Sunday 24 January 2021

 குறுநாவல் 3:

உயரப்பறக்கும் காகங்கள்

ஆசி கந்தராஜா

 

னது வீட்டுக்கு சுகுமார் வந்திருந்தான்!

நான் சிட்னியில் வாழ்ந்த பத்து வருட காலத்தில் ஒருமுறையேனும், அவன் என்னைத்தேடி என் வீட்டுக்கு வந்ததில்லை. ஈழத்து சிற்றூண்டிகள் விற்கும் உணவகம் ஒன்றிலே வாங்கிய வடை கொழுக்கட்டைப் பாசலுடன் என்னைக் காண இன்று வந்திருக்கிறான். எல்லாவற்றிலும் மேலாக நான் முற்றிலும் எதிர்பாராத சங்கதி ஒன்று என்னைத் திக்குமுக்காட வைத்தது. அதுவேறொன்றுமல்ல. அவனுடன் வந்திருந்த பெண்ணைத் தன் மனைவியென அவன் அறிமுகப்படுத்தியதே. ஆச்சரியத்தை வெளியே காட்டிக் கொள்ளாது, இன்முகத்துடன் வரவேற்று அவர்களை என் மனைவிக்கு அறிமுகம் செய்தேன். என் மனைவி யாழ்ப்பாணத்து கிராமிய விருந்தோம்பல் குணத்தை தொலைத்து விடாது வாழ்பவள். சிட்னியில் ஒரு தசாப்தகாலம் வாழ்ந்தாலும் இன்றும் ஊரில் இருந்து வரும் மெய்கண்டான் கலண்டர்படி காலத்தை ஓட்டுபவள்.

உரையாடல் மூலம் எனக்கும் சுகுமாருக்குமுள்ள நீண்டகால உறவை உணர்ந்துகொண்டு ‘வந்த நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். இரவுச் சாப்பாட்டுக்கு இடியப்பம் அவிக்கிறன்…’ என விருந்துக்கு அழைத்தாள். சுகுமார் மறுப்பேதும் பேசாது அவளுடைய அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். இது கூட சுகுமாரிலே ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடையாளப் படுத்துவதாகவே, நான் விளங்கிக்கொண்டேன். ஒன்றன்பின் ஒன்றாக அங்கு நடக்கும் அதிசயங்கள் அனைத்தையும் நான் வியப்புடன் உள்வாங்கிக் கொள்வதை சுகுமார் இலகுவில் புரிந்துகொண்டான். அவன் எப்போதும் ஒரு ‘Sharp‘ ஆன பேர்வழி.

சுந்தரம்…, இவற்றையெல்லாம் உன்னால் நம்ப முடியவில்லை, இல்லையா? இதுதான் இன்றைய யதார்த்தம்’ எனத் தத்துவம் பேசினான்.

சுகுமாரை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில், அவனது அன்றைய பாஷையில், நீங்களெல்லாம் ‘எளிய தமிழ்ச்சனங்கள்.’ அதற்காக அவன் தமிழனல்ல என்று நினைக்கக் கூடாது. இரண்டு தலைமுறைகளாக கறுவாக் காட்டுப் பகுதியில் வாழ்ந்து, ‘டமிளர்’களாய் உயர்ந்த கொழும்புத் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்தக் காலத்தில் அவனுடைய தந்தைதான் கொழும்பிலுள்ள பல தமிழ் அமைப்புகளின் கௌரவ தலைவர். அவர் வகித்த அரச உயர்பதவி காரணமாக சகல தமிழ் சமூக அமைப்புகளும் அவரை தலைவராக்கி தம்மை கௌரவப்படுத்திக் கொண்டன. வீட்டில் தமிழ் பேசாவிட்டாலும் தலைமை தாங்கும் தமிழ்க் கூட்டங்களில் தடக்கி விழுந்து தமிழ் பேசி சமாளித்து விடுவார்.

சுகுமாரும் நானும் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், ஒன்றாகவே படித்தோம். அங்கு தமிழர் – சிங்களர் – முஸ்லீம்கள் – பறங்கியர் என அனைத்து இனங்களின் பிள்ளைகளும் ஒரே வகுப்பறைகளிலே படித்தார்கள். ஆனாலும் அவர்கள் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். என் தந்தையும் அந்தக் காலத்தில் கொழும்பிலுள்ள அரச திணைக்களமொன்றில் ‘கிளறிக்கல்’ எனப்படும் எழுது வினைஞராக பணியாற்றியவர். துலாவும் பட்டையும் கொண்டு தோட்டத்துக்கு நீர் இறைத்த, சிறுநிலக் கமக்காரரான பாட்டனால் என் தந்தையை மேற்கொண்டு படிக்க வைக்க முடியவில்லையாம் ‘தன்னை மேலே படிக்க விட்டிருந்தால் தான் இப்ப ‘கனக்க’ வெட்டி விழுத்தியிருப்பன்’ என்று அப்பா அந்தக் காலத்தில் அடிக்கடி கூறிக்கொள்வார். யாழ்ப்பாணத்து கிராமத்து தமிழ்ப் பாடசாலை ஒன்றில் பத்தாம் வகுப்பு வரை படித்த அம்மாவும் அப்பா சொல்வதை அப்படியே ஏற்று ‘உச்சு’ கொட்டி ஆதரிப்பதில் சலிப்படைந்ததே இல்லை. எனக்கென்றால் வீராதி வீரனாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அப்பா கிளறிக்கல் Class twoவை தாண்டி ஏன் மேலே நகரவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எது எப்படி இருந்தபோதிலும், அவர் தனது சக்திக்கு மேலாக என்னை மேட்டுக்குடியினர் படிக்கும் பாடசாலையிலே படிக்க வைத்தார் என்பது முற்றிலும் உண்மை. தான் படிக்காத படிப்பை நான் படித்து, டாக்டராகவோ என்ஜீனியராகவோ வரவேண்டுமென்பதுதான் அப்பாவின் ஆசை.

சுந்தரத்தின்ரை படிப்புக்கு எல்லாத்தையும் செலவழித்தால் பெட்டைக்கு பிறகு என்ன செய்யிறது…’? என்ற அம்மாவின் நியாயமான கேள்விக்கு ‘அவன் படிச்சு மேலுக்கு வந்தால் ‘டொனேசன்’ வாங்கி தங்கைக்கு குடுக்கட்டன்’ என அப்பா எதிர்வாதம் செய்வார். மொத்தத்தில் அவருக்கு, என் மீதும் எனக்கு எதிர்காலத்தில் வரப்போகும் பணக்கார மனைவி குடும்பத்தின் மீதும் அபார நம்பிக்கை. பத்தாம் வகுப்பில் தமிழ் இலக்கியம் படித்த அம்மா மூலம் அப்பாவுக்கும் தமிழ்ப்பற்று வளர்ந்து முற்றத் துவங்கியது. அவரும் சுகுமாரின் தந்தை தலைவராக இருக்கும் தமிழ் அமைப்புகளில் குறைந்தபட்சம் ஒரு நிர்வாக சபை அங்கத்தவராகவாவது வர வேண்டுமென்று முயன்றார். அவரின் பிரயாசைகள் வீண் போனதில்லை. சில அமைப்புக்களில் அவர் செயலாளர் பதவி வகிக்கும் சந்தர்ப்பங்களும் வந்ததுண்டு. இதுகுறித்து அம்மாவுக்கு கொள்ளை பெருமை. நானும் இதுபோல உயர்மட்டப் பிள்ளைகளுடன், குறிப்பாக சுகுமாருடன் சிநேகிதமாக இருக்க வேண்டுமென்றும், அது பிற்கால வாழ்வுக்கு நன்மை தருமென்றும் அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் உபதேசிப்பார். இது எப்படிச் சாத்தியமாகுமென்று என்றுமே எனக்கு விளங்கியதில்லை.

அந்தாளைப் பிடிச்சு Class One பிறமோசன் எடுங்கோவன்’ என நிர்வாக சபைக்கூட்டத்துக்கு அப்பா புறப்படும் போதெல்லாம் அம்மா நச்சரித்தும், பென்சன் எடுக்கும்வரை ‘Class two’ வை விட்டு அப்பா நகர்ந்தது கிடையாது. அப்பாவின் கரைச்சல் தாங்காமல் நானும் சுகுமாருடன் வலிந்து ஒட்டிக் கொள்வேன். அவன் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டான். அவனது கூட்டாளிகள் எல்லாம் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மேட்டுக்குடி பிள்ளைகள். அவர்களது வீடுகளிலும் ஆங்கிலமே கோலோச்சியது. வீட்டிலும் வெளியிலும் யாழ்ப்பாணத் தமிழ் பேசி தமிழ்க் கட்டுரைப் போட்டிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொள்ளும் என்னை, ஆங்கில பேச்சுப் போட்டிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொள்ளும் சுகுமாரும் அவனது கூட்டாளிகளும் தங்களில் ஒருவனாக சேர்த்துக் கொள்ளாததில் வியப்பொன்றுமில்லை. இளமைக்காலத்தில் நான் படித்த தமிழ்ப் புத்தகங்கள் உட்பட, சகல புத்தகங்களையும் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த போது கொண்டு வந்தேன். அவற்றை எனது சிட்னி வீட்டு, வரவேற்பறையுடன் கூடிய பகுதியில் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தேன். இது நான் எனது தந்தையிடம் கற்றுக்கொண்டது. அவர் என்றுமே உண்மையுள்ள அரச ஊழியனாக வாழ்ந்தவர். எதிலும் ஒரு ஒழுங்கு முறையிருக்கும். அலுவலக கோப்புக்கள் முதற்கொண்டு உறுதிக்கட்டுகள் வரை பாதுகாப்பதிலே அவர் ஒருவகை ஒழுங்கையும் நேர்த்தியையும் கடைப்பிடித்தார்.

எனது புத்தக அலுமாரியிலுள்ள ஒரு கனமான பழைய புத்தகம் சுகுமாரின் கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். எழுந்து அதை எடுத்து வந்தான். அது நான் பன்னிரண்டாம் வகுப்பில் படித்த இரசாயன ஆங்கில பதிப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு. அதை விரித்து சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தவன் யன்னலுக்கு வெளியே பார்த்தவாறு மௌனமாக இருந்தான். அவனது மௌத்தின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் மனைவி தேநீர் தயாரித்து விட்டாளா என்பதை அறியும் பாவனையில் சமையலறைப் பக்கம் சென்றேன். சுகுமாரும் நானும் எட்டாம் வகுப்பு சித்தியடைந்து ஒன்பதாம் வகுப்புக்கு வந்தபோது தான் இலங்கையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டுமென்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு சித்தியடைந்து பத்தாம் வகுப்புக்கு செல்லும் போது ‘சுயபாஷா’ எனப்படும் தாய்மொழியில் நாம் இறுதிப்பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். தாய்மொழி மூலம் விஞ்ஞானப் பாடங்கள் கற்று பல்கலைக்கழகப் புதுமுகப் பரீட்சை எழுதிய முதல் Batch மாணவர்களுள் நானும் ஒருவன். இது குறித்து இப்பொழுதும் நான் பெருமைப்படுவதுண்டு.

தாய்மொழிக் கல்விக்கெதிராக ஆங்கில மோகம் கொண்ட மேட்டுக்குடி மக்கள், இனபாகுபாடின்றி திரண்டெழுந்த போதிலும், இலங்கை அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழர்கள் தமிழிலும் சிங்களவர் சிங்களத்திலும் பறங்கியர் ஆங்கிலத்திலும் முஸ்லீம்கள் தாம் விரும்பிய மொழியிலும் கல்வி கற்று பத்தாம் பன்னிரண்டாம் அரச பரீட்சைகளிலே தேறுதல் வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்தது. இதன் மூலம் தனது ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தினை அமுலாக்குதல் சுலபமானதென அரசு கருதியது போலும்!

சுகுமாரின் தந்தை அரச சேவையின் சட்ட திட்டங்களையெல்லாம் கரைத்துக் குடித்து, அவற்றின் நெளிவு சுழிவுகளை அறிந்தவர். அவர் தன் மகன், தமிழில் சோதனை எடுத்து என்ன செய்வது? என்ற ஆதங்கத்தில் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். சுகுமாரை ஒன்பதாம் வகுப்பு படிக்கவிடாது. அந்த வருடம் ஆங்கில மொழிமூலம் இறுதியாக பரீட்சை எழுதும் பத்தாம் வகுப்பில் படிக்க ஒழுங்குகளை மேற்கொண்டார். அத்துடன் ஒன்பதாம் வகுப்பு பாடங்களை தனிப்பட்ட ரியூசன் மூலம் படிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்தார். பாடசாலை நிர்வாகமும் அவரின் அரச உயர்பதவி காரணமாக இதற்கு ஒத்துக்கொண்டது. இந்த குறுக்கு வழியை வேறு பல மாணவர்களும் மேற்கொண்ட போதிலும், என் தந்தையின் செல்வாக்கும் பொருளாதாரமும் இந்த வசதியை எனக்கு செய்து தருவதற்கு தோதுப்படவில்லை. ‘சுயபாஷா’ திட்டம் எனக்கும் சுகுமாருக்குமிடையே இடைவெளியை மேலும் அகலித்தது. பாடசாலையில் காணும்போது ‘ஹலோ’ சொல்லுமளவில் நாம் நின்று கொண்டோம். விஞ்ஞான கலைச்சொற்களை நாம் தமிழில் உச்சரிப்பதை பரிகசிக்கத் துவங்கிய சுகுமாரும் கூட்டாளிகளும் எம்மைத் தங்களிலும் தாழ்ந்த சாதியாகப் பாராட்டத் துவங்கியதைப் புரிந்துகொண்டேன். அரசபாஷை சிங்களம். அதனால் வேலைவாய்ப்பில் எமக்கே முதலிடம் என்ற இறுமாப்பில் சிங்களமொழி மூலம் கற்ற மாணவர்கள் திரிய, கொழும்பு பாடசாலைகளில் தமிழ் போதானமொழி வகுப்புகள் இயல்பாகவே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டன. இருப்பினும் அங்கு போதித்த அனுபவமும் தமிழ் உணர்வுமுள்ள ஆசிரியர்களின் அக்கறையால், தமிழ்மொழி மூலம் கற்ற என்னைப்போன்ற மாணவர்கள் பலர் உயர்கல்வி பெறுவதை ஒரு சாவாலாக ஏற்று அக்கறையுடன் கற்றோம்.

சுகுமாரின் தந்தை தலைமை வகிக்கும் தமிழ் விழாக்களில் அவன் தாயைக் கண்டிருக்கிறேன். பொன்நிறம். பரம்பரை செல்வச்செழிப்பு அவரது அழகுக்கு மெருகு சேர்த்தது. தாய்வழிப் பாட்டன்கள், இரண்டு பரம்பரையாகக் கறுவாக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த செல்வந்தர்கள். சுகுமாரின் தந்தையோ எண்ணைக் கறுப்பு. மிஷன் பாடசாலையொன்றில் படித்து முன்னேறி, நிர்வாக உயர் பதவிக்கு இளவயதிலேயே உயர்ந்த அவரை, தாய்வழிப் பாட்டன் இலகுவில் மருமகனாக்கிக் கொண்டதாக அப்பா சொல்லுவார். சுகுமார் அசப்பிலும் நிறத்திலும் தந்தையின் சாயலையே பெற்றிருந்தான். தாயின் நிறம் தனக்கு வாய்க்கவில்லையே என்கிற மனக்குறையோடு வளர்ந்திருப்பான் போலும்! வெள்ளைத்தோல் மீது அவனுக்கு அலாதி மோகம். இதனால் அவன் பாடசாலையிலுள்ள பறங்கி பெடியன்களுடனேயே பெரும்பாலும் கூடித்திரிவான். இலங்கை அரசு பின்பற்றிய இனத்துவேஷ அரசியலால் சிங்களமும் தமிழும் விரோதம் பாராட்டி வெவ்வேறு பாதையில் பயணிக்க ஆங்கில கலாசார மோகத்தால் கவரப்பட்ட சுகுமார், ‘தாங்களும் வெள்ளைக்காரர்களே’ என நினைத்து வாழ்ந்த பறங்கி இனத்தவர், உயர்வானவர்கள் என எண்ணி அவர்களுடைய நட்பினையே அதிகம் விரும்பினான். அவன் நட்புப் பாராட்டிய பறங்கியர் வெள்ளைத் தோலர்கள் என்பது தான் விசேஷம்.

சுகுமாருக்கு ஊர்சோலிகள் அதிகம் இருந்தன. ஒன்பதாம் பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் ஒரே வருடத்தில் ஊட்டப்பட்டது அவனுக்கு ஜீரணமாகவில்லை. படிப்பிலே வெறுப்புத் தோன்றியது. இதனால் பல்கலைக்கழக புகுமுக பரீட்சை மீது மூன்று தடவைகள் படையெடுத்தும் தேவையான புள்ளிகளைப் பெறவில்லை. இதனால் அவனுக்கு பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. குறுக்குவழி நாடாமல் தமிழ்மொழிமூலம் பரீட்சை எழுதிய கணிசமான மாணாக்கர்கள் கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், விவசாயம் என பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த அதிர்ஷடசாலிகளுள் நானும் ஒருத்தன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எனது பொறியியல் படிப்பும் முடிந்தது. அடுத்த மாதமே அரசு கூட்டுத்தாபனமொன்றில் நிரந்தர வேலையும் கிடைத்தது. அப்பா தலைக்கனமும் பெருமிதமும் ஒருங்கேசேர எனக்கு திருமணம் பேசத்துவங்கினார். எப்போது நான் என்ஜீனியரானேனோ, அப்போது தொடக்கம் அவரது நடைஉடை பாவனைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. எல்லோரையும் எடுத்தெறிந்து பேசத் துவங்கினார். இதுவரை நிர்வாக சபை உறுப்பினராக இருந்த தமிழ் அமைப்புக்களில் இனி தலைமைப்பதவி தரப்பட வேண்டுமென்ற தொனியில் நடக்கத் தலைப்பட்டார். சுகுமாரின் தந்தை அரச பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் கட்டியாண்ட அதிகாரத்தை இழக்க, அவர் வகித்த தலைவர் பதவிகள் அப்பாவுக்கு இலகுவில் கிடைக்கலாயிற்று. தலைமை வகித்த அமைப்புக்களில் சாதாரண அங்கத்தவராக இருக்க, சுகுமாரின் தந்தையின் சுயகௌரவம் இடம் தரவில்லை. இதனால் அவர் தமிழ் அமைப்புக்களுடனிருந்த தொடர்பை முற்றாக முறித்துக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைக்காத சுகுமார், வழமைபோல கொழும்பில் Cost and Management accountancy படிக்கத் துவங்கி பல தடவைகள் தடுக்கி விழுந்து இறுதியில் எக்கவுண்டன் ஆகிவிட்டான் எனக் கேள்விப்பட்டேன். அவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

என் மனைவி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்தாள். அவுஸ்திரேலிய முறைப்படி தேநீருக்கு சீனி போடாமல் வேண்டியவர்கள் தங்கள் அளவுக்கேற்ப போட்டுக் குடிக்கட்டுமென ஒரு கிண்ணத்தில் தனியாக சீனி வைத்திருந்தாள். சுகுமார் கொண்டுவந்த வடை, கொழுக்கட்டையும், ‘பிளமிங்டன்’ சந்தையில் வாங்கிய இதரை வாழைப்பழங்களும் பரிமாறப்பட்டன. சுகுமார் வடையில் ஒரு கடியும் வாழைப்பழத்தில் ஒரு கடியுமாக ருசித்துச் சாப்பிடுவதைக் காண எனக்கு வியப்பாய் இருந்தது. எனக்கு வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். முன்னரெல்லாம் அவன் தோசைக் கடை வாசலை மிதித்ததில்லை. தோசைக்கடைக்கு போவதும், அங்கு வடை தோசை சாப்பிடுவதும் எளியவர்களுடைய சுவைப்பழக்கம் என ஏளனம் செய்துமிருக்கிறான். இன்று அந்தச் சுவையிலே வெட்கமின்றி ஒன்றினான். சுகுமார் கொழுக்கட்டை சாப்பிடவில்லை. தேநீருக்கும் சீனி போடவில்லை. தனக்கு ‘Blood Sugar’ இருப்பதாக காரணம் சொன்னான். அவனின் தந்தையும் இறுதிக்காலத்தில் நீரிழிவு நோயால் மிகவும் கஷ்டப்பட்டவர். அரச அதிகாரம் போன பின் தன்னை யாரும் மதிக்கவில்லையே’ என்ற மன அழுத்தங்கள் அவரை பெரிதும் பாதித்தன. சுகுமார் திசைமாறிச் சென்ற ஏமாற்றமும் நீரிழிவு நோயும் அவரை நிரந்தர நோயாளியாக்கி, இறுதியில் சாவுக்கு இட்டுச் சென்றன. அப்போது அவருக்கு சாகும் வயதல்ல. மரணவீட்டிற்கு தமிழ் அமைப்பொன்றின் சார்பில் மலர் வளையம் வைக்க சென்று திரும்பிய அப்பா, ‘அவையின்ரை அந்தக் கால கெப்பர் என்ன, செத்தாப் போல நடக்கிற கிலிசகேடென்ன…? செத்த வீட்டிலை ஒரு நாலு சனம்தான் இருக்குது’ என அம்மாவுக்கு செய்தி விவரணம் கூறினார். சுகுமாருக்காக நானும் ஒருமுறை சாவீட்டுக்கு போய் வரலாமென்ற எண்ணத்தில் ‘சுகுமாரோடை கதைச்சனீங்களே…’? எனக் கேட்டேன்.

சுகுமாரோ…? தகப்பன் செத்து அடுத்தநாள் பின்னேரம் தான் தாய்வீட்டை வந்தவனாம். அவன் ஒரு பறங்கிப் பெட்டையைக்கட்டி அங்கேயே அடுகிடைபடுகிடையாய் கிடக்கிறானாம். இது உனக்குத் தெரியாதே…’? என நாக்கு வழித்தார்.

மற்றவையை நொட்டை சொல்லாதையுங்கோ, எங்கடை பெடியனும் என்னவோ…’? என அம்மா எனக்கு கேட்காமல் அப்பாவின் காதைக் கடித்தார்.

எங்கை அவன் என்ரை சொல்லுக் கேட்காமல் கொண்டு வரட்டும் பாப்பம். தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு கீழை நெருப்புக் கொழுத்துவன்’ என அப்பா கொதிக்க அம்மா வழமை போல சமையலறைக்கு சென்றுவிட்டார்.

இரண்டு வருடத்தின் பின்னர் நானும் என்னுடன் வேலை செய்த பெட்டையொன்றைத் காதலித்து, சீதனமும் டொனேசனும் வாங்காமல் அப்பாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தது வேறு கதை. ஆனால் எனது தங்கைக்கு என்னைப் போல காதல் உணர்வுள்ள மாப்பிள்ளையை என்னால் தேட முடியவில்லை. அப்பாவின் அன்றைய ஆதங்கம் அப்போது தான் எனக்குப் புரிந்தது. என்ஜினியரான என்னால் அன்றயை மாக்கட் நிலவரப்படி தங்கைக்குக் கொடுக்க வேண்டிய சீதனத்தை இலங்கையில் சம்பாதித்து சேர்க்க முடியவில்லை. இதனால் ‘திரைகடல் ஓடியும் திரவியம்’ தேடப்புறப்பட்டேன். நண்பன் ஒருவனின் உதவியுடன் ஸம்பியா நாட்டிலுள்ள பிரித்தானிய பொறியியல் நிறுவனமொன்றில் வேலை ஒன்றைப் பெற்று ஆபிரிக்கா போய்ச் சேர்ந்தேன். ஸம்பியாவில் உழைத்த பணம் தங்கைக்கு இலகுவில் நல்ல வரனைத் தேடித் தந்தது. பிரித்தானிய நிறுவணத்தில் வேலை செய்த அநுபவம், அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து செல்லும் வசதியையும் ஏற்படுத்தி தந்தது. ஸம்பியாவுக்கு ‘குட்பை’ சொல்லிப் புறப்பட்டேன். லுசாக்கா விமானநிலையத்திலே காத்திருந்த பொழுது முற்றிலும் எதிர்பாரதவிதமாக சுகுமாரை சந்தித்தேன். அமெரிக்க நிறுவனமொன்றின் கணக்காளராக ஸம்பியாவிலே தான் பணிபுரிவதாகவும் அமெரிக்காவிலிருந்து வர இருக்கும் வெள்ளைக்கார மேலதிகாரியை வரவேற்க விமானநிலையம் வந்திருப்பதாகவும் கூறினான். அமெரிக்க நிறுவனம்’ ‘வெள்ளைக்கார மேலதிகாரி’ என்பவற்றை அவன் அழுத்திச் சொல்வதாக எனக்கு தோன்றியது. சுகுமார் இன்னமும் மாறவில்லை என்ற எண்ணத்தை ஒதுக்கிக்கொண்டு ‘எவ்வளவு காலமாக இங்கிருக்கிறாய்’? எனக்கேட்டேன்.

வந்து ஆறு மாதமாகிறதென்றும், மூளையே இல்லாத காட்டு மிராண்டிகள் மத்தியில், சீவியம் கஷ்டமாக இருப்பதாகவும் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்தான். ஆபிரிக்க விமான நிலையமொன்றில் நின்றுகொண்டு அவர்களையே தரக்குறைவாக பேசுவது எனக்கு அசௌகர்யமாக இருந்தது. பேச்சின் திசையை மாற்றும் நோக்கில் ‘உன் மனைவியும் இங்கு வேலை செய்கிறாளா’? என பொதுவாகக் கேட்டேன்.

பறங்கி இனத்தவர்களுக்கு கிடைக்கும் ‘கோட்டாவில்’ தன் மனைவி அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து விட்டதாகவும், சீக்கிரமே ‘family reunion’ திட்டத்தின் கீழ் அவளுடைய Sponsor’ஐ எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினான்.

‘‘Australia is a nice country, lots of white people to live with…’’ என்று பெருமையாகவும் சொன்னான். ‘அங்கு புலம்பெயரத்தான் நானும் விமானநிலையம் வந்திருக்கிறேன்’ என்று நான் சொல்வேன் என அவன் எதிர்பார்க்கவில்லை. ‘அட, இவனும் அங்கு போகிறானா’ என்கிற ஒருவகை அசூசை அவன் முகத்தில் மின்னலடித்து மறைந்ததை அவதானித்தேன். இந்த அசௌகர்யத்தை தவிர்க்கும் நோக்குடன் ‘உன் மனைவி அவுஸ்திரேலியாவுக்கு ஒருமுறை ‘entry make’ செய்தால் பின்பு மூன்று வருடங்கள் வெளியே வாழலாம்’ என்றேன், அந்நாட்டின் குடிவரவு சட்டத்தை கரைத்துக் குடித்த பாவனையில்.

இந்த ஊருக்கா…, அவள் அங்கேயே இருக்கட்டும். சீக்கிரம் நான் அவளுடன் இணைந்து கொள்வேன்….’ என்றவன், பின் என்ன நினைத்துக் கொண்டானோ, தனது டயறியை திறந்து தன் மனைவியின் விலாசத்தை குறித்துக் கொடுத்தான். ‘முடிந்தால் அவளுக்கு ரெலிபோன் செய்து என் நண்பன் என அறிமுகப்படுத்தி ஹலோ சொல்லு. பேர்த் (Perth) நகரத்தில் ‘Motel’ நடத்தும் அவளது உறவினர்களுடன் தான் இருக்கிறாள்’ என்று அவளின் விலாசத்தையும் சொன்னான்.

நானும் சுகுமாரும் ஸம்பியா பற்றியும் இலங்கையில் தற்போது நடக்கும் இனப்போராட்டம் பற்றியும் எமது வரவேற்பறையில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அவனுடைய மனைவிக்கு எங்களடைய உரையாடல் சலிப்பை உண்டாக்கியிருக்க வேண்டும். அங்கும் இங்கும் பார்த்தவாறு கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தாள். மெதுவாக சமையலறைக்குள் நழுவி என் மனைவியிடம் விஷயத்தை சொன்னேன். என்னுடன் திரும்பிய மனைவி மிகப் பவ்வியமாக கதையைக் கொடுத்து, சுகுமாரின் மனைவியைச் சமையலறைக்கு கூட்டிச் சென்றாள். எமது உரையாடலும், ஸம்பியா இலங்கை என்று ஊர்க்கோலம் போய் இறுதியில் அவுஸ்திரேலியாவின் தற்போதைய வேலைவாய்ப்பு பற்றி ஆராய்வதில் நின்றது. சுகுமாருக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின் பட்டமொன்றில்லை. இதனால் அவன் சித்தியடைந்த ‘cost and Management accountancy‘ தராதரத்துடன் அவுஸ்திரேலிய கணக்காளர் நிறுவனத்தில் தகுதி வாய்ந்த கணக்காளராக பதியமுடியவில்லை. இதனால் அவன் ‘Public Service’ சோதனை சித்தியடைந்து சென்றர்லிங் எனப்படும் வேலை அற்றவர்களுக்கு உதவி வழங்கும் அரச திணைக்களத்தில் பொறுப்பான பதிவியிலிருந்தான். அவனுடனான உரையாடலின் போது வேலையற்றோர் பிரச்சனை பற்றிய பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு நான் குடியேறிய புதிதில் நானும் வேலை தேடி அலைந்ததுண்டு. அந்தக்காலத்தில் சுகுமார் வேலை செய்யும் இலாகாவை ‘Social Security’ இலாகா என அழைத்தார்கள். அங்குதான் வேலை கிடைக்கும்வரை ‘டோல்’ எனப்படும் உதவிப்பணம் எடுத்து வாழ்க்கையை ஓட்டினேன். பல வேலைகளுக்கு மனுச்செய்தும் வேலை கிடைக்கவில்லை. எவரும் நேர்முகப் பரீட்சைக்கும் அழைக்கவில்லை. மனுப்பண்ணியவுடன் மனுகிடைத்ததாக கடிதம் வந்தது. சில காலங்களின் பின்னர் ‘இம்முறை உங்களுக்கு வேலை தரமுடியாமைக்கு வருந்துகிறோம்’ என பவ்வியமாக கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. விளம்பரப்படுத்தும் வேலைகளுக்கு ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் ஆட்களை வைத்திருப்பார்கள் என்பதும், அவர்களை நிரந்தரமாக்கச் சட்டப்படி போடப்படும் கண்துடைப்பு விளம்பரங்கள்தான் இவை என்பது பற்றிய ஞானம் இங்குள்ள இலாகாக்களில் வேலை செய்யத் துவங்கிய பின்பு தான் தெரியவந்தது. பல முயற்சிகளின் பின்பு, பேர்த் நகரத்திலுள்ள பொறியியல் நிறுவனம் ஒன்று என்னை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்தது. சிட்னியிலிருந்து பேர்த் வரையான விமானப் பயண டிக்கட்டையும் அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அங்கு தங்கும் செலவை நான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள். ஓரிரு நாள்கள் எனது செலவில் பேர்த் நகர்தில் தங்க வேண்டுமென்றதும் சுகுமார் மனைவி குடும்பத்தின், Motel ஞாபகம் வந்தது. பேர்த் நகரம் சிட்னியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள நகரம். விமானப் பயணமே மூன்று மணி நேரம். அங்குள்ள ஹோட்டல்களின் வாடகை நிலவரம் தெரியாது. எனவே ஒரு நாளைய அறை வாடகை என்ன என்பதை அறியும் நோக்கில், ஸம்பிய விமான நிலையத்தில் சுகுமார் தந்த தொலைபேசி எண்ணைத் தேடி எடுத்து தொடர்பு கொண்டேன். மறுமுனையில் பேசியவர் நட்பு ரீதியாகப் பேசினார். சுந்தரமூர்த்தி என்று எனது முழுப்பெயரைக் கேட்டவுடன், ‘ஸ்ரீலங்கனோ அல்லது இந்தியனோ…’? எனக்கேட்டார். நான் விபரம் கூறியதும் தான் ஸ்ரீலங்காவில் வாழ்ந்த பறங்கி இனத்தவன் என்றும், அவுஸ்திரேலியாவில் ‘வெள்ளையர் மட்டும்’ என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட அறுபதாம் ஆண்டுப்பகுதியில் இங்கு வந்ததாகவும் விபரம் கூறினார். தனது Motel அறையில்தான் அங்கு தங்கவேண்டுமென்று உரிமை பாராட்டியதுடன், இருபது வீத கழிவும், காலை உணவும் வழங்கப்படுமென ‘டீல்’ வைத்தார்.

முன்பின் அறியாத இடம், அங்கு ஒருவர் உரிமையுடன் உறவு கொண்டாடும்போது அதை தட்டிக்கழிக்க விரும்ப வில்லை. பேர்த்துக்கு சென்ற நான் அவர்களது மொட்டலிலியே தங்கினேன். நான் எந்த சந்தர்ப்பத்திலும் சுகுமாருக்கும் எனக்குமுள்ள உறவை வெளிப்படுதத்தவில்லை. நேர்முகப் பரீட்சை முடிந்தது. முடிவு பின்னர் அறிவிக்கப் படுமென்றதால், மறுதினம் சிட்னி, திரும்புவதாத் திட்டம், வேலை கிடைப்பது ஐம்பதுக்கு ஐம்பதென நினைத்துக் கொண்டேன். இடையில் சுகுமாரின் மனைவியை ஒருமுறை சந்தித்தால் என்ன என்று தோன்றியது. சுகுமார் மனைவி பெயரைச் சொல்லி கவுண்டரிலுள்ள காசாளர் பெண்ணிடம் கேட்டேன். தான் அவளது சிநேகிதி என்றும், அவள் இப்போது ஒரு, ரூமேனிய ‘boy firned’ உடன் மொட்டேலுக்கு அருகிலுள்ள வீடொன்றில் வாழ்வதாகவும், கூறியவள், ‘உனக்கு அவளை இலங்கையிலேயே தெரியுமா’? எனக் கேட்டுக் குழைந்தாள். ‘நான் ஸம்பியாவிலுள்ள அவளது கணவனின் சிநேகிதன்’ என வேண்டுமென்றே கூறிவைத்தேன். காசாளர் உடனடியாக பேச்சை முறித்துக்கொண்டு கொம்பியூட்டரில் கவனத்தை பதித்துக் கொண்டாள்.

சுகுமாரை நினைக்க பாவமாக இருந்தது. அவனுக்கு பறங்கிப் பெண்ணின் வெள்ளைத்தோலிலே மோகம், அவளுக்கு ஐரோப்பிய வெள்ளைத் தோலிலே மோகம். Skin deep உறவுகள் இப்படித்தான் அலைந்து திரயுமோ…? என எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

பேர்த் வேலைக்குக் காத்திருந்தபொழுது சிட்னியிலே என் படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பதாயிற்று. அத்துடன் சுகுமார் பற்றிய சங்கதியும் மறந்துபோனது.

வீட்டிலுள்ள ரெலிபோன் மணியடித்தது. மனைவி ‘Cord less Phone’ றிசீவரை வரவேற்பறைக்கு எடுத்து வந்தாள். லண்டனில் வசிக்கும் என்னுடைய தங்கையின் அழைப்பு அது. அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர சமீபத்தில் தான் அனுமதி கிடைத்தது. இங்குள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விசாரித்தாள். உடனடியாக தகுதிக்கேற்றபடி நல்ல வேலை கிடைப்பது கடினமென்றும், படிப்படியாகத்தான் முன்னேற வேண்டுமென்றும் இங்குள்ள ‘job market’ நிலவரத்தை கூறி வைத்தேன்.

எனது மூத்த மகன் வளர்ந்து விட்டான். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பிள்ளைகளுக்கு ரியூசன் கொடுக்கும் பழக்கம் இங்கும் வந்துவிட்டது. ரியூசன் கொடுக்காவிட்டால் பிள்ளைகள் நல்ல மாக்ஸ்’ எடுக்காதென்ற பயம் பெற்றோரை இயல்பாகவே தொற்றிக் கொண்டது. சிட்னி பல்கலைக்கழக வீதியை ஒட்டிய குறுக்கு வீதியொன்றிலே ஆங்கில ரியூசன் வகுப்புக்கள் நடந்தன. ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் ஒருவர் வகுப்புக்கள் நடத்தினார். வயது போகப் போக எனக்கும் அப்பாவின் குணங்கள் தப்பாமல் தலைகாட்டின. அப்பாவோ டாக்டர் அல்லது என்ஜினியர் என்று எனக்கொரு ‘Choice‘ தந்தார். நானோ என் மகன் டாக்டராகத்தான் வரவேண்டுமென்று திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அவுஸ்திரேலிய தமிழர்கள் மத்தியிலே டாக்டர் படிப்புக்குத்தான் அதிக மவுசு. அதுபடிக்க அதிக புள்ளிகள் எடுக்க வேண்டும். வர்த்தக படிப்பு சீனர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. என்ஜீனியர் படிப்புக்கு இலங்கையில் இருக்கும் மரியாதை அவுஸ்திரேலியாவில் இல்லை. குறைந்த புள்ளிகளுடனேயே ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சென்றுவிடலாம். இவை எல்லாம் வேலைவாய்ப்புடன் கூடிய சமாச்சாரங்கள்.

மகன் பன்னிரண்டாம் வகுப்பு படித்த காலங்களில் மாறி மாறி காரில் ஏற்றி இறக்குவது என் முக்கிய பணியாயிற்று. ஆங்கில ரியூசனில் அவன் இருக்கும் ஒரு மணி நேரத்தை போக்க, சிட்னியின் பெருவீதி ‘பெமன்ரில்’ நடப்பேன். ஒருநாள் நான் வீதியை ஒட்டிய ‘Super Market’ஐ மெதுவாகக் கடந்து கொண்டிருந்த பொழுது, ஒரு பெண்மணியுடன் சுகுமார் வெளியே வந்தான். பல வருடங்களின் பின்னர் நாம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தோம். எனது தலையும் மீசையும் நரைத்திருந்தாலும் என்னை இனங்கண்டு கொண்டு ‘Hi…, சுந்தரம் எப்படி இருக்கிறாய்’? என்று சுகம் விசாரித்தான். தலைமயிருக்கு மைபூசி அவன் இளமையாக இருந்தான். அருகில் நின்ற பெண்மணியை தன் மனைவி என அறிமுகம் செய்தான்.

சந்தேகமேயில்லை. அவள் original வெள்ளைக்காரி! எனது முகத்தில் தோன்றிய பாவம் அவனுக்கு புரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் என்னுடன் பேசினால் கூட நின்ற மனைவிக்கு புரிந்துவிடும என்பதால், சுகுமார் தமிழில் பேசினான். பறங்கி மனைவி மீதுள்ள கோபம் அவனது பேச்சில் தெளிவாக வெளிப்பட்டது. பறங்கிகள் வம்பிலே பிறந்தவர்கள் என்று பொரிந்து தள்ளினான். பறங்கியரால் இலங்கையில் பாவிக்கப்படும் அனைத்து கெட்டவார்த்தைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு, தாராளமாக அவன் வாயிலிருந்து வெளிவந்தன.

பேர்த் நகரத்தில் முன்பொருமுறை, உறவினர்களின் மொட்டேலில் தங்கிய கதையை சொன்னேன். கோபத்தாலும் அவமானத்தாலும் அவனது முகம் மேலும் கறுத்து,

அந்த வேசையாலை ஒரு ஹங்கேரி காரனைத்தான் பிடிக்க முடிஞ்சுது. அவளைவிட என்னாலை முடியுமெண்டு காட்டத்தான் இங்கிலீஸ்காரியை பிடிச்சிருக்கிறன்’ என்று கூறியவன் தன் முகத்தை கைக்குட்டையால் அழுத்தி துடைத்தான்.

புருஷன் ஏதோ இக்கட்டில் இருப்பதை உணர்ந்த அந்த வெள்ளைக்காரி ‘Darling…, Let us move on…’ என நாகரீகமாக சுகுமாரை அழைத்துச் சென்றாள்.

அன்று ஆங்கில மனைவியுடன் விடை பெற்ற சுகுமார், ஐந்து வருடங்கள் கழித்து, இன்று ஒரு இலங்கை மனைவியுடன் வீட்டுக்கு வந்திருக்கிறான். மனைவியின் பெயர் ‘வதனி’, சொந்த ஊர் ‘யாழ்ப்பாணத்திலுள்ள கரவெட்டி’ ஆகிய விபரங்களை உரையாடல் மூலம் அறிந்துகொண்டேன்.

சமையலறையில் என் மனைவியும் சுகுமாரின் மனைவி வதனியும் அந்நியோன்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சுருக்கமான சமையல் முறைகள் பற்றியும், தேங்காய் பால் விடாமல் கறி சமைப்பதெப்படி என்ற விபரத்தையும் என் மனைவி, வதனிக்கு கூறிக்கொண்டிருந்தாள்.

தேநீர்க் கோப்பைகளை சமையலறை ‘சிங்’கிற்குள் வைத்துவிட்டு மீண்டும் வரவேற்பறைக்கு வந்தேன். சுகுமார், இலங்கையில் இருந்து வாரம் தோறும் வரும், சர்வதேச வாசகர்களுக்கான தமிழ்த் தினசரியை வாசித்துக் கொண்டிருந்தான்.

தமிழ் பேப்பரும் கையுமாக உன்னைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றேன் நான். இந்தக் கூற்றிலே கரவு எதுவும் இருக்கவில்லை.

என்னைப் பார்த்து புன்கைத்தவன் சிறிதுநேர மௌனத்தின்பின், ‘I missed the bus Suntharam…, உன்னைப் பார்க்க பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.’ என்றான். அவனுடைய குரல் இலேசாக உடைந்திருந்தது. என்னுடைய மகன் மிருதங்கம் வாசிப்பதில் தேர்ச்சி பெற்று வருகிறான். விரைவிலேயே ‘அரங்கேற்றம்’ வைக்க வெண்டுமென்றும் மகன் சொல்லத் துவங்கினான். மிருதங்க பயிற்சிக்கு எனது காரை எடுத்துச் சென்றவன், திரும்பும் வழியில் வயலின் வகுப்புக்கு சென்ற தங்கையையும் அழைத்து வந்தான்.

சுரிதார் உடையில் வயலினும் கையுமாக வந்த என் மகளையும் மிருதங்கத்துடன் வந்த மகனையும் கண்ட சுகுமார், ‘உன் பிள்ளைகளா…? மகன், நீ முன்னர் இருந்தது போலவே இருக்கிறான். இங்கு வந்தும் தமிழ்ப்பண்பாட்டுடன் நீ அவர்களை வளர்ப்பதைக் காண சந்தோஷமாக இருக்கிறது. கண்ணூறு படாமல் இருக்க வேண்டும்’ எனக்கூறி மேசையில் தன் முட்டியால் மூன்று தரம் தட்டினான். நான் மௌனம் காத்தேன்.

இப்போது தான் என் வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் போகிறது. இதை நான் முன்னரே செய்திருக்கலாம்’ என தனக்குத்தானே அனுதாபப்படும் தொனியில் அனுங்கினான்.

இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நான், ‘பிறகு என்ன நடந்தது..’? எனக் கேட்டேன். அன்று வெள்ளைக்கார மனைவியுடன் கண்டேன். இன்று வதனியின் மணாளனாய் வந்திருக்கிறாய். இடைப்பட்ட கதையை நான் அறிய விரும்புகிறேன் என்பதை அவன் விளங்கிக் கொண்டான் போலும்.

சுந்தரம்…, வதனி எனக்கு மூன்றாவது மனைவி. அதற்காக மணம் முடிப்பதும், விவாகரத்துப் பெறுவதும் என் பொழுதுபோக்கென எண்ணிவிடாதே. பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒரு போதும் ஒட்டாது. இது என்னைப் பொறுத்தவரை கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரமாக இருக்கலாம். இப்பொழுதெல்லாம் நான் இறைவனிடம் வேண்டுவது ஒரு குழந்தை. அது எனக்காக இல்லை. வதனிக்காகத்தான். அதற்கு என் மனதிலும் உடலிலும் தெம்பிருக்கிறது..’ எனச் சொல்லும்போது அவனது உதடுகள் நடுங்கின. சுகுமார் இரக்கத்துக்குரியவனாக என்முன் அமர்ந்திருந்தான்.

நாம் பேசுவது சமையல் அறையில் உள்ள பெண்களுக்கு கேட்கக்கூடும். எழுந்து சென்று வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் இடையேயுள்ள கதவைச் சாத்தினேன். என் செயலுக்கு அவன் தன் கண்களால் நன்றி செலுத்தினான்.

நான் இரண்டாம் முறை ஒரு வெள்ளைக்கார ஆங்கில பெண்ணை மணம் முடித்தது என்னை ஏமாற்றிய அந்த பறங்கிச்சிக்கு சவால் விடுவதற்காகத்தான். உன்னிலும் பார்க்க என்னால் அதிகம் மிதக்கவும் பறக்கவும் முடியும் என்று காட்டினேன். அவள் என்னை ஏமாற்றியதால் ஏற்பட்ட கோப உணர்ச்சிகள் என்னை வதைத்தன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் சுபாவம் என் குடும்பத்தில் யாருக்கும் இருந்ததில்லை.

அந்தப் பறங்கிச்சியை நான் உண்மையாகக் காதலித்தேன். It is my first love. அது வாழ்க்கை பரியந்தம் நிலைத்திருக்குமென மனக்கோட்டைகள் கட்டினேன். ஸம்பியாவில் நான் அவள் நினைவாகவே வாழ, இங்கு மற்றொருவருடன் அவள் உல்லாசம் அனுபவித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது யாழ்ப்பாணத்து ‘மரபணு’ நீயும் ஒரு ஆம்பிளையா? எனக் குத்திக் காட்டியது. தோல்வி, வெறுப்பு, இயலாமை இவையெல்லாம் ஒருங்கு சேர மான அவமானங்களைப் பற்றி யோசிக்காது. அந்த ஆங்கிலேய வெள்ளைக்காரியைத் துரத்தித் துரத்திக் காதலித்தேன். என்ன நினைத்தாளோ, திடீரென என்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னாள். சுவர்க்கமே என் மடியில் விழுந்தது போன்ற களிப்பில் அவளை மணந்து கொண்டேன். தேனிலவுக்கு பாலித்தீவுக்குச் சென்றோம். சீக்கிரமே இருவருக்குமுள்ள இடைவெளிகளைப் புரிந்து கொண்டோம். என் பலவீனங்களை எனக்கெதிராகச் சமார்த்தியமாகப் பயன்படுத்தினாள். என்னை அவள் ‘கறுப்பன்’ என நினைத்து நடாத்துவதான தாழ்வுச்சிக்கல் என்னுள் மேலோச்சியது. வெள்ளைத் தோலுடைய சிநேகிதர்களுடன் அவள் பழகுவதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கினேன். பாசமும் புரிந்துணர்வும், இருக்க வேண்டிய இடத்தில், சந்தேகமும் அவநம்பிக்கையும் புகுந்துகொண்டன. தினமும் சண்டை. வீட்டுக்கு மூக்குமுட்டக் குடித்துத் திரும்பினாள். சில சமயம் இளம் பெண்களை ‘ஒருபால்’ உறவுக்காக அழைத்துவந்தாள். புதுப்புதுச் சிநேகிதிகள். படுக்கை அறையையே நரகமாக்கினாள்…’ எனச் சொல்லி நிறுத்தியவன், தன் விரல்களால் கண்களை மூடி மௌனமானான்.

சுகுமாரின் மன உளைச்சலைத் தீர்க்கும் என்ற எண்ணத்தில் எழுந்து, எனது வீட்டிலுள்ள barக்கு சென்று விஸ்கிப் போத்தல், ஐஸ், கலப்பதற்கு சோடா, இரண்டு கிளாஸ்கள் சகிதம் மீண்டும் வரவேற்பறைக்குத் திரும்பினேன்.

சுந்தரம், கொண்டுபோய் இதை வைச்சிட்டு வா. நான் இதைவிட்டு இரண்டு வருடங்களாகின்றன. இப்போது நான் மாமிசமும் சாப்பிடுவதில்லை. ‘நான் யார்…?’ என்ற அடையாளம் பற்றிய உணர்வு வயசு ஏறஏறத்தான் மனிதனுக்கு ஏற்படுகிறது போலும்’, என்று கூறி வறட்சியுடன் சிரித்தான் சுகுமார்.

அவுஸ்திரேலியாவில் விவாகரத்து என்பது ஆண்களை பொருளாதார வீழ்ச்சிக்குள் வீழத்தும் சமாச்சாரம். எனவே, ‘இரண்டு விவாகரத்துக்களையும் அவுஸ்திரேலியாவில்தான் பெற்றுக்கொண்டாயா’? எனக் கேட்டேன்.

முதலாவது விவாகரத்தில் எந்தவித பிரச்சனையும் இருக்கவில்லை. கேட்டவுடன் கையெழுத்து போட்டுவிட்டாள். இங்குள்ள ஸ்ரீலங்கன் Embassy மூலமாக விவாகரத்தை பெற்றுக்கொண்டேன். வெள்ளைக்காரியோ தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறி நஷ்டப்பணம், ஜீவனாம்சம் என்று ஸம்பியாவில் நான் உழைத்ததெல்லாவற்றையும் ஒட்டக் கறந்துவிட்டாள்…’ என்றவன் பேச்சை நிறுத்தி குடிக்கத் தண்ணீர் கேட்டான். கிளாஸில் தண்ணீர் கொண்டு வந்து அவன் முன் வைத்தேன். ஒரே மூச்சில் குடித்து முடித்தவன் வதனியின் கதையை தொடர்ந்தான்.

நான் ஸம்பியா போன காலந்தொடக்கம் அம்மாவுடன் எனக்கிருந்த தொடர்பு அறுந்துவிட்டது. எல்லாவற்றையும் இழந்து நான் நடுத்தெருவுக்கு வந்தபோது தான், அம்மாவினது நினைவு வந்தது. குடும்பத்துக்கு நான் ஒரே பிள்ளை, இறுதிக்காலத்தில் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா என்பதை எண்ணி இப்போது நான் வருந்தாத நாளில்லை. போதுமடா சாமி என்ற எண்ணத்தில்தான் ஒரு வழி ரிக்கற் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு போனேன்’ என்று நிறுத்தியவன் முகத்தை வேறு திசையில் திருப்பினான். இருப்பினும் அவன் கண்கள் பனித்திருந்ததை நான் அவதானித்தேன்.

உன் அம்மா நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த காலத்தில் இறந்திருக்க வேண்டும். சிட்னியிலும் விற்பனையாகும் ஞாயிறு வீரகேசரியில் அவருடைய மரண அறிவித்தலைப் பார்த்ததாக நினைவு’ எனக்கூறிய நான், ‘நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். பழையதைக் கிளறிப் பார்த்தால் மனசுக்குத்தான் வலி…’ என நான் ஆறுதல் கூறினேன்.

சுகுமார் மௌனமாக இருந்தான். பின்னர் ரொயிலெற் எங்கே இருக்கிறது எனக்கேட்டு சிறுநீர் கழிக்க எழுந்து சென்றான். மீண்டும் வந்தமர்ந்தவன், ‘உனது ரொயிலொற்றுக்குள் நீ பிரேம் போட்டு மாட்டியிருக்கும் படத்தின்கீழ் உள்ள வாசகம் படித்தேன். ‘Nobody is perfect’! உண்மைதான் சுந்தரம்.

உனக்கு என் சுபாவம் ஓரளவு தெரியும். எதையும் காலம் கடந்ததாக நான் நினைப்பதில்லை. கொழும்பிலே எமது வீட்டருகே இருந்த மாமா ஒருவர்தான் எனக்கொரு புதிய பாதையைக் காட்டினார். அவர் அங்கு அனாதரவற்றவர்களுக்காக ஆசிரமம் ஒன்று நடத்தி வருகிறார். வதனிபற்றி அவர்தான் முன்மொழிந்தார். போர்சூழலில் பெற்றோர் உற்றார் அனைவரையும் இழந்தவள். அவளுடன் நான் ஒரு வாரம் பழகினேன். இருவருக்கும் பிடித்துக் கொண்டது. வயது வித்தியாசம் பாராமல் மனமொத்து திருமணம் செய்து கொண்டோம்’ என்ற சுகுமார், ‘ஒன்று சொல்லட்டுமா’? எனக் கேட்டுச் சிரித்தான். இப்பொழுது அவனது முகதத்தில் அமைதி குடிகொண்டிருந்தது.

சொல்லு…’ என்று நானும் சிரித்தேன்.

திருமணத்துக்கு பின்னர் ஏற்படும் காதலிலே அதிகம் தமிழ் மணம் வீசுமோ…’? என்று கூறி சூழ்நிலையை மறந்து, இயல்பாகக் குரல் எழுப்பிச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பொலி, வதனியின் செவிகளிலே கூட விழுந்திருக்கக் கூடும்.

-ஆசி கந்தராஜா- (2005)

No comments:

Post a Comment