக் காப்பாற்ற முயன்று இப்போது தண்டனை அநுபவிக்கிறானோ, அவர்கள் சாட்சி சொல்லாததும், அவனை வந்து பார்க்காததும் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இரண்டாயிரமாண்டுகளுக்கு மேலான கலாசாரப் பெருமை கொண்டது உங்கள் தமிழ் நாகரீகம் என அண்மையில் வாசித்து வியந்தேன். அவசர உலகத்தில் அதைத் தொலைத்து விட்டீர்களா…’?

யோசெப்பின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நான் சொல்வதையிட்டு நீங்கள் வருத்தப்படக்கூடாது. உங்களைப் போன்றவர்களுக்கு சொல்வதன் மூலம்தான் இந்த விடயத்தை உங்கள் சமூகத்துக்கு கொண்டு செல்லமுடியும். படகில் அகதிகளாக வந்து தடுப்புமுகாமில் எத்தனை தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது தெரியுமா…? உங்களில் எத்தனைபேர் அவர்களை அகதி முகாமில் சந்தித்திருக்கிறீகள்’? அவர்கள் எல்லோரும் வேலை வாய்ப்பைத் தேடி வந்தவர்களாக இருக்க முடியாதல்லவா…? எனது பெற்றோர்களும் வேலைவாய்ப்புக்காக அயர்லாந்திலிருந்து இங்கு வந்தவர்கள்தான். ஏன், இங்கு வளமாக வாழும் உங்களிலே பலரும் அகதி அந்தஸ்துப் பெற்றவர்களாக இருக்கலாம். மனிதன் சுலபபமாக மறக்கக் கற்றுக்கொண்டு சுயநலமாக வாழ முற்படுவதுதான் பிரச்சனைகளின் ஆணிவேர்…’!

ஜோசெபின் உதடுகளிலே ஈரமற்ற புன்னகை ஒன்று சுழிந்து மறைந்தது. அது, அவர் மனசினைச் சிலகாலமாக அரித்துத்தின்ற தார்மீகக் கோபங்களைக் கொட்டித்தீர்த்ததின் அடையாளமாகக்கூட இருக்கலாம். நான் காரை நோக்கி நடந்தேன்.

அமீர் – ரோனி – ராகுலன்…!

சிறையிலிருந்து அமீர் வெளியே வந்ததும் றொஸ்நாக்கை, இஸ்லாமிய மதக் கலாசாரப்படி ‘தலாக்’ சொல்லி விலத்திவிடுவான். பெற்றோரின் விருப்பப்படி இன்னொரு திருமணம் செய்து கொண்டபின், அவனுக்கு ஈரானில் வளமான வாழ்வொன்று காத்திருக்கும். மேரியின் குடும்ப ஆதரவுடன் ரோனியும் புதியதொரு வாழ்வைத் துவங்கலாம்.

ராகுலன்…?

மனித வாழ்க்கை என்பது கடலிலே சங்கமிக்க ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போன்றது. அமீர், ரோனி என்ற இரண்டு நதிகள் இங்கு தடங்கலின்றி ஓடிக் கொண்டிருக்கின்றன…!

காரில் அமர்ந்ததும் ஒரு காட்சி…!

அலகபாத்துக்கு (Allahabad) அந்தக்காலத்தில் ‘ப்ரயாகம்’ என்பது பெயர். இரண்டு நதிகள் சேரும் இடம் என்பது அதன் அர்த்தம். மூன்றாவதாக, சரஸ்வதி என்ற பாதாள நதி அங்கே கண்ணுக்குப் புலனாகாது சங்கமிக்கிறதாக ஒரு ஐதீகம். இதனால் அது ‘திரிவேணிசங்கமம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதற்கான புராணக் கதை ஒன்று வழக்கில் உண்டு. தசரத மகாராஜாவுக்கு தர்பணம் கொடுப்பதற்காக சீதாதேவி சகல ஏற்பாடுகளையும் செய்துமுடித்தபின் ப்ரயாகத்தில் அமர்ந்திருந்தாள். ராம, லட்சுமணர் வந்து சேர்வதற்காக காத்திருப்பதாகவும், சிறிது நேரம் பொறுத்துக்கொள்ளுமாறும் சீதாதேவி, தசரத மகாராஜாவைக் கேட்டாளாம். ஆனால் தசரத மகாராஜாவுக்கு அதிக பசியாக இருந்ததால், கொண்டுவந்திருந்த பட்சணங்களை ஆகம விதிப்படி கொடுத்தாளாம். மகாராஜா மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார். தாமதமாக வந்த ராம லட்சுமணரிடம் நடந்த விஷயங்களை சீதாதேவி எடுத்துச் சொல்லியிருக்கிறாள். இதை நம்பாத அவர்கள் அதற்கான சாட்சியங்களைக் கேட்டார்களாம். அதற்கு அவள் சரஸ்வதி உட்பட ஐந்து சாட்சியங்களை அழைத்ததாகவும், சரஸ்வதி சாட்சி சொல்ல வராததால், ஷஇன்றிலிருந்து இந்த இடத்தில் நீ யார் கண்களுக்கும் புலப்படாமல் போவாய்| என்று சீதாதேவி சபித்ததாகவும் கூறப் படுகிறது. அன்றிலிருந்து கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அந்த இடத்தில், சரஸ்வதி கண்களுக்குத் தெரியாமல், இரு நதிகளுக்கும் அடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது. சரஸ்வதியைப்போல, மானுடகுலத்தின் கண்களிலே ஈழத்தமிழரின் துயர் தெரியாமல் இருப்பதற்கு யார் இட்ட சாபம் காரணம்? சரஸ்வதியை வாலாயம் செய்த அறிவுஜீவிகளெனத் தம்பட்டமடித்துப் பவனிவரும் தமிழர்கள், அந்தச் சிறை அதிகாரி கேட்ட கேள்விக்கு என்ன பதில் வைத்திருக் கிறார்கள்…?

இது என்னையே நான் கேட்கும் கேள்வியும்!

கனத்த மனதுடன் காரை ‘ஸ்ராட்’ செய்தேன்.

ஆசி கந்தராஜா (2015)

2 comments:

  1. மிக நல்ல கதையும் அதை சொல்லும் தமிழ் நடையும் விதமும் மிக அழகு. மிகவும் இரசித்தேன். இக்கதையில் பல உண்மைகளையும், தமிழர்கள் சிந்திக்க வேண்டிய பல விடயங்களையும் குறிகாட்டி இருக்கிறீர்கள். ம்கைழ்சியும் நன்றியும்.

    ReplyDelete
  2. மிக நல்ல கதையும் அதை சொல்லும் தமிழ் நடையும் விதமும் மிக அழகு. மிகவும் இரசித்தேன். இக்கதையில் பல உண்மைகளையும், தமிழர்கள் சிந்திக்க வேண்டிய பல விடயங்களையும் குறிகாட்டி இருக்கிறீர்கள். ம்கைழ்சியும் நன்றியும்.

    ReplyDelete