Sunday 24 January 2021

 குறுநாவல் 2:

அடிவானம்

ஆசி கந்தராஜா

 

ன்று அரசு விடுமுறை!

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இரண்டு துருவங்களாக இருந்த, கிழக்கு மேற்கு ஜேர்மனிகள் மீண்டும் ஒன்றிணைந்த நாள். அதை நினைவு கூர அன்று பொதுவிடுமுறை. விடுமுறை என்றால் சோம்பலை அடைகாத்துப் பொழுதைப் போக்குவது தான் வீரசிங்கத்தின் விருப்பம். அவருடைய விருப்பத்தைக் கடைக்குட்டி மகன் உடைத்தெறிந்தான். சமையலறையில் அவன் பிரளி செய்து கொண்டிருந்தான்.

என்னப்பா… இவனை உந்த Parkக்கு கூட்டிக்கொண்டு போய் வாருங்கோவன். அவனுக்குக் கொஞ்சம் பிராக்காக இருக்கும்.’

சமையலறை அலுமாரிக்குள் இருந்த சாமான்களை இழுத்துப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த மகனின் காதைத் திருகியவாறே மனைவி சத்தம் போட்டாள்.

மனைவியின் சத்தத்தை மகனின் அழுகுரல் அமுக்கியது. பிரளயத்தின் ஓசை கட்டவிழ்க்கப்பட்டதைப்போல… இனி சோம்பலாவது? அதனை அடைகாத்தலாவது? மகனைத் ‘தாஜா’ செய்தவாறு வீதியில் இறங்கினார்.

பேர்லின் (Berlin) நகரில், Turm வீதிக்கும் Altmoabit சாலைக்கும் இடையே குழந்தைகள் விளையாடுவதற்காகப் பூங்கா ஒன்றுண்டு. பூங்காவையொட்டி என்றுமே இலை உதிர்க்காத ‘பைன்’ மரங்களும், குளிர் காலத்தில் இலையை உதிர்த்து நிர்வாணமாய் நிற்கும் ‘லார்ஷ’ ‘பப்ப’ போன்ற மரங்களும் நேர்த்தியாக நடப்பட்டிருந்தன. இயந்திரகதியில் இயங்கும் ஜேர்மன் பெருநகரங்களில் மாசுபடும் சூழலைச் சமப்படுத்த இப்படியான ‘Man Made’ ஊடுகாடுகள் அமைக்கப்படுவதுண்டு. பூங்காவிலே மக்கள் நடமாட்டத்துக்குக் குறைச்சல் இல்லை. பகல் நேரங்களில் பெரும்பாலும் கிழவிகள் கூட்டத்தின் அரட்டை அரங்கமாக இது பயன்படும். ஊடுகாட்டின் விளக்குக் கம்பங்களின் கீழே அமைக்கப்பட்டு இருக்கும் இருக்கைகள் இதற்குத் தோதானவை. யுத்தத்திலே அதிக ஆண்கள் இறந்துவிட, இந்தக் கிழவிகள் தனிமையில் எதிர்நீச்சலடித்து வாழ்வில் வெற்றி சாதித்தவர்கள். மாலையானதும் ‘Penners’ என அழைக்கப்படும் நித்திய குடிகாரர்கள், போதை மயக்கத்திலே இவ்விருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வார்கள். ஜேர்மனியில் பேப்பர்கடை, காய்கறிக்கடை, சாப்பாட்டுக்கடை என எல்லாக் கடைகளிலும் மதுப்போத்தல்கள் ‘மினிக் குவாட்டர்’ சைஸ் வரை வெவ்வேறு வடிவங்களில் விற்பனைக்குண்டு. நித்திய குடிகாரர் பைகளிலே, எப்போதும் இத்தகைய மினிக்குவாட்டர் போத்தல்கள் கைவசம் இருக்கும். போதை தெளியும் போதெல்லாம் இவற்றைக் குடித்துவிட்டு மின்கம்பங்களின் கீழேயுள்ள இருக்கைகளிலே சுருண்டு படுத்துக் கொள்வார்கள். இவர்கள் தமது உறவைத் தொலைத்தவர்கள், மது போதையிலே வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள். பூங்காவிலுள்ள மணல் கிடங்கொன்றிலே, மகன் விளையாடிக் கொண்டிருந்தான். காலாறச் சிறிது தூரம் ஊடுகாட்டினூடே நடந்தார் வீரசிங்கம், நீண்டு வளர்ந்த

பைன் மரங்களுக்கு மத்தியில் மின் கம்பத்தையொட்டிப் போடப்பட்ட இருக்கையொன்றில் ஒரு உருவம் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. பார்த்த மாத்திரத்தில் அவன் ‘நித்திய குடிகாரன்’ வகையைச் சேர்ந்தவன் அல்ல, என்பதை ஊகித்துக் கொண்டார். சட்டை கசங்கி ஊத்தையாக இருந்தது. இருக்கையைச் சுற்றி காலியான ‘வொட்கா’ மினிக்குவார்ட்டர் போத்தல்கள் சிதறிக்கிடந்தன. வீரசிங்கம் உற்றுப்பார்த்தார்.

றொனால்ட்…! வீரசிங்கத்தால் நம்பமுடியவில்லை.

இவன் எப்படி…? இங்கே…? இந்தக் கோலத்தில்…?’ என்று பல வினாக்கள் ஏக காலத்தில் எழுந்தன. அருகில் சென்றார். சந்தேகமே இல்லை. றொனால்ட் சுல்ஸ் தான்! ஒரு காலத்தில் அவன் வீரசிங்கத்தின் ஆத்ம நண்பன். பத்து ஆண்டுகள் அவன் ஒரு திசையிலும், இவர் வேறு திசையிலும் பயணித்து விட்டார்கள். இன்று திடீரென இந்தக் கோலத்தில் சந்திப்பு நிகழ்கின்றது. இவன் எப்படி இந்தக் கோலத்துக்கு வந்தான்?

வீரசிங்கம் திரும்பிப் பார்த்தார். மகன் சுவரஸ்யமாக மணற்கிடங்கிலே தன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.

அவனுடைய தோள்களை இரண்டு தடவைகள் உலுக்கி, ‘றொனால்ட் என்னைத் தெரிகிறதா…?’ என்று கேட்டார். தலையை நிமிர்த்தினான். கண்களைச் சுருக்கி உற்றுப்பார்த்தான். ‘அங்கிள் வீரா’ என்றான். குடிவெறியிலும் வீரசிங்கத்தைப் பார்த்த மகிழ்ச்சி அவன் முகத்திலே பரவியது. அவனது குழந்தைகள் அவரை ‘அங்கிள் வீரா’ என்றே அழைப்பார்கள். மரியாதையின் நிமிர்த்தம் அவனும் அவனது மனைவியும் அவ்வாறே அழைத்துப் பழகிவிட்டார்கள்.

என்ன றோனால்ட், இது என்ன கோலம்…! என்று வார்த்தைகளை விக்கினார் வீரசிங்கம்.

உன்னால் இதை நம்பமுடியவில்லை, இல்லையா? இதுதான் ஒன்றிணைந்த ஜேர்மனி பெற்றுத்தந்த பரிசு…’ எனக் கூறிச் சுரத்தின்றிச் சிரித்தான்.

நீ இப்போது எங்கே வசிக்கிறாய்? உனது மனைவி சுகமாக இருக்கிறாளா? உனது மகன்கள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாய் இருப்பார்களே…? அவர்களெல்லாம் எங்கே…?’ என்று நிலைமைகளை மறந்து உணர்ச்சிகளின் உந்துதலினால் கேள்விகளை அடுக்கினார்.

கேள்விகள் கேட்காதே நண்பனே… உன் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய நிலையிலும் நானில்லை. உன்னிடம் இருபது ‘டொயிஸ் மார்க்’ பணமிருந்தால் தந்துவிட்டுப்போ…, நான் குடிக்க வேண்டும்… போதை முறிவதற்கிடையில் குடிக்க வேண்டும்…! உதவி கேட்டபொழுதுகூட அவனுடைய கம்பீரம் குறையவில்லை.

அவனைக் கையுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லவே வீரசிங்கம் விரும்பினார். இந்த நிலையிலே அவனை அழைப்பது சரியா? வீரசிங்கத்தின் மனம் குழம்பியது.

என்வீடு அருகில்தான் இருக்கிறது’ என்னு இழுத்தார்.

அது இருக்கட்டும். பணம் உண்டா இல்லையா…?’ வீரசிங்கம் நிதானமடைந்தார். ஐம்பது டொயிஸ் மார்க்(DM) பணத்தை அவன் கைகளிலே திணித்தார். ‘அதிகம் குடிக்காதே… உன்னை நான் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் றொனாஸ்ட்’ என அன்புடன் சொன்னார்.

மேற்கு பேர்லின் பல்கலைக்கழகத்திலே நீ வேலை செய்வதாகக் கூறியது ஞாபகம் இருக்கிறது. நாளை அங்கு வந்து உன்னைச் சந்திப்பேன். நிச்சயம் வருவேன். இப்பொழுது என்னைத் தொந்தரவு செய்யாதே…’ என்றவாறு பணத்தைத் தனது பொக்கற்றிலே திணித்தபடி எழுந்தான்.

மறந்துவிடாதே, நாளை முழுவதும் எனது அலுவலக அறையிலேயே இருப்பேன். வந்துசேர்…’ வீரசிங்கம் பேசியதை றொனால்ட் செவி மடுத்திருப்பானோ என்னவோ, அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள கடையொன்றுக்கு விரைந்து கொண்டிருந்தான். அவனுக்கு இப்பொழுது உடனடித் தேவை, மது மட்டுமே!

 

2

சோசலிஷ ஆட்சி வியாபித்திருந்த காலத்தில் கிழக்கு ஜேர்மனியில் பிறந்து வளர்ந்தவன் றொனால்ட்- சுல்ஸ். கார்ல்மார்க்ஸ், லெனின் வழிவந்த சோசலிஷ தத்துவங்களை ஏற்ற சமுதாயத்தின் உண்மையான பிரதிநிதியாகவே அவன் வளர்ந்தான். பல்கலைக்கழக புகுமுக வகுப்பிலே, மாநிலத்திலேயே முதலாவது மாணவனாகத் தேறி Dresden பல்கலைக்கழகத்திற்கு றோனால்ட் வந்திருந்த போதுதான் வீரசிங்கம் முதன்முதலாக அவனைச் சந்தித்தார். ஒரு காலத்தில் ஸ்ரீமாவோ ஆட்சியின்கீழ் இலங்கை தன்னை சோசலிஷ நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. இது சோசலிஷ நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்குச்

செல்லும் வாய்ப்பினை இலங்கை மாணவர்களுக்கு பெற்றுத்தந்தது. வீரசிங்கமும் புலமைப்பரிசில் ஒன்றினைப் பெற்று Dresden பல்கலைக் கழகம் சென்றார். முதலாளித்துவ நாடுகளுக்கும் கொம்மியூனிஸ்ட் நாடுகளுக்கும் இடையில் ‘பனிப்போர்’ நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. இரு முகாம்களும் கண்களுக்குத் தெரியாத இரும்புத்திரையால் பிரிக்கப்பட்டிருந்தன. இதனால் மேற்குலக நாட்டின் புதினங்களை அறிவதற்கும் அந்நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும்

சோசலிஷ நாடுகளில் மறுக்கப்பட்டன. ஆனாலும். றொனால்ட் முற்றிலும் மாறுபட்டவனாக காணப்பட்டான். புதியனவற்றை அறிவதில் மிகுந்த ஆர்வம் அவனுக்கிருந்தது. ஜேர்மன் அவனது தாய்மொழி. சோசலிஷ நாடொன்றில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ரூஷ்ய மொழியுடன், ஆங்கிலத்தையும் விரும்பிக் கற்று புலமை பெற்றிருந்தான். வீரசிங்கமும் றொனால்டும் வனவியல் துறையிலே சேர்ந்திருந்தார்கள். அது சற்றே கடினமான கற்கை நெறி, வனவியல் பிரிவு, செய்முறை வகுப்புகளுக்குத் தோதாகக் காட்டை மருவிய கிராமம் ஒன்றிலேயே அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்க நேர்ந்தது. இரு மாணவர்களுக்கு ஒரு அறை. வீரசிங்கத்திடம் மேற்குலகில் பிரசுரமான பல அரிய நூல்கள் இருந்தன. அவற்றை வாசிக்க றொனால்ட் அதீத ஆர்வம் காட்டினான். இதனால் றொனால்ட், வீரசிங்கத்துடன் விடுதி அறையொன்றைப் பகிர்ந்து கொண்டான். நூல்களிலே உள்ள பரஸ்பர ஈடுபாட்டினால் இருவரும் விரைவில் நெருங்கிய நண்பர்களானார்கள். படிப்பில் மட்டுமல்லாது றொனால்ட் வாழ்விலும் சிறிது வேகத்தைக் காட்டிவிட்டான். பதினோராம் வகுப்பு படிக்கும் போது இவன் மோனிக்காவைச் சந்தித்துக் காதலித்தானாம். இங்கெல்லாம் காதல் என்பது குடும்ப வாழ்க்கைக்கான வெள்ளோட்டந்தான். பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் றொனால்ட் படிக்கும்போதே மோனிக்கா வயிற்றில் குழந்தை உருவாகிவிட்டது. மாணவிகள் கருத்தரித்தலும் அதனைச் சிதைத்தலும் மேற்கு நாடுகளிலே பெரிதாகப் பாராட்டப் படும் பாவகாரியமல்ல. இருந்தாலும், றொனால்ட் தனது ஆண்மைக் கடமையை ஏற்கவே விரும்பினான். விடலைப் பருவத்துக் கனவுக் காதலின் அவசர விளைவல்ல அது என்பதிலே உறுதியாக இருந்தான். மோனிக்காவை அழகி என்பதிலும், பார்க்கப் பேரழகி என்பதே பொருத்தமானது. இரண்டு குழந்தைகளின் பின்பும் அவள் குமரிபோலவே காணப்பட்டாள். மோனிக்கா பத்தாம் வகுப்பை முடித்திருந்ததினால், முதல் குழந்தை பிறந்ததும் இரண்டாண்டு தாதிப் பயிற்சியை முடித்து தாதியானாள். தாதியானாதும் மீண்டும் மோனிக்கா கருத்தரித்தாள். இரண்டு ஆண் குழந்தைகளுடன் மோனிக்கா அவனுடன் வாழவந்த பொழுது றொனால்ட் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். பல்கலைக்கழக விடுதிக்கு அருகே வீடொன்றை வாடகைக்கு எடுத்து றொனால்ட் குடும்பத்துடன் வாழத் தலைப்பட்டான். மூத்த பையன் ‘வீரா அங்கிள்’ என்று அழைக்கத் துவங்கியதனால் றொனால்ட் குடும்பத்திலே, வீரசிங்கத்தின் பெயர் ‘வீரா அங்கிளாக’ மாறி அக்குடும்பத்தின் உற்ற நண்பனாய் உள்வீட்டுப் பிள்ளையானார். ஆறு ஆண்டுகள் எப்படி ஓடியதென்று நிதானிக்க முடியவில்லை. ஆறாண்டு கால பட்டப்படிப்பினை முடித்த பின்னர் வீரசிங்கம் எல்லையைக் கடந்து மேற்கு பேர்லின் வந்துவிட்டார். றொனால்ட் கிழக்கு ஜேர்மனியில் உதவி வனப் பாதுகாவலர் பதவியைப் பெற்றுத் தன் குடும்பத்துடன் வாழ்ந்தான்.

மேற்கும் கிழக்கும் தம்மை விரோதிகளாகப் பாவித்து ஆளப்பட்டதினால், அவர்களால் நட்பையும் தொடர்பையும் பாராட்டி வளர்ப்பது இலகுவாக இருக்கவில்லை. வீரசிங்கமும், குடும்பம் குழந்தை என வாழத் துவங்க, மேலதிக பொறுப்புக்களும் வந்து சேர்ந்ததினால் நண்பர்களிடையே இருந்த கொஞ்ச நஞ்ச தொடர்பும் விட்டுப் போயிற்று. இப்பொழுது இந்தக் கோலத்தில் றொனால்ட்டைப் பூங்காவில் பார்த்ததும் இனந்தெரியாத துக்கம் அவரை வளைத்துக் கொண்டது.

 

3

ண்பத்து மூன்றாமாண்டு இனக்கலவரத்தின்பின் தமிழர்கள் ஜேர்மனிக்கு அதிகளவில் அகதிகளாக வரத் தொடங்கினார்கள். மேற்கு ஜேர்மனிக்குள் விசா இன்றி நுழைவதற்கு இவர்கள் கிழக்கு – மேற்கு பேர்லின் எல்லையையே நுழைவிடமாக பாவித்துக் கொண்டார்கள். பிரிந்த இரு நாடுகளின் பூகோள அமைப்பும், பேர்லின் நகரின் அரச வீதிகளும் கிழக்கு பேர்லின் விமான நிலையத்தில் இருந்து நேரடியாகவே றெயின்மூலம் மேற்கு பேர்லினுக்குள் நுழைவதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. மேற்கு பேர்லின் நகரம் கிழக்கு ஜேர்மனிக்குள் இருந்தாலும், அது மேற்கு ஜேர்மனியின் ஆளுகைக்குட்பட்டது. எனவே இங்கு வந்து சேர்ந்துவிட்டால் மேற்கு ஜேர்மனிக்கான அகதி அந்தஸ்து கோரும் நடவடிக்கைகளைத் துவங்கலாம். தமிழ் அகதிகள் தமது அந்தஸ்து கோரும் விண்ணப்பங்களைப் பெரும்பாலும் தமிழிலேயே எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் ஜேர்மன் மொழியும் தமிழ் மொழியும் நன்கறிந்த ஒருவரின் உதவி அகதிகள் பற்றிய விசாரணை நடத்துவோருக்கு உடனடியாகத் தேவைப்பட்டது. பல்கலைக்கழகத்திலே பணிபுரிந்த வீரசிங்கத்தின் சேவையை மேற்கு ஜேர்மன் அரசு பகுதி நேர அடிப்படையில் பெற்றுக்கொண்டது. இப்பணியை வீரசிங்கம் தமது தமிழ் உணர்வின் வடிகாலாய் சிரத்தையுடன் மேற்கொண்டார். தமிழ் அகதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதெல்லாம் உரிமைக்குரல் எழுப்பிய வீரசிங்கத்தை தமிழ் அகதிகள் அங்கு பெரிதும் மதித்தார்கள். அன்றைய தினம் எல்லையைக் கடக்கும் போது

தமிழ் அகதிகள் சிலர் மேற்கு ஜேர்மன் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்கள். அவர்களை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்திலே ஆஜர் செய்ய வேண்டுமென்பது விதி. அவர்கள் சார்பான விசாரணைகளை மொழிபெயர்த்து முடித்துக் கொடுக்க இரவு பத்து மணியாகிவிட்டது. ஓய்வின்றி வேலை செய்ததினால் அசதி, சுரங்க வண்டியில் பயணித்தபொழுது வீரசிங்கம் அசந்து தூங்கிவிட்டார்.

அண்ணை உங்களோடை ஒருக்ககால்’ கதைக்கலாமே…?’ அருகில் கேட்ட தமிழ்க்குரல் அவரை உசுப்பியது. கண் விழித்தபொழுது எதிரில் தவமணி. சின்னராசாவின் மனைவி. வேலைக் களைப்புடன் அவள் வந்து கொண்டிருக்கிறாள் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே வீரசிங்கம் மட்டிட்டுக் கொண்டார். சின்னராசா பேர்லினுக்கு வந்த புதிதில், மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் அகதி அந்தஸ்துக்கான விசாரணைக்கு வந்திருந்தான். அந்த விசாரணையில் வீரசிங்கமே மொழிபெயர்ப்பாளர். அப்பொழுது அவர் சின்னராசாவின் குடும்பப் பின்னணி முழுவதையும் அறிந்து கொண்டார்.

சின்னராசா கொழும்பிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் வேலைபார்த்தவன். சுற்றி வளைத்துப் பார்த்தால் முதலாளி தூரத்து உறவு. அவன் விடுமுறைக்கு ஊருக்கு வரும்பொழுதெல்லாம் ஒரு குட்டி முதலாளி போன்ற எடுப்புகளுடனே வலம் வருவான். ஆயுர்வேத வைத்தியத்தினைப் பரம்பரையாகக் கற்றிருந்தாள் தவமணி. கூட்டிக் கழித்து;ப பார்த்தால் ஒன்றுக்குள் ஒன்றும்! இனிதே திருமணம் முடிந்து இரண்டு பையன்களும் பிறந்து விட்டார்கள். இந்தக் கட்டத்திலேதான் எண்பத்திமூன்றாமாண்டு இனக் கலவரம் கொழும்பை உலுக்கியது. சின்னராசா வேலை செய்த வர்த்தக நிறுவனம் தரைமட்டமாக்கப்பட்டது. ஊருக்குச் சென்ற சின்னராசா கடும் முயற்சிகளின் பின்னர் எப்படியோ குடும்பத்துடன் பேர்லின் வந்து சேர்ந்துவிட்டான். விசாரணையின் போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் வளர்ந்தது. மருத்துவ உதவி பெற, சமூக சேவைப் பணம் பெற என உதவிகேட்டு வீரசிங்கம் வீட்டிற்கு சின்னராசா குடும்பம் வந்து போகத் துவங்கியது.

தவமணி இப்போது வீரசிங்கத்தின் முன் நின்றுகொண்டு இருக்கிறாள். காலியாக இருந்த எதிர் ஆசனத்தை அவர் கை காட்டவே தவமணி அதில் அமர்ந்தாள். மௌனம் நிலவியது.

சொல்லுங்கோ… என்ன விஷயம், வேலையாலை வாறியள் போலை…’ என்று வீரசிங்கம் சகஜ நிலையை ஏற்படுத்த முயன்றார்.

ஓமண்ணை, இத்தாலி றெஸ்றோரன்ற் ஒண்டிலை வேலை செய்யிறன். குசினி வேலைதான். நாள் முழுக்கப் பாத்திரங்கள் எண்டும் கோப்பைகள் எண்டும் கழுவிக் கழுவி தோள் மூட்டெல்லாம் இத்துப் போச்சுது…’ சொல்லும்போதே தவமணியின் கண்கள் பனிப்பதை அவர் அவதானித்தார்.

அடுத்த ஸ்ரேசனிலை நான் இறங்கவேணும்…’

தெரியும் அண்ணனை…!’

ஸ்ரேசன் வரவே வீரசிங்கம் இறங்கினார். சற்றும் எதிர்பாராதவிதமாக தவமணியும் இறங்கினாள். ஏதோ சொல்ல அவள் விக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது அவருக்கு விளங்கிவிட்டது.

பயப்படாமல் சொல்லுங்கோ… ஏதாவது உதவியென்றால் நான் செய்யக்கூடியதை செய்யிறன்’ என்று அவளை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவர முயன்றார்.

அண்னை… என்ரை பிள்ளையள் இப்ப பசியோடை கிடக்குங்கள். இனித்தான் போய் ஏதாவது சமைச்சு அதுகளுக்குக் கொடுக்க வேணும்… என்னாலை இதுக்கு மேலை தாங்கேலாது. உங்களிட்டை சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்ட வேணுமெண்டு கனகாலம் யோசிச்சனான்…’ என்று தவமணி அழத் தொடங்கினாள். அவள் கொட்டிய கண்ணீர் அவரைக் கரைத்தது.

என்ன நடந்தது தங்கச்சி…? சின்னராசா எங்கை…? அழாதேங்கோ…’ என்றார் வீரசிங்கம்.

விம்மி அழுதபடி குளிருக்குப் போட்டிருக்கும் ஓவர் கோட்டை, தவமணி மெல்லக் கழற்றினாள். அடித்தழும்புகளும் சூடுவைத்த காயங்களும் கழுத்திலும் கைகளிலும் கோரமாகத் தெரிந்தன. வீரசிங்கத்தின் புருவங்கள் உயர்ந்தன.

அண்ணை… இதெல்லாம் வெளியிலை தெரியிற காயங்கள். வேலைக்கும் போகாமல் ‘சோசல்லை’ வாற ‘டோல்’ பணம் எல்லாத்தையும் குடிச்சு முடிச்சுப் போட்டு எனக்கும் பிள்ளையளுக்கும் அடியும் உதையும்தான். பிள்ளையள் பட்டினி கிடக்கிறதைப் பார்க்கேலாமல்தான் இத்தாலிக்காறன்ரை சாப்பாட்டுக் கடையிலை இந்த நேரத்திலை வேலை செய்யிறன். இனி வீட்டை போய் பார்த்தால் வயித்தைப் பத்தி எரியும். பிள்ளையள் பசியிலை சுருண்டு கிடக்கும். எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கும். இவர் நிறைவெறியிலை இருந்து சண்டித்தனம் பேசுவார்… இனிச் சமைச்சு முடிஞ்சு சாப்பாடு குடுத்தாலும் நிம்மதியாய்ப் படுக்கவும் விடமாட்டுது மனுஷன். இந்தக் கிலிசகேடுகளை வாயலை சொல்லவும் ஏலாது…’

நான் ஒருக்கா சின்னராசாவோடை கதைச்சுப் பார்க்கட்டுமே…’ என்று வீரசிங்கம் சொல்லத் தொடங்க, அவள் பதைபதைப்புடன் இடைமறித்தாள்.

கேட்டுப் போடாதேயுங்கோ அண்ணை. ஏனடி சொன்னீ எண்டு அந்தாள் என்னை அடிச்சுக் கொண்டுபோடும். ராத்திரி எனக்கு அடிச்ச அகோரத்தைப் பார்க்கமாட்டாமல் என்ரை சின்னப் பொடியன் தகப்பனை வெட்டக்கத்தியை தூக்கியிருக்கிறான். அந்தப் பாலனுக்கே இந்தளவு வெறுப்பெண்டால் என்னண்டண்ணை இந்தாளோடை இந்தப் பிள்ளையளை வைச்சுக்கொண்டு காலம் தள்ளுறது…?

சின்னராசாவோடை கதைக்கவும் வேண்டாம் எண்ணிறியள்… அப்ப நான் என்ன செய்ய வேணும்? சொல்லுங்கோ…’

எனக்கும் பிள்ளையளுக்கும் சமூக சேவை இலாகா விலை சொல்லி இலங்கைக்குத் திரும்பிப் போக ரிக்கற் எடுத்துத் தாங்கோ… வெளிநாடு எண்டு ஓடி வந்து சீரழிஞ்சது போதும். உங்களைத்தான் நம்பியிருக்கிறன். இந்த நரக வேதனையிலை இருக்கிறதிலும் பார்க்க ஊரிலை போய் என்ரை ஆயுர்வேத வைத்தியம் பார்த்தெண்டாலும் என்ரை குஞ்சுகளுக்கு நான் கஞ்சி ஊத்துவன்…’

தவமணியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இருப்பினும் இது குடும்பப் பிரச்சனை. எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது என்பதையும் நிதானித்தார்.

எதுக்கும் எனக்கு இரண்டு மூன்று நாள் அவகாசம் தாருங்கோ… முடிஞ்சதை செய்யிறன்…’ என்று நடக்கத் துவங்கினார்.

என்னைக் கை விட்டிடாதேயுங்கோ அண்ணை…’ என்று அவள் கெஞ்சியது அவரது நெஞ்சக் குகையிலே நீண்டநேரமாக எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.

 

 

4

றொனால்ட் வாக்குத் தவறவில்லை. சொன்ன பிரகாரம் வீரசிங்கத்தைக் காணப் பல்கலைக்கழகம் வந்திருந்தான். முகச்சவரம் செய்து, அன்று ஒழுங்காக உடையணிந்திருந்தான்.

வீரா… எப்படியிருக்கிறாய்…? நெடு நாளைக்குப் பிறகு சந்திக்கிறோம்’ என்றவாறே கட்டித் தழுவினான்.

நான் நல்லாய்தான் இருக்கிறேன். உனக்கென்ன நடந்தது…? எப்பொழுது தொடக்கம் இந்த மினிப் போத்தல் மது அருந்தும் பழக்கம்…? மோனிக்கா மது விடயத்தில் கண்டிப்பானவளல்லவா…?’ எனக் கேள்விகளை அடுக்கினார் வீரசிங்கம்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த றொனால்ட், நீண்டதொரு பெருமூச்சை வெளியே விட்டவாறே, ‘மோனிக்காவும் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்கள். இந்நாட்டின் வரைவிலக்கணத்தின்படி இப்போது நான், வீடு வாசலற்ற தெருப்பொறுக்கி’ என்றான் விரக்தியுடன்.

வீரசிங்கத்துக்கு தலை விறுவிறுத்தது. இருபது வருட மகிழ்ச்சிகரமான தாம்பத்தியம். ஜேர்மன் மக்களிடம் வழமையாக இல்லாத கணவன் மனைவி ஒற்றுமை அவர்களது. எப்படிப் பிரிந்தது அவர்களுடைய குடும்பம்…?

றொனால்டின் மனைவி ஆடம்பரத்தை விரும்புவள் கிழக்கு – மேற்கு ஜேர்மனிகள் இணைந்ததும் மேற்கின் நாகரிகமும் ஆடம்பரப் பொருட்களும் கிழக்கு ஜேர்மனிக்குள் விரைவாகவும் தாராளமாகவும் நுழைந்தன. சோசலிஷ அமைப்பின்கீழ் கட்டுப்பாடாகவும் அமைதியாகவும் வாழ்ந்த றொனால்ட் குடும்பமும் புதிய அலையினால் எற்றுண்டு விரைவாகவே பணம் சேர்க்கும் முதலாளித்துவ போக்குக்கு அடிபணிந்தது. வன இலாகாவில் செய்த வேலையை விட்டு விட்டு, கட்டிடங்களுக்கான மரவியாபாரத்தில் இறங்கினான் றொனால்ட். சோசலிஷ அமைப்பின்கீழ் வளர்ந்த அவனால் முதலாளித்துவத்தின் லாப நஷ;டக் கணக்குகளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அடுத்த வருடம் லாபம் வந்துவிடும்’ என்கிற நம்பிக்கையுடன் ஐந்து ஆண்டுகளாகத் தனது புதிய வியாபாரத்தினை முன்னுக்குக் கொண்டுவரப் பெரிதும் முயன்றான். முடியவில்லை. வியாபாரம் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள் நஷ்டப்பட்டுக் குடியிருந்த வீடு, கார் மற்றும் உடைமை எல்லாவற்றையும் வங்கிக் கடனுக்காக இழந்து குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது. மோனிக்காவினால் இந்தப் பாதாள வீழ்ச்சினைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பதினைந்து வருடங்களுக்கு மேலாக சோசலிஷ அமைப்பின்கீழ், விண்ணனாகவும் வீரனாகவும் விளங்கிய அதே றோனால்ட் முதலாளித்துவ அமைப்பின் கீழ் கையாலாகாதவனாகவும் ஏமாளியாகவும் மோனிக்காவுக்குத் தோற்றம் அளிக்கலானான். வளர்ந்த மகன்கள் இருவரும் காதலிகள் என்றும், சுதந்திர வாழ்க்கை என்றும் தனித்து வாழத் துவங்க மோனிக்காவும் வீடொன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு றொனால்ட்டைப் பிரிந்து சென்றுவிட்டாள். இந்தப் பிரிவும், சோகமும், ஏமாற்றங்களும்தான் றொனால்ட்டை நித்திய குடிகாரனாய் மாற்றியிருக்க வேண்டும்.

வீரசிங்கம் அவனைப் பல்கலைக்கழக கன்ரீனுக்கு அழைத்துச் சென்றார். சாப்பாட்டு மேசையிலே அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

மோனிக்கா இப்பொழுது புதிய காதலன் யாருடனாவது வாழ்கிறாளா, என வீரசிங்கம் கேட்டார். தனது பொக்கற்றிலிருந்து றொனால்ட் சிறிய டயறியொன்றை எடுத்தான். அதிலே இருந்த தொலைபேசி எண் ஒன்றினை சிறிய காகிதத்தில் குறித்து வீரசிங்கத்துக்கு கொடுத்தவாறே, எனக்குத் தெரிந்தவரை அவள் இன்னமும் தனியாகத்தான் இருக்கிறாள். செஞ்சிலுவைச் சங்க வீடுதியொன்றின் அதிகாரியாக இப்பொழுது வேலை செய்வதாக என் மகன் ஒருமுறை சொன்னான். அவன் தான் இந்தத் தொலைபேசி எண்ணையும் எனக்குத் தந்தான்.

நண்பனே, முடிந்தால் மோனிக்காவுடன் ஒருதடவை பேசிப்பார். என் இதயம் அவளுக்காக எப்பொழுதும் திறந்து தான் இருக்கிறது’ என்றான் பரிதாபமாக.

நிச்சயமாக நான் மோனிக்காவுடன் பேசுவேன். நீங்கள் இருவரும் சோந்து வாழ்வதை என் மனம் மிகவும் விரும்புகிறது’ என்றார் வீரசிங்கம்.

 

5

திகாலையில் அழைப்பு மணி அலறியது…

யாராக இருக்கும்? இந்த நேரத்தில்… என்கிற யோசனையுடன் வீரசிங்கம் கதவைத் திறந்தார். இரண்டு மகன்களும் புடைசூழ, சோகத்திலே புதைத்தெடுத்த முகங்கள் தரிசனமாக தவமணி சூட்கேசுடன் நின்றிருந்தாள். இரவு முழுவதும் அழுது முகம் வீங்கிக் கிடந்தது. முகம் வேறு விதமாகவும் வீங்கியிருக்க வேண்டும். அவளுடைய உதடுகள் வெடித்து இரத்தம் கன்றியிருந்த நிலையில் அவளாலே சரியாகப் பேச முடியவில்லை.

உள்ளுக்கு வாருங்கோ…’ என்று கதவை அகலத் திறந்தார். தவமணி சூட்கேஸைக் குனிந்து தூக்கிய பொழுது தலையிலே திட்டுத்திட்டாக வீக்கங்கள் தெரிந்தன. வலது காதையொட்டிய பிடரியின் கீழ்ப்பக்கத்திலே புதிதான தீக்காயம் ஒன்று பளிச்சிட்டது. அன்று இரவு வீட்டிலே என்ன நடந்திருக்கும் என்று வீரசிங்கத்தால் ஊகிக்க முடிந்தது. வந்த ஆத்திரத்தில் ‘இவனுமொரு மனுஷனே…?’ எனப் பல்லை நெருமியவாறே தொலைபேசி அருகில் சென்று எண்களை அழுத்தத் துவங்கினர். நாலு எண்களை அழுத்தியதும் வீரசிங்கத்தின் மனைவி அங்கு வந்தாள். மனைவியைக் கண்டதும் நிதானம் அடைந்தவராக, தொடர்ந்து எண்களை அழுத்துவதை நிறுத்தி நிமிர்ந்து பார்த்தார்.

வந்ததுகளை இருக்கச் சொல்லி ஆறுதல் சொல்லாமல் இப்ப என்னை செய்யிறியள்?’ எனக் கேட்ட மனைவி, ‘முதலிலை தவமணியும் பிள்ளையளும் முகம் கழுவிக் கோப்பியைக் குடிக்கட்டும். பிறகு கதைப்பம்’ என்று கூறிச் சகஜ நிலையை ஏற்படுத்தினாள்.

அவர்களைக் குளியலறைப் பக்கம் அழைத்துச் சென்று முகம் கழுவுவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தபின் வரவேற்பறைக்கு வந்தாள் வீரசிங்கத்தின் மனைவி.

என்ன பொலீஸுக்கோ போன் செய்ய யோசிச்சனீங்கள்’ என்று கேட்டுக் குறும்புடன் சிரித்தாள். வீரசிங்கம் பொம்மையாகத் தலையை ஆட்டினார்.

இஞ்சேருங்கோ… தோசை மா பிறிஜ்ஜிலை இருக்கு. உடனை ஒரு சாம்பாரும் வைக்கிறான். இராத்திரி இதுகள் ஒண்டும் சாப்பிட்டிருக்காதுகள்!’

இதுகளை இப்ப என்ன செய்யிறது…? என வீரசிங்கம், இழுத்தார்.

சாப்பிட்ட பிறகு அதுகளுக்கு நல்ல ஆறுதல் சொல்லி செஞ்சிலுவைச் சங்கத்துக்குக் கூட்டிக் கொண்டு போவம். அங்க வேலை செய்யிற ஒருத்தியை எனக்கு நல்லாய்த் தெரியும். உந்த மாதிரி புருஷன்மாராலே அவதிப்படுகிற பெண்களுக்கு என்று, புறம்பா ஒரு விடுதி நடத்துறாங்கள். அங்கை சின்னராசா போன்ற ஆட்கள் போய் சேட்டையும் விடேலாது. அதுகளுக்கு இதுதான் பாதுகாப்பு. இதை விட்டிட்டு இப்ப நீங்கள் போலீசுக்கு அறிவிச்சால் என்ன நடக்கும்? அவங்கள் வந்து சின்னராசாவைக் கொண்டு போய் வைச்சிருப்பாங்கள். இங்கை இருக்கிற குடிகாரக் கூட்டத்தை தெரியாதே…? சின்னராசாவின்ரை பெண்சாதியை நீங்கள் வைச்சிருக்கிறியள் எண்டு கதைகட்டி விடுவாங்கள்… உங்களுக்கு இது தேவையா…?’

மனைவி சொல்வதில் பாரிய உண்மை இருப்பதை வீரசிங்கம் உணர்ந்துகொண்டார். காலை உணவு முடிய ஒன்பது மணியாகிவிட்டது. அப்போது தொலைபேசி மணி கிணுகிணுத்தது. வீரசிங்கம் அதனை எடுத்தார். மறுமுனையில் சின்னராசா.

அண்ணை இவவும் பிள்ளையளும் உங்கை வந்தவையே…?’ நிதானமாகவே கதைத்தான் சின்னராசா, வெறி முறிந்திருக்க வேண்டும்! வீரசிங்கம் தவமணியைப் பார்த்தார். மறுமுனையில் சின்னராசாவாக இருக்கலாம் என்பதை ஊகித்துக்கொண்ட தவமணி, சொல்லவேண்டாமென்று சைகை காட்டி, கையெடுத்துக் கும்பிட்டாள்.

ஏன் என்ன நடந்தது…? ஏதேன் குழசஅள நிரப்ப வேணுமே…? வந்தால் நிரப்பிக் குடுத்துவிடுகிறன்.’

அவளை இஞ்சை காணேல்லை அண்ணை. விடியக்காலமையே கள்ளப் புருஷனோடை ஓடிட்டாள் போலை கிடக்கு, நரகல் வேசை திரும்பி வரட்டும். ஒரே அடியாய்க் காலை முறிச்சு மூலைக்குள்ளை கிடத்திவைக் கிறன். கால் இருக்கிறதாலைதானே ஓட்டம் காட்டிறா’.

இணைப்புத் துண்டித்தது. மறுமுனையில் சின்னராசா ஆத்திரத்துடன் தொலைபேசியை வைத்திருக்க வேண்டும்.

 

6

வமணியையும் பிள்ளைகளையும் செஞ்சிலுவைச் சங்க விடுதியிலே சேர்ப்பதில் சிரமம் இருக்கவில்லை. விடுதியின் அதிபர் மிகவும் அன்புடனும் கண்ணியத்துடனும், அதே சமயம் கண்டிப்புடனும் கடமையைச் செய்பவர் என்பதை வீரசிங்கம் உணர்ந்து கொண்டார். அங்கும், தனக்கும் பிள்ளைகளுக்கும் அரசாங்கம் ரிக்கற் வழங்குமானால் அகதி அந்தஸ்துகோரும் விண்ணப்பத்தை ரத்துச் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பத் தயாராக இருப்பதாக தவமணி வாக்குமூலம் அளித்தாள்.

நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. புருஷனால் இந்த விடுதியிலே எந்தவிதமான தொந்தரவும் ஏற்படாது. இப்போதைக்கு உங்கள் பெயரையே பாதுகாவலனாக பதிவு செய்துள்ளேன். ரிக்கற் விஷயத்தை சமூக இலாகாவுடன் பேசி ஒழுங்கு செய்யுங்கள்…!’ எனக் கூறிய அதிபர் தனது விசிட்டிங்காட் ஒன்றினையும் வீரசிங்கத்திடம் கொடுத்தார். அப்பொழுது அவருக்கு றொனால்டின் மனைவி மோனிக்காவும் செஞ்சிலுவைச் சங்க இலாகா ஒன்றில் வேலை செய்வது நினைவுக்கு வந்தது. இவரிடம் பேசினால் அவளது முகவரியைச் சரியாக அறிந்துகொள்ளலாம் என நினைத்தார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. மோனிக்காவை அந்த அதிபர் நன்கு அறிந்திருந்தார். அவள் வேலை செய்யும் செஞ்சிலுவைச் சங்கக் கிளையின் விலாசத்தைத் தந்ததுடன், வேண்டுமானால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் சொன்னார். வீரசிங்கம் ஒன்றும் பேசாதிருக்கவே அவரே தொலைபேசி எண்களை அழுத்தி மோனிக்காவுடன் தொடர்பு கொண்டார். எப்படியான வரவேற்புக் கிடைக்கும் என்கிற தயக்கத்துடன் தான் வீரசிங்கம் அந்த அலுவலக அறைக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் மோனிக்கா தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து சிநேக பாவத்துடன் கைகுலுக்கி ‘அங்கிள் வீரா’ என்று அகம் மலர வரவேற்றாள்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் ஒரு நிமிஷம் நான் திகைத்துப் போனேன். எவ்வளவு ஆண்டுகள்! எப்படி என் தொலைபேசி எண் கிடைத்தது?’ என்று கூறிக்கொண்டே அலுவலக ரீறூமுக்கு அழைத்துச் சென்றாள். வீரசிங்கம் எப்படிப் பேச்சைத் துவங்குவது என்கிற தடுமாற்றத்துடன் மௌனம் சாதித்தார்.

சொல்லுங்கள் வீரா… நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குடும்பம் எப்படி…?’

நன்றாக இருக்கிறேன், குடும்பமும் நலமாகவே இருக்கிறது. இவ்வளவு ஆண்டுகள் கழித்து உன்னைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.’

எனக்கும்தான்! நீ அழைத்தால், நான் உன் வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவேன். உனது உறைப்புக் கறி சாப்பிட ஆசையாக இருக்கிறது’ என்று பழைய கலகலப்புடன் மோனிக்கா பேசினாள்.

மோனிக்கா… நீ கட்டாயம் வர வேண்டும். எனது மனைவியுடன் பேசி வசதியான திகதியை அறிவிக்கிறேன்…’

உனக்குத் தெரியுமா…? நான் றொனால்டுடன் வர முடியாது…!’ முகத்தில் எதுவித மாற்றமும் இல்லாமல் அதே குதூகலத் தொனியில் பேசினாள். இதற்கு மேலும் றொனால்டை பார்த்த சமாசாரத்தினை ஒளிக்க, வீரசிங்கம் விரும்பவில்லை.

அண்மையில் நான் றொனால்டைச் சந்தித்தேன். என் பல்கலைக்கழக அலுவலகம் வந்திருந்தான். நடந்த விஷயங்களைச் சொன்னான்…’

மோனிக்காவை பிரிந்திருக்கிறேன் என்று மட்டும் சொல்லியிருப்பான். அவன் செய்த மொக்குத் தனங்களை எல்லாம் சொல்லியிருக்க மாட்டானே…’ என்று சொல்லிக்கொண்டே இருவருக்கும் கோப்பி தயாரித்தாள்.

இல்லை மோனிக்கா, எல்லாவற்றையும் சொன்னான். என்ன இருந்தாலும் அவனுடைய லாப நஷ்டங்களிலே உனக்குப் பங்கில்லையா?’

அவள் பதிலேதும் பேசாமல் கோப்பியைக் கலந்து கொண்டு வந்தாள். வீரசிங்கத்துக்கு ஒரு கோப்பையை அளித்தவாறே எதிரில் அமர்ந்தாள். ‘பழைய கதைகளை வீணாகக் கிளற வேண்டியிருக்கிறது வீரா. உனக்கு நல்லாகத் தெரியும். எத்தனை வருடங்கள் றொனால்ட் படித்துக் கொண்டிருந்தான். அவன் நன்கு படிக்க வேண்டுமென்று நான் உழைத்து அவனையும் குழந்தைகளையும் காப்பாற்றினேன்… ஏன்…?

வீரசிங்கம் பதில் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள். இந்தக் கஷ்டங்கள் எல்லாம் கொஞ்சக் காலத்துக்குத் தான், பின்பு அவன் என்றோ ஒரு நாள் நான் அநுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து தருவான் என்று நம்பியிருந்தேன். இப்பொழுது…?’

பிஸினஸ் என்றால் லாப நஷ்டம் வரத்தான் செய்யும்

மோனிக்கா…’

பிஸினஸ் சரிவரவில்லையென்றால் அதை விட்டுவிட்டு ஒழுங்கான ஒரு தொழில் பார்க்க வேண்டியதுதானே…?’ என்று கூறிய மோனிக்கா, தனது அலுவலக அறைக்குச் சென்று ஒரு பத்திரத்தை எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள். ‘இதை வாசித்துப்பார் வீரா. பாங்கிலிருந்து வந்த கடிதம், அவனது விலாசம் தெரியாதபடியால் இங்கு அனுப்பியிருக்கிறார்கள்… இன்னமும் றொனால்ட் பெயரிலே எவ்வளவு கடன் இருக்கிறது என்று பார்த்தாயா…? என்னுடன் சேர்ந்திருந்தால் அவன் என்னுடைய உழைப்பில்தான் சாப்பிடுவான். அவனுடைய முழு உழைப்பையும் வங்கி பிடுங்கிக் கொள்ளும். நீயே சொல் வீரா, எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா…? நான் எதற்காக அந்த மடையனுடன் தொடர்ந்து வாழ்வதாக நடித்துக்கொண்டு கஷ்டப்பட வேண்டும்? பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்கள் தங்கள் சுகங்களை நாடிப் போய்விட்டார்கள்… நான் எதற்காக எனது மிகுதி வாழ்க்கையை றொனால்டுடன் பாழாக்க வேண்டும்?’

கோப்பிக் கோப்பைகளை எடுத்துக்கொண்டு போய் ‘சிங்’குக்குள் வைத்த மோனிக்கா திரும்பி வந்து வீரசிங்கத்தின் முன் அமர்ந்து கொண்டாள். நீண்டதொரு பெருமூச்சு வெளிவந்தது.

உண்மைதான்! சின்னவயதில் அப்படி ஒரு காதல் வேகம் றொனால்ட் மீது இருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவனைத் திருமணம் செய்து கொண்டேன். என் பெறுமதி என்னவென்று புரிந்து கொள்ளாத வயதிலே அது நடந்தது. எனக்கு இன்னமும் இளமையும் அழகும் இருக்கிறது. இன்னமும் என் பின்னால் பல ஆண்கள் சுற்றித் திரிகிறார்கள். அதற்காக நான் ஷசோரம்| போய்விடுவேன் என்று எண்ணாதே. நல்ல பணக்காரன் ஒருவன் என் பெறுமானம் அறிந்து என்னை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தக்கூடியவனாய் இருந்தால் நான் அவனுடன் சேர்ந்து வாழத் தயங்கமாட்டேன்….!’ என்று கூறி முடித்தாள் மோனிக்கா.

மோனிக்காவின் நிலைப்பாடு, வீரசிங்கம் பிறந்து வளர்ந்த சமூகத்தின் விழுமியங்களுக்கு முரண்பட்டதாக இருந்தது. இருப்பினும் அதுதான் மேற்குலக வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டார்.

என்ன இருந்தாலும் இருபது வருட தாம்பத்திய வாழ்க்கை… அது பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பார் மோனிக்கா’ என வீரசிங்கம் மிடறு முறித்து இழுத்தார்.

இந்தியத் திருமண முறைகள் பற்றி நான் நிறையவே அறிந்திருக்கிறேன். அந்த சென்ரிமென்ற் சரி வராது. பெண்ணுக்கும் சுதந்திரமான வாழ்க்கை ஒன்று உண்டு’ என்று கூறி, மோனிக்கா எழுந்தாள்.

வீரா, உன்னை அவமதிப்பாக நினைக்க வேண்டாம். உன்னை இன்னும் என் நண்பனாய் மதிக்கிறேன். எனக்கு வேலை இருக்கிறது. றொனால்டுடனான என் வாழ்க்கை அத்தியாயம் முடிந்துவிட்டது. அதனை மீண்டும் எழுத முடியாது. ‘டைவோர்ஸ்’ பேப்பர் எல்லாம் ஆயத்தமாக வைத்திருக்கிறேன். அவனது நிரந்தர விலாசம் எனக்குத் தெரியாததால், அனுப்ப முடியாமல் இருக்கிறது. அவனுடைய விலாசம் தெரிந்தால் தந்து விட்டுப் போ. என் ‘லோய’ருக்கு அது தேவைப்படுகிறது.’

வீரசிங்கம் எழுந்தார். ‘தன் இதயத்தில் இன்னமும் உனக்கு இடமிருப்பதாக றொனால்ட் கருதுகிறான்.’

அது முடிந்த கதை என்று நான் சொன்னேனே! அவனைப் பற்றி இன்னுமொருமுறை, தயவு செய்து என்னுடன் பேசவேண்டாம் வீரா…!’ மோனிக்கா கதவை நோக்கி நடந்தாள். வீரசிங்கம் பின்தொடர்ந்தார்.

 

7

பெண்சாதி பிள்ளையளைக் காணாத சின்னராசா ‘வெட்டுறன் விழுத்திறன்’ என்று ஊரெல்லாம் அலைந்து திரிகிறான் என்கிற செய்தி வீரசிங்கத்துக்குக் காற்றுவாக்கில் எட்டியது. செஞ்சிலுவைச் சங்கத்தில் அடைக்கலம் தேடியிருந்த தவமணியோ வீரசிங்கத்துக்கு ரெலிபோன் பண்ணும் போதெல்லாம் ‘எனக்கும் பிள்ளையளுக்கும் இலங்கைக்குத் திரும்பிப் போக ரிக்கற் ஒழுங்கு பண்ணிப் போட்டியளோ அண்ணை…’ என்று கேட்கத் தவறுவதில்லை. வீரசிங்கத்துக்கு சமூக சேவை இலாகாவில் வேலை செய்த ஜேர்மன்காரன் ஒருவன் நண்பனாக இருந்தது வசதியாகிவிட்டது. அவனுடன் தொடர்பு கொண்டு விமான ரிக்கற்றுகளை ஒழுங்கு செய்து விட்டார். தாய்க்கும் பிள்ளைகளுக்கும் மாதாமாதம் உதவிப் பணம் வழங்குவதிலும் பார்க்க இலங்கைக்கான விமானச் சீட்டு மலிவானது என்கிற பொருளாதார நோக்கில் அவர்களுக்கு ரிக்கற்வழங்கு வதற்கான அங்கீகாரம் கிடைத்தது. பிரயாணத் திகதியை தவமணிக்கு அறிவிப்பதற்காகச் செஞ்சிலுவைச் சங்க விடுதிக்கு சென்றார் வீரசிங்கம். பிரயாண தினத்தன்று ஆயத்தமாக இருக்குமாறும், செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளே பாதுகாப்பாக விமான நிலையம் கொண்டு செல்வார்கள் என்றும் பிரயாண விபரங்களைக் கூறிய வீரசிங்கத்தை ஒருவித தவிப்புடன் பார்த்தாள் தவமணி. தனது பிரயாசைகளுக்காக அவள் மகிழ்ச்சியடைவாள் என்றே வீரசிங்கம் எதிர்பார்த்தார். மாறாக அவள் அதிர்ச்சியடைந்தவள் போல் காணப்பட்டாள். எதையோ சொல்ல விரும்புவதும், அதைச் சொல்ல முடியாமல் அவள் தவிப்பதும் அவருக்கு விளங்கிற்று.

என்ன விஷயம் தவமணி…? பிரச்சினை தீர்ந்தது தானே… பிறகேன் யோசிக்கிறியள்…?’

இல்லையண்ணை… அவரை ஒருக்காப் பார்க்க வேணும் போல கிடக்கு… பிள்ளையளும் அப்பா அப்பா எண்டு அழுதபடி இருக்குதுகள், குடிகாரன் எண்டாலும் புருஷன்…. புருஷன்…, தொடரமுடியாமல் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள் தவமணி.

அவள் என்ன சொல்ல முயலுகிறாள் என்பதை விளங்கிக்கொண்ட வீரசிங்கம் சிறிது நேரம் மௌனமானார். ‘உங்கடை விருப்பம் தவமணி, நீங்கள் குடும்பத்தோடை சந்தோஷமாய் இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான்…’ செஞ்சிலுவைச் சங்க அதிகாரியிடம் தவமணியின் முடிவைத் தெரிவித்துவிட்டு வீடு திரும்பினார் வீரசிங்கம்.

பதிவு செய்த ரிக்கற்றுகளை பிரயாண திகதிக்கு முன்பாக ரத்து செய்ய வேண்டும். தவமணியின் முடிவை, நாளை சமூக சேவை அதிகாரிகளுக்குத் தெரிவித்தால், ‘நீ என்ன விளையாடுகிறாயா?’ என்றுதான் கேட்பார்கள். எப்படி இதை கையாள்வதென மூளையைக் கசக்கி யோசித்தார் வீரசிங்கம்.

என்ன யோசிக்கிறியள்? என்றவாறே கணவனருகே கோப்பியுடன் வந்தமர்ந்தாள் வீரசிங்கத்தின் மனைவி.

செஞ்சிலுவைச் சங்கத்திலை இருந்து நீங்கள் வெளிக்கிட்டாப் போலை தவமணி எனக்கு ரெலிபோன் பண்ணினவள், அவளை நினைக்கப் பரிதாபமாய்த்தான் இருக்கு…!’

இதென்ன குழந்தைப் பிள்ளை விளையாட்டே, நேரத்துக்கு நேரம் முடிவை மாத்திறதுக்கு? நான் நாளைக்கு அவங்களிட்டைப் போய் என்னத்தை சொல்லிச் சமாளிக்கிறது?’ புருஷனின் கொதியடங்கும் வரை மனைவி மௌனமானாள். வீரசிங்கம் கோப்பியைக் குடிக்கத் துவங்கினார்.

இஞ்சேருங்கோ, தவமணி இப்ப ஊருக்குப் போனால் அங்கை என்ன சொல்லுவினம் தெரியுமே…? எங்கை தப்பியோடலாம் என்று சனம் தவிக்கேக்க இவளுக்குக் கொழுப்பு. புருஷனை விட்டிட்டு இங்கை வந்திட்டாள் எண்டு நாக்கு வளைப்பினம். நீங்கள் ஊரை விட்டு வந்து கனகாலம். உங்களுக்கு அங்கத்தய நிலைமை புரியாது. இந்தச் சண்டையுக்கை என்னெண்டங்கை அவள் காலம் தள்ளுவாள்…?’

அப்பிடியெண்டால் இங்கை ஒரு வீட்டை எடுத்துக் கொண்டு தனிச்சிருக்கிறது. தினம் சின்னராசாவின்ரை அடி உதையை வாங்கிக்கொண்டு அரியண்டத்துக்கை இருக்கிறாள் எண்ட பரிதாபத்திலைதானே நான் உதவப் போனனான்…!’ என்று படபடத்தார் வீரசிங்கம்.

இண்டைய நிலைமையிலை தவமணி இங்கை தனிச்சிருக்க சின்னராசாதான் விட்டாலும் எங்கடை ஆக்களின்ரை வாய் சும்மா இருக்குமே…? கொஞ்சம் அவசரப்படாமல் நிதானமாய் யோசியுங்கோ. புருஷன் வேண்டாம் என்று சொல்லுற மோனிக்காவை றொனால்டோடை சேர்க்க நிக்கிறியள். அடிச்சாலும் உதைச்சாலும் சின்னராசாவோடை இருப்பம் என்கிற தவமணியைப் புறம்பாய் வீடு எடுத்து இருந்தால் என்ன என்று கேக்கிறியள்…’

மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதையும்…’

நானும் அதைத்தான் சொல்ல வாறன். சின்னராசா பெண் சாதியை கொடுமைப்படுத்திறதை நான் நியாயப்படுத்த வரேல்லை. ஜேர்மன் கலாசாரத்துக்கு மத்தியிலை எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் எங்களுடைய சமூக விழுமியங்கள் வேறையெண்டதை மறக்காதேயுங்கோ. புருஷ உறவை உதறித் தள்ளிற துணிவு எங்களுக்குக் கிடையாது… மேல் நாட்டிலை வாழ்ந்தாப்போலை ஊரிலை பழகின பழக்க வழக்கங்களைத் தூக்கி எறிஞ்சிடலாம் என்று நினைக்கிறியளே?… தவமணி பாவம்…!’

மனைவி கோப்பிக் கோப்பையை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். மனைவியின் பேச்சிலே, திடீரென்று வீரசிங்கத்தின் மனம் ஊருக்குத் தாவியது. அந்த ஊரின் கடற்கரையிலே எத்தனை மாலை வேளைகளை வீரசிங்கம் இனிமையாகக் கழித்திருக்கிறார். கடற்கரையில் தோன்றும் அந்த அடிவானம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்ற சிந்தனையுடன் வீரசிங்கம் கோப்பியைத் தொடர்ந்து குடிக்கலானார்.

ஆசி கந்தராஜா (2000)

2 comments:

  1. மிகவும் அருமையான எழுத்தும் நயமும் தம்பி ஆசி. பல தரம் கண்கள் கலங்கி விட்டன. நீங்கள் எழுதும் பாங்கு மிக ஆழகு. நிறுத்தாமல் வாசிக்கத் தூண்டியது. மேலும் நிறைய எழுதுங்கள்.வாழ்துகள்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான எழுத்தும் நயமும் தம்பி ஆசி. பல தரம் கண்கள் கலங்கி விட்டன. நீங்கள் எழுதும் பாங்கு மிக ஆழகு. நிறுத்தாமல் வாசிக்கத் தூண்டியது. மேலும் நிறைய எழுதுங்கள்.வாழ்துகள்

    ReplyDelete