Sunday 24 January 2021

 குறு நாவல் 1:

பாவனை பேசலன்றி

ஆசி கந்தராஜா

-1-

சின்னத்துரை வாத்தியார் சிட்னியில் நேற்றுக் காலமானார்…’ எனத் துவங்கி, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் முழக்கம், தமிழ் வானொலியின் மரண அறிவித்தல் தொடர்ந்தது.

இவர் டாக்டர் பேரம்பலத்தின் அருமைத் தந்தையும், ரெலிக்கொம் நிறுவனத்தின் நிதிக் கட்டுப்பாளரும், கணக்காளருமான அனுஷாவின் அன்பு மாமனாரும், கொழும்பின் பிரபல கண் வைத்திய நிபுணர் அமரர் பொன்னம்பலம், மற்றும் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி காயத்திரி பொன்னம்பலம் ஆகியோரின் சம்பந்தியும், காலஞ்சென்ற விசாலாட்சியின் சகோதரரும், லண்டன் இந்து, அமெரிக்கா மகேஷ், வசந்தி, தென்ஆபிரிக்கா பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் திவ்வியா, தினேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்…’


உலகளாவி வேரோடிக் கிடந்த உறவுகளைப் பட்டியலிட்ட அறிவிப்பாளர், வாத்தியாரின் பூதவுடல் அவரது மகனின் இல்லத்தில் நாளையும், நகர மண்டபத்தில் மறுநாளும் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர், றுக்வூட் மயானத்தில் தகனம் செய்யப்படுமெனவும், இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறும் வாத்தியார் மகன் சார்பில், உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

சின்னத்துரை வாத்தியாரே எனக்கு எழுத்தறிவித்தவர்.

சிறுவயதில் தந்தையை இழந்த என்னை இந்நிலைக்கு உயர்த்திவிட்டவரும் அவரே. இந்தப் பந்தத்தை என் நெஞ்சம் சுமப்பதினால் அவர்மீது என்றும் நான் மரியாதை பாராட்டுவேன். ஊரில் என்றால் செய்தி கேட்டவுடன் ‘சாவீட்டு’க்கு உடனே கிளம்பியிருப்பேன். இங்கே அவுஸ்திரேலியாவில்…, வாத்தியாரின் பூதவுடலை நகரசபையின் அனுமதி பெற்று நாளைதான் வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். அதுவரை அந்திமசேவை நிறுவனத்தின் குளிர்ப்பெட்டிக்குள், பிரேதங்களுடன் பிரேதமாகவே வாத்தியார் வைக்கப்பட்டிருப்பார். முகமனுக்காக வாத்தியார் மகன் வீடு சென்று துக்கம் விசாரிப்பதாகப் போக்குக் காட்டி, வம்பளக்க நான் விரும்பவில்லை. அவர் மறைவு என் மனசிலே ஆழமான சோகங்களை ஏற்படுத்தியது! என் மனசு யாரிடம் இதனைப் பங்கிடுவதென அங்கலாய்த்தது.

 

-2-

றுநாள் காலையில் ‘சா’வீட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த வீடு மகா விசாலமானது. கடல்போல என்பார்களே, அப்படி! இருப்பினும் கொடிகட்டிப் பறக்கும் பேரம்பலத்தின் செல்வாக்கிற்காகப் பெருந்தொகையானவர்கள் எதிர்பார்க்கப் பட்டார்கள். இதனால் வளவின் பின்புறத்தே, நீச்சல் குளத்துக்கும் ரெனிஸ் கோட்டுக்கும் இடையில், தற்காலிக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு, நாற்காலிகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. ஓடர் கொடுத்தால் கன கச்சிதமாக இவற்றை முடித்துத் தரும் கம்பனிகள் பல அவுஸ்திரேலியாவில் உள. உறவுக்காரர் மாஞ்சு மாள வேண்டிய அவசியமே இல்லை. கூடாரத்தின் ஒரு மூலையில் என் போன்ற வாத்தியாரின் மாணவ உறவினர்களும், ஊரவர்களும் ஒதுங்கி இருந்தோம். சிலர் வாத்தியாரின் பெருமைகள் சிலவற்றைத் தமிழில் அறிக்கை செய்தார்கள். இடையிடையே ஊரில் நடைபெறும் ‘மோதல்கள்’ பற்றி, அடக்கி வாசிப்பதான குரலிற் பேசிக் கொண்டோம்.

நேரஞ்செல்லச் செல்ல சிட்னி வாழ் உயர்மட்டத்தினர் பலர், பெரிய பெரிய கார்களிலே வந்திறங்கத் தொடங்கினார்கள். கறுப்பு ‘டை’ கறுப்பு ‘சூட்’ என்று இவர்கள் இந்நாட்டின் Funeral ஆசாரங்களைப் பின்பற்றியும், முகங்களிலே செயற்கையானதொரு இறுக்கத்தினை ஒட்டவைத்தும் கொண்டார்கள். புதிதாக வருபவர்களை ‘Hi, Hallo’ சொல்லி வரவேற்பதும், மறைவதுமாக வாத்தியாரின் சம்பந்தியம்மா, திருமதி பொன்னம்பலம் தான் படு ‘பிஸி’யாக இருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தார்.

பத்து மணியளவில் வாத்தியாரின் பூதவுடல் வந்து சேர்ந்தது!

அதனை அந்திம சேவை நிறுவனத்தினர், பிரேத வண்டியில் கொண்டு வந்தார்கள். பிரேத வண்டியென்று அதை மொட்டையாகச் சொல்லிவிட முடியாது. கறுப்பு நிற ‘பென்ஸ்’ வண்டி அது!

அதிலிருந்து வாத்தியார் இறக்கப்பட்டு, வீட்டின் நடு மண்டபத்தில் வைக்கப்பட்டார். இறக்கி வைக்கும் சடங்கிலே கூடாரத்தில் முகாமிட்டிருந்தவர்களும் முண்டியடித்துக் கொண்டு கலந்து கொண்டார்கள். பெரிய ‘பட்ஜெட்’டில் அந்திம சேவைக்கு ஓடர் கொடுத்திருக்க வேண்டும். பணத்தின் ‘விசுக்கல்’ அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தூக்கலாகத் தெரிந்தது. அனைவரும் அதனை ஒருவித பிரமிப்புடன் உணர்ந்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த வீட்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய வாத்தியார் இன்றுதான் முதியோர் விடுதியிலிருந்து ‘பூதவுட’லாகத் திரும்புகிறார் என்ற உண்மை அங்குள்ள பலருக்குத் தெரியாது. மருமகள் அனுஷா கெட்டிக்காரி! வாத்தியார் எழுதிய தமிழ்ப் புத்தகங்களையும், மொழி – இலக்கிய சேவைக்காக

அவர் பெற்ற விருதுகளையும் தூசுதட்டி, அழகாக, அருகில் வைக்கப்பட்டிருந்த மேசை மேலே அடுக்கி வைத்திருந்தாள். வாத்தியார் வெள்ளி வேலைப்பாடுகளுடன் கூடிய விலையுயர்ந்த தேக்கு மரப் பிரேதப் பெட்டியிலே வளர்த்தப்பட்டு இருந்தார். வாத்தியாரின் ‘அலங்காரம்’ கண்கொள்ளாக் காட்சி. சில்க் ஜிப்பா, அகலமான ஜரிகையுடன் கூடிய பட்டு வேட்டி, அதற்கு சோடியான சால்வை விசிறி மடிப்புக் கசங்காது நேர்த்தியாகச் சாத்தப்பட்டிருந்தது. இத்தகையதொரு ஆடம்பரக் கோலத்தில், வாத்தியரை இன்றுதான் முதன்முதலாக நான் பார்க்கிறேன்.

ஊரிலே நான் அறிந்திருக்க வாத்தியார் என்றுமே ஆடம்பரத்தை விரும்பாதவர். வெள்ளை வெளேறென்ற நூல் வேட்டியும், கதர் சட்டையும், வெள்ளை உத்தரீயமும் அவருடைய அலங்காரம். அன்றைக்குத் தான் எடுத்து அணிந்தது போன்ற தூய்மை துலங்கும். அந்த நாட்களில் அவர் கண்களைப் பார்த்திருக்க வேண்டும். அன்பு-கருணை- சாந்தம் என்று சொல்லுகிறோமே அதை அவர் கண்களிலேதான் பார்த்திருக்கிறேன். ஊர்ப் பள்ளிக்கூடத்திலே

ஆறாம் வகுப்பு வரை சகலதும் அவரே! ஐந்தாம் வகுப்பு இறுதியிலேயே, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் புலமைப்பரிசில் பரீட்டைக்குப் பிள்ளைகளைத் தயார் செய்யத் துவங்கி விடுவார். அவர் நெறிப்படுத்திய புலமைப்பரிசில் சித்திகளே எங்கள் ஊரில் டாக்டர்களையும் என்ஜினியர்களையும் உருவாக்குவதற்குப் பலமான அடித்தளமிட்டது! இன்று நமது ஊரின் பெயரை உலகளவில் நிறுவிய பெருமையிலே கணிசமான பங்கு சின்னத்துரை வாத்தியாருடையது. வாத்தியார் கணக்கிலே புலி என்பதை அயற் கிராமத்திலுள்ளவர்களும் அறிவார்கள். எந்தப் பெரிய கணக்கையும் ஒரு நொடியில் மனதிற்குள் போட்டு விடுவார். அதன் பின் இலகுவான முறையில் உதாரணங்களுடன் விளக்குவார்.

நாங்கள் பல்கலைக்கழக புகுமுக வகுப்பிலே படித்த காலங்களிலும் கணக்குப் பாடத்திற்காக தினமும் ஒரு மணி நேரம் அவர் வீட்டிற்குச் சென்று விடுவோம். இது ஒரு வகையில் ‘ரியூசன்’ வகுப்பு போன்றதுதான். ஆனால் அதற்காக அவர் எந்த மாணாக்கரிடமும் பணம் பெற்றது கிடையாது. ‘சரஸ்வதியை விற்கக் கூடாது’ என்ற கொள்கையைக் கடைசி வரையிலும் சின்னத்துரை வாத்தியார் கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்தார்.

 

-3-

பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் பெரும்பகுதி, வந்தவர்கள் வைத்த மலர் வளையங்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. ‘கறுப்பு ஆடை’ மேல்மட்டத்தினர் நாகரிகமான அளவுக்கு குரல்களைத் தாழ்த்தி, சமீபத்தில் அமுலுக்கு வந்த ஜிஎஸ்ரி (GST) வரியின் சாதக பாதகங்களை ஆங்கிலத்தில் அலசிக் கொண்டிருந்தார்கள். சம்பந்தியம்மா சிட்னியிலுள்ள சில ‘பிரபல்யங்களுடன்’ அமர்ந்து சமய கிரியைகளுக்கான ‘பட்ஜெட்’ போட்டுக் கொண்டிருந்தார்.

சைவக் குருக்கள் செய்யிறதை வாறவை பாக்கப்போகினமே…, யாருக்கு இதெல்லாம் விளங்கப்போகுது? நீங்கள் சொல்லுற கிரியைச் சாமான்களிலே சிலது, என்னவெண்டே எனக்குத் தெரியாது. இதுகளை இங்கை தேடி வாங்கிப் பாருங்கோவன்…’ என்று சம்பந்தியம்மா சைவக் கிரியைச் சமான்களில் கைவைத்தார். செலவினை இறுக்கும் முயற்சி என்பதை வெளியிலே காட்டாத லாவகம்.

வாத்தியார் என்றுமே பணத்தைப் பெரிதாக மதித்தது கிடையாது. மற்ற ஆசிரியர்களைப் போன்று ஓய்வு நேரத்தில் விவசாயம் செய்தோ ரியூசன் சொல்லிக் கொடுத்தோ பணத்தைச் சேர்த்ததும் இல்லை. சம்பளம் முழுவதும் அதே மாதச் செலவுடன் முடிந்து போகும். அதைப் பற்றி அவர் அலட்டிக் கொண்டதும் இல்லை. வறுமையில் வாழும் பிள்ளைகளுக்கு வாத்தியார் பாடப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். உயர்தர வகுப்பில் இருக்கும்போது எனக்கு பரீட்சைக்குப் பணமும் அவ்வப்போது அவரே கட்டியிருக்கிறார். ஊரில் காணிப் பிரச்சனையா, அண்ணன் தம்பி அடிபிடியா, கல்யாணப் பேச்சு வார்த்தையா… ‘கூப்பிடு சின்னத்துரை வாத்தியாரை’ என்னுமளவுக்கு அவருக்கு ஊரில் மதிப்பிருந்தது. வாத்தியார் சொல்லை ஊரில் யாரும் மீறியதுமில்லை.

துக்கம் விசாரிக்க மரண வீட்டிற்கு வந்திருந்த இளமட்டங்களிடையே, வடபகுதியில் நடைபெறும் ஈழப்போர் பற்றிய பேச்சு இயல்பாகவே முக்கியத்துவம் பெற்றது. அவர்களுடன் மூத்த பிரஜைகளும் சேர்ந்து கொண்டார்கள். கோண்டாவில் பகுதியில் இப்பொழுது சண்டை நடை பெறுவதாகவும் இதன் காரணமாக அங்கு பயிரிடப்பட்ட புகையிலை அறுவடை செய்யப்படாது பழுத்துச் சாவதாகவும் புதினத்தை அவிழ்த்து விட்டார் கொழும்பு மணியம். இவர் தமிழர் கலாசார சங்கத்தின் சார்பில் மலர் வளையம் வைக்க வந்திருந்தவர்.

வெத்திலை ஒண்டு யாழ்ப்பாணத்திலை பத்துரூபா விக்குதெண்டு பேப்பரிலை போட்டிருக்கிறாங்கள். கோதாரி, இனி புகையிலை, சுருட்டும் நெருப்பு விலை விக்கப்போகுது…’ என்று ஆதங்கப்பட்டார் மணியத்தின் கையாள நமசிவாயம்.

அந்த நாள்களில் வாத்தியாரிடம் எப்பொழுதும் திறம் புகையிலை இருக்கும். ‘கோடா’ போட்ட சுருட்டை அவர் என்றும் நாடியதில்லை. சம்பளம் எடுத்தவுடன் வாத்தியார் நேரடியாக கல்வியங்காட்டு சந்தைக்கு சென்று விடுவார். அங்கு புகையிலை வியாபாரத்தில் புகழ்பெற்ற அப்புத்துரை யிடம் ஒரு கட்டுப் புகையிலை வாங்கி வருவார். இது அவருக்கும், அவ்வப்போது அவரிடம் வருபவர்களுக்கும் மாதம் முழுவதும் போதுமானது.

அதிகாலை வேளையில் நாவிதர் சின்னப்பொடி வாத்தியாருக்கு சவரம் செய்ய வருவதுண்டு. சவரம் செய்து முடித்தவுடன் வாத்தியார் ஒரு சுருட்டு சுற்றப்போதுமான புகையிலையைக் கவனமாகக் கிழித்துச் சின்னப்பொடிக்கு கொடுப்பார். ஒரு நாள் யாருக்கோ கொடுப்பதற்காக வாத்தியார் மகன் புகையிலையைக் குறுக்காக நுள்ளிவிட்டான். வாத்தியாருக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். புகையிலை மேல் அவருக்கிருந்த பாந்தத்தை அவர் மறைத்ததில்லை. விளையாடிக் கொண்டிருந்த என்னையும், மகனையும் கூப்பிட்டார். அடிபோடப் போகிறார் என்று பயந்து கொண்டே போனோம். புகையிலையை, பக்க நரம்பு வழியே கிழித்தல் வேண்டுமென்றும் குறுக்காக நுள்ளினால் சுற்றப்படும் சுருட்டின் தொகை குறையுமென்றும் விரிவாக விளக்கம் கொடுத்தார். எந்த அற்ப விஷயமானாலும், அதனை வள்ளிசாக விளக்குவது அவர் சுபாவம்.

 

-4-

மைக் கிரியைகளுக்கான ‘பட்ஜெட்’ விவாதம் இன்னமும் முடியவில்லை. சம்பந்தி அம்மா வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தார். இடையிலே ரொயிலற்றுக்குப் போகவென எழுந்து வந்தவர் என்னைக் கண்டதும், நாளைக்கு ஈமைக் கிரியைக்கு வரும் வழியில் வெற்றிலையும், தட்சணைக்குச் சில்லறைக் காசும் வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார். சரக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெறுவதற்கு சம்பந்தி அம்மாவைப் போல ஆளை நான் எங்குமே கண்டதில்லை.

வாத்தியாரிடம் நான் பல தடவை தட்சணை வாங்கியிக்கிறேன். எனது தந்தையாரும் வாத்தியாரும் ஒன்றாக ஆசிரிய கலாசாலையில் படித்தவர்கள். புதுவருடத்தில் வாத்தியாரிடம் அவர் கை விஷேசம் வாங்குவார். தந்தையாருக்கு இரண்டு ரூபா ஒரு சதமும், எனக்கு ஒரு ரூபா ஒரு சதமும். ஒற்றை விழ, வெற்றிலையில் வைத்து வாதியார் தருவார். ஒரு ரூபா அப்போது பெரிய காசு. தோசை ஒன்று ஐந்து சதம் விற்ற காலம். அதனால் எப்போது வருஷம் பிறக்குமென்று காத்திருப்பேன். எனது தந்தையார் இறந்த பின்பும் வாத்தியார் இதை எனக்குதத் தர மறந்ததில்லை.

வெளிநாட்டிலிருந்து துக்கம் விசாரித்து, தொடர்ச்சியாக ரெலிபோன் கோல்கள் வந்த வண்ணமிருந்தன வாத்தியார் மகனால் தனித்து இவற்றைச் சமாளிக்க முடியவில்லை. இரண்டு ரெலிபோன் லைன்களும் மற்றும் பேரம்பலத்தின் ‘மொபைல்’ ரெலிபோனும் மாறிமாறி கிணுங்கிய வண்ணமிருந்தன. இதனால் சாமான் பட்டியல் தயாரித்த வாத்தியாரின் மருமகளும் அடிக்கடி எழும்பிப் போக வேண்டியிருந்தது. எனவே, என்னைக் குறிப்பெடுக்குமாறு பேரம்பலம் கேட்டுக்கொண்டான்.

சம்பந்தியம்மா இலகுவில் எந்த விடயத்தையும் ஒத்துக்கொள்ளமாட்டார். அரை டொலர் மஞ்சள்தூள் பற்றி அரை நாள் விவாதம் செய்யும் கசவாரம். அத்துடன் அவரின் ‘எடுப்புகளும்’ எனக்கு அறவே பிடிக்காது. அந்த நேரத்தில்தான் ஆபத்பாந்தவராக அங்கு வந்து சேர்ந்தார் கிரியைகள் செய்யும் சைவக்குருக்கள். செம்பு, குடம், குத்துவிளக்கு என்று தொடங்கிய குருக்கள், கிரியைக்கு சம்பந்தியம்மாவால் பட்டியலிடப்பட்ட ‘பட்டோலைச் சாமான்’களைச் சரிபார்த்தார். குருக்களுக்கு முன்னால சம்பந்தியம்மா அடக்க ஒடுக்கமாக இருந்தது ஆச்சரியமே. கிரியைக்குத் தேவையான சாமான்களைச் சேகரித்துத் தருமாறும், பட்டோலைச் சாமான்களை வாங்கித் தருமாறும் வாத்தியார் மகன் பேரம்பலம் என்னை உரிமையோடு கேட்டுக்கொண்டான். செம்பு குடங்களை எங்கே தேடிச் சேர்ப்பதென்பதுதான் முக்கிய பிரச்சனை. சிட்னியில் பலரும் வெவ்வேறு சைஸ்ஸில் குத்துவிளக்கும் குடங்களும் வைத்திருப்பது உண்மைதான். அவை எல்லாம் பொலிஷ் செய்யப்பட்டு வீட்டில் அழகுக்காக அடுக்கி வைக்கப்படுபவை. கைப்படாக் கலைப்பொருட்கள் அவை. அவற்றைக் கேட்டு மொக்கேனப்பட எனக்கு விருப்பமில்லை.

 

-5-

மிழர் கலாசார சங்கத்தின்ர தலைவராய் இருக்கிறியள். ஆட்டம் பாட்டமெண்டு விழாக்களை ஒழுங்குபடுத்திறதை விட்டிட்டு, சங்கத்தின்ரை கணக்கிலை இந்த சாமான்களை வாங்கி ஒரு பொது இடத்திலை வைச்சால் என்ன…?’ கொழும்பு மணியத்துக்குக் குத்தல் கதை சொன்னார் விஸ்வலிங்கம் மாஸ்ரர். அவருக்கு மணியத்தின் தலைவர் பதவியில் ஒரு கண், இதனால் மணியம் ஒழுங்காக வேலை செய்கிறார் இல்லை என்று பகிரங்கப்படுத்துவதில் வெகு குறியாக இருந்தார்.

செத்த வீட்டிலை உங்கடை எலெக்ஷன் ரென்சனை அவிட்டு விடாதையுங்கோ…’ என்றவாறே அங்கு வந்தார் சம்பந்தியம்மா. அவரும் சங்கத்திலை முக்கிய புள்ளி. மணியத்தை அவருக்குக் கொழும்பிலேயே தெரியும். அடுத்த வருடம் மணியத்தின் அநுசரணையுடன் சங்கத்தின் ‘காரியதரி’சியாகாவாவது வந்துவிட வேண்டுமென்பது சம்பந்தியம்மாவின் ஆசை.

விஸ்வலிங்கம் மாஸ்ரர் சம்பந்தியம்மாவின் ‘குலுக்கல்’ கதைக்கு பதில் சொல்ல முன்பு, நிலைமையை உணர்ந்த நான் சாமான் பட்டியலை உரத்து வாசிக்கத் தொடங்கினேன். ‘மஞ்சள், நெய், அரிசிமா, அரிசி…’ இவ்வாறு நீண்ட பட்டியல் இறுதியில் ‘சோற்றுப் பருக்கை’ என்று முடிவடைந்தது.

சாவு வீட்டிலை சோற்றுப் பருக்கை என்னத்துக்கு…?’ என்று இழுத்தார் விஸ்வலிங்கம் மாஸ்ரர்.

வாய்க்கரிசி போட்டு முடிந்தவுடன் அரிசிப் பொரியுடன் சோற்றுப் பருக்கையும் போட்டால்தான் ஆத்மா அமைதியடையும்,’ என விளக்கம் கொடுத்தார் சைவக்குருக்கள்.

அப்ப… நல்ல குத்தரிசி சோறாய் வாத்தியாருக்கு போடுங்கோ… அவரும் ‘அது’ திண்டு ஐஞ்சாறு வருஷம் இருக்கும்’ என்றார் நமசிவாயம், உள்ளுக்கு இன்னொரு குறிப்புப் பொருளைச் சொருகியவாறு.

வாத்தியாருக்குக் குத்தரிசிச்சோறு வேண்டும். ஒரு வருடத்துக்கு தேவையான வயல் நெல்லை ஊரில் அறுவடை முடிந்ததும் கூடையொன்றில் குவித்து வைத்திருப்பார். வாத்தியார்மாமி சமைத்தால் அதில் ஒரு தனி ருசியுண்டு. அவரது கைவாகு அப்படி. நல்ல கறி சமைக்கும் போதெல்லாம் ‘பாடம்’ முடிந்தவுடன் என்னையும் அங்கேயே சாப்பிடச் சொல்வார். சிட்னியில் வசிக்கும் வாத்தியார் மகன் பேரம்பலம் என்னிலும் இரு வருடங்கள் மூத்தவன். முதற்தடவையிலேயே மாவட்டத்தில் கூடுதல் புள்ளி பெற்று மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுவிட்டான். வாத்தியார் இதுபற்றி என்றுமே தம்பட்டமடித்தது கிடையாது. எல்லோரும் படித்து முன்னுக்கு வர வேண்டுமென்பது அவர் கொள்கை, பிறர் பிள்ளை தலை தடவினால் தன்பிள்ளை தானே வளரும் என்பது அவர் நம்பிக்கை.

வாத்தியாரின் மகளான சித்திரலேகா என்னைப் பார்க்கிலும் இரண்டு வயது இளையவள். அவளை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். வாத்தியார் மாமி மாதிரி தக்காளி நிறம். தேர் மாதிரி வளர்த்தி. அறிவும் அழகும் இணைந்தால் எதுவோ, அதுதான் அவள். நான் உள் வீட்டுப் பிள்ளையானதால் அவளுடன் பழகுவதற்கு எந்தத் தடையுமிருக்கவில்லை.

எனக்கும் பொறியியல் படிப்புக்குப் பல்லைக்கழக அனுமதி கிடைத்தது. பேராதனையிலுள்ள பொறியியல் கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பு, வாத்தியார் மாமி என்னை விருந்து சாப்பிட அழைத்திருந்தார். சித்திரலேகாவே அன்று சமைத்திருந்தாள். கத்தரியும் உருளைக்கிழங்கும் சேர்ந்த பால்க்கறி, பருப்பு, பயத்தங்காய், ஆட்டுக்கறி பிரட்டல், பொரியல், எலும்புச்சொதி, அப்பளம் என எனக்குப் பிடித்தமான வகைகளால் அமர்க்களப் படுத்தியிருந்தாள். சாப்பாடு முடிந்தவுடன் அருகில் யாருமில்லாத நேரம் பார்த்து எனக்கொரு ‘பைலட்’ பேனா கொடுத்தாள். எழுதாத காதற் காவியம் அது என்பதை உணர்ந்து கொண்டேன்.

என்ஜினியரிங் படிக்கப் போகிறேன்.’ என்ற துணிவில், அவள் முன்னிலையே வாத்தியாரிடம் கேட்டுவிட்டேன். சித்திரலேகாவிற்கு வெட்கம் அழகாகத்தான் இருந்தது. வாத்தியார் கண் நிறைய பூரிப்போடு எங்கள் இருவரையும் பார்த்தார். அம்மா இதற்கு மறுப்புத் தெரிவிக்கமாட்டார் என்று எனக்குத் தெரியும்.

இறுதியாண்டு பரீட்சை முடிந்த பின்பு இடிபோன்று அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. சித்திரலேகா கிணற்றில் தண்ணீர் அள்ளும்போது ஊருக்குத் தென்புறத்தேயுள்ள இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட ‘செல்’ அவளைத் தாக்கியதாம். அந்த இடத்திலேயே அவள் உயிர் பிரிந்துவிட்டது. இறுதிப் பரீட்ஷை நேரமாகையால் வாத்தியார் இதை எனக்குத் தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டாராம்.

இதன் பின் ஊருக்குப் போக என் மனம் இடம் தரவில்லை. வேலை ஒன்றை எடுத்துக்கொண்டு அம்மாவையும் ஊரிலிருந்து வரவழைத்து, கொழும்பிலேயே தங்கிவிட்டேன்.

 

-6-

மாலை நான்கு மணியளவில் ஊரார் உறவினர் தெரிந்தவர் நண்பர்களெனக் கூட்டம் பெருகியது. சம்பந்தியம்மா வந்தவர்களை பூதவுடல் அருகே கூட்டிச் செல்வதிலும், அவர்கள் கொண்டுவந்த மலர் வளையங்களை வாங்கி அடுக்குவதிலும் பிஸியாக இருந்தார். இடையிடையே CDயில் ஒலித்த தேவாரங்களை மாத்திப் போடுவதிலும், மலர் வளையத்தில் இணைக்கப்பட்ட பெயர் மட்டையை வெளியே தெரியும்படி இழுத்து விடுவதிலும் அவர் அலுக்காத அக்கறை காட்டினார். வைக்கப்பட்ட மலர் வளையங்களின் எண்ணிக்கையும், அவற்றை யார் யார் வைத்தார்கள் என்பதும் தனது மருமகனின் அந்தஸ்து ‘சிம்பல்’ என்று சம்பந்தியம்மா நினைத்திருக்கக்கூடும்.

நேரம் செல்லச் செல்ல வாத்தியார் மகனுடனும், மருமகளுடனும் வேலை செய்யும் வெள்ளைக்கார நண்பர்கள் வரத்துவங்க, வாத்தியார் மகன் கறுத்த ‘கோட்சூட்டில்’ வாத்தியாரின் தலைமாட்டில் நின்றிருந்தான். மருமகளும் கறுத்த உடையணிந்து கணவனருகே கதிரையில் அமர்ந்திருந்தாள். சும்மா சொல்லப்படாது. இத்தனை வருடங்களின் பின்பும் இருவரின் சோடிப் பொருத்தம் அம்ஸமாகவே அமைந்திருந்தது.

இவர்கள் இருவருக்கும் கொழும்பிலேயே மிக ஆடம்பரமாகத் திருமணம் நடந்தது. பிரபல கண் வைத்திய நிபுணர் டாக்டர் பொன்னம்பலம் தனது கிளினிக்கில் வேலை செய்த வாத்தியார் மகன் பேரம்பலத்தைத் தனது மருமகனாக்கிக் கொண்டார். சித்திரலோகாவின் அவலச் செய்தி அறிந்ததற்குப் பிறகு பேரம்பலத்தின் திருமணத்தில்தான் வாத்தியாரை முதன் முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவரைக் கண்டதும் கலியாண வீடென்றும் பார்க்காமல் நான் அழுதே விட்டேன். வாத்தியார் வழமைபோல் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, தட்டிக்கொடுத்தார். பழைய அதே வாத்தியார்தான்.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களினதும் சம்பந்தி வீட்டாரினதும் படாடோபங்களுக்கு மத்தியில், வாத்தியார் தனித்துவமானவராகவே தோன்றினார். திருமணம் முடிந்த மறுவருடமே மேற்படிப்பிற்காக சிட்னி வந்த பேரம்பலம், நிரந்தரப் பிரஜையாகித் தற்போது சகல செல்வாக்கும் சௌகரிங்களும் நிறைந்தவனாக உயர்ந்துவிட்டான். நாட்டு நிலைமையைக் காரணம் காட்டி, நானும் குடும்பத்துடன் சிட்னிக்குக் குடிபெயர்ந்தது எத்தனையோ ஆண்டுகள் கழித்து நிகழ்ந்தது.

வந்த புதிதில் ஒரு நாள் வாத்தியார் மகன் வசிக்கும் செல்வந்தவர்கள் பகுதிக்கு, முதன்முதல் வாங்கிய எனது பழைய காரில் சென்றிருந்தேன். எனது கார் அவர்களது ‘றைவேயில்’ (Drive way) நிற்பதை வாத்தியார் மருமகள் விரும்பாதது அவள் முகத்தில் தெரிந்தது. பேரம்பலத்தைச் சுருக்கி ‘Pal’ ஆக மாற்றிய வாத்தியார் மகனால், பழைய நட்புடன் பழக முடியவில்லை. வீட்டில் மனைவியின் ஆதிக்கம் சர்வ வியாபக மாகத் தெரிந்தது. அதன்பின் அவன் வீட்டிற்குப் போவதை நான் நிறுத்திக் கொண்டேன். ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்று வாத்தியார் அடிக்கடி சொல்லுவார்.

ஒரு நாள் பரத நாட்டிய அரங்கேற்றமொன்றில் பேரம்பலத்தைச் சந்தித்தேன். வாத்தியார் சிட்னிக்கு வருவதாகச் சொன்னான். சித்திரலேகாவின் சோகத்தில் வாத்தியார் மாமியும் இறந்துவிட, ஊரில் தனித்திருந்த வாத்தியார் யாழ்ப்பாண நிலவரங்களும் பிடிக்காமல் கொழும்புக்கு வந்துவிட்டதாக விபரம் சொன்னான்.

கொழும்பில் எப்படி வாத்தியாரின் பொழுது போகிறது…?’ என்று என்னையும் அறியாமலே கேட்டுவிட்டேன்.

வாத்தியாரின் உதவியால் படித்து உயர்பதவியில் அமர்ந்திருக்கும் ஊரவர் ஒருவர், அறையொன்றை ஒழுங்கு செய்து கொடுத்ததாகவும், அங்கும் வழமை போல காலையும் மாலையும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாகவும் பேரம்பலம் கூறினான்.

வாத்தியார் பிள்ளைகளிடம் பணம் வாங்க மாட்டாரே! கொழும்பில் பென்சன் பணத்துடன் எப்படிச் சமாளிக்கிறார்…?’ மகன் இங்கிருந்து பணமேதும் அனுப்பிகிறாரா என்று அறியும் ஆவலில் விடுப்புப் புடுங்கினேன் நான்.

அறை எடுத்துக் கொடுத்த அவரது மாணவனே தனது குழந்தைகளுக்கு வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காரணம் காட்டி வாடகையின் பெரும் பகுதியைச் செலுத்தி விடுவதாகப் பேரம்பலம் பட்டும் படாமலும் சொன்னான்.

 

-7-

வாத்தியாரின் பேரக்குழந்தைகள் அங்குமிங்கும் ஓடியவாறு தாத்தாவின் பிரேதப் பெட்டிக்கு வெளியே தொங்கும் பட்டுக் குஞ்சங்களைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன.

ஹாய். அங்கிள்’! என்றவாறே என் அருகே வந்த வாத்தியாரின் பேத்தி, ஏன் எனது மகளைக் கூட்டிவரவில்லை என்று கேட்டாள். அவளுக்கு அங்கு விளையாடுவதற்கு சோடி கிடைக்காத ஆதங்கமாக இருக்கலாம்.

நாளை உன்னுடனும் தம்பியுடனும் சேர்ந்து தாத்தாவுக்கு பந்தம் பிடிக்க வருவாள்’ என்றேன் ஆங்கிலத்தில், அவளுக்கு விளங்கும்படியாக.

பந்தம் என்றால் என்ன…?’ வியப்புடன் கேட்டாள் பேத்தி.

இறந்தவருக்கு இறுதி மரியாதை செலுத்த பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் பிடிப்பார்கள். இது எங்கள் ரடிஸன் (Tradition). இங்கு அதைச் செய்ய மண்டபத்தில் அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் நீண்ட மெழுகுதிரியைக் கொளுத்தி நாளை நீங்கள் பிடிக்கலாம் என்று விளக்கினேன். ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தவளைத் தம்பியார் விளையாட வருமாறு அழைக்கவே அங்கிருந்து அகன்றாள்.

குடும்பக் கட்டுப்பாட்டில் வாழ்க்கையை அனுபவித்த பின், வாத்தியார் மகன் தம்பதிகளுக்கு அடுத்தடுத்து பிறந்தவை இக் குழந்தைகள். பெண் குழந்தை அச்சொட்டாக வாத்தியார் மாமி மாதிரியே இருந்தாள். உயிரோடிருந்தால் மாமி உண்மையில் சந்தோஷப்பட்டிருப்பார்.

துணையில்லாமல் குழந்தைகளை வளர்ப்பது என்பது வெளிநாட்டில் லேசுப்பட்ட விஷயமில்லை. அதுவும் கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதாக இருந்தால் கேட்கவே தேவையில்லை. குழந்தை பிறந்த நேரங்களில் மாத்திரம், சம்பந்தி அம்மா சிட்னிக்கு வந்து போனராம். அமெரிக்காவில் உள்ள மகனுடன் வாழ்ந்த சம்பந்தி அம்மாவுக்கு வேலைகள் அதிகம். எல்லாம் கலை – கலாசாரம் – கல்வி சம்பந்தப்பட்டவைகளே. முன்னாள் கல்லூரி அதிபரான அவருக்கு ஆசிரியத் தொழிலில் அவர் ஆற்றிய சேவைக்காக இலங்கை அரசு ‘வித்யஜோதி’ பட்டமும் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கெல்லாம் அரசியல் செல்வாக்கு வேண்டும். வாத்தியாரின் சேவையுடன் ஒப்பிடும்போது இதெல்லாம் தூசு என்பது பலரறிந்த உண்மை. ஆனால் யாழ்ப்பாணக் கிராமமொன்றில் வாத்தியார் செய்த சேவை, கொழும்பிலுள்ள அரசாங்கத்துக்கு எங்கே தெரியப்போகிறது? வாத்தியார் மகனுடைய பிள்ளைகளை பாலர் வகுப்புக்குக் கொண்டு போவதற்கும், திருப்பி அழைத்து வருவதற்கும், மாலை வேளைகளில் அவர்களை மேற்பார்வை செய்வதற்கும் ‘ஆள்’ ஒன்று அவசரமாகத் தேவைப்பட்டது. இதற்கென இங்கு நம்பிக்கையான ஆள் கிடைப்பது கடினம். கிடைத்தாலும் அநியாயச் செலவு. நியூயோக், சிட்னி, கொழும்பு எனப் பறந்து திரியும் பிரபல சமூக சேவகியைப் பிள்ளைகளைப் பராமரிக்குமாறு கேட்க முடியுமா? தன் பிள்ளைகளைப் பார்க்கவே கொழும்பில் இரண்டு ஆயாக்களையும் ஒரு ‘போயை’யும் அமர்த்தி இருந்ததாக மூச்சுக்கு மூச்சு பெருமைப்படும் சம்பந்தியம்மாவிடம் இந்தப் பிரச்சினையைப் பிரேரிக்கத்தானும் யாருக்குத் துணிவு வரும்?

மாமா ‘சும்மா’ கொழும்பிலை இருக்கிறார். அவரைக் கூப்பிட்டால் என்ன?’ என்ற யோசனையை முன் வைத்தாள் மருமகள். பேரம்பலத்திற்கு இது நல்ல யோசனையாகப் பட்டது. சின்னவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களையும் இணைத்து பாசத்தைப் பிழிந்து பேரம்பலம் தந்தைக்குக் கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து பேரப் பிள்ளைகள் தாத்தாவைப் பார்க்க அடம்பிடிப்பதாக அன்பொழுக வேறொரு கடிதமெழுதினாள் மருமகள். வெளிநாட்டு வாழ்க்கை தனக்கு ஒத்துவராது என்பது வாத்தியாருக்கு நன்கு தெரியும். கொழும்பிலேயே நரக வேதனை அனுபவிப்பவர்.

பொடியன் பாசத்துடன் அழைக்கிறான். கடைசி நேரத்தில் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடக் குடுத்து வைக்க வேணும். கொழும்பு நிலைமைகளும் வரவரச் சரியாய் இல்லை’ என்று பலரும் பல நியாயங்களை வாத்தியாருக்கு எடுத்துச் சொல்லி அவர் மனசை இளக வைத்தார்கள். அரைகுறை மனசுடன்தான் வாத்தியார் விசாவுக்கு மனுக்கொடுத்தார். ஆனால் பேரம்பலம் இணைத்திருந்த தஸ்தாவேஜுக்கள் கனதி சேர்க்கவே மிக விரைவில் அவருக்கு விசா கிடைத்துவிட்டது.

முக்கிய வேலை காரணமாகப் பேரம்பலத்தால் விமான நிலையத்துக்குப் போக முடியவில்லை. இதனால் மருமகளே விமானநிலையம் சென்றாள். சிட்னி விமான நிலையத்தில் வாத்தியாரால் மருமகளை இனம் காண முடியவில்லை. கொழும்பிலே மருமகளுக்கு நீண்டு வளர்ந்த அடர்த்தியான கூந்தல். அந்தக் காலத்தில் சேலை உடுத்து, கூந்தலில் பூவைத்து மருமகள் வரும் போதெல்லாம் பெருமை பொங்க வாத்தியார் அறிமுகம் செய்வார். இன்று மயிரைக் கத்தரித்து, தலையைப் பொப் செய்து, ஜீன்ஸ் ரிசேட்டுடன் மருமகள் அவரை வரவேற்றாள். வந்திறங்கியதும் வாத்தியாருக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி இதுதான். விமான நிலையத்தில் மருமகள் சந்தித்த வெள்ளைக்காரி தெரிந்தவளாக இருக்க வேண்டும். இருவரும் வாத்தியாரை விட்டுச் சிறிது விலகி, வண்டியில் சூட்கேஸை வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தனர். வேட்டி சட்டையுடனும் அங்கவஸ்திரத்துடனும் காலில் செருப்புடன் வின்ரரில் வீட்டுக்கு வந்த அவரைப் பேரக்குழந்தைகள் நூதனமாகப் பார்த்தன!

 

-8-

பிரேதப் பெட்டியின் அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒற்றைக் குத்துவிளக்கு ‘கூடு’ பற்றி எரிந்தது. எண்ணெய் ஊற்றித் திரியை நேர்த்தி செய்த பின்னர், ஊதுவத்திகளைக் கொளுத்தி அதற்குரிய ஸ்ராண்டிலே பொருத்தி வைத்தார் சம்பந்தியம்மா. எதையோ நினைத்துக் கொண்டவர்போல, எனக்குப் பக்கத்தில் காலியாக இருந்த கதிரையில் வந்தமர்ந்து கொண்டார்.

நாளைக்குக் ‘கனசனம்’ வரும். இவர்களைத் தெரியாத சனமே இங்கை இருக்கினம்? தமிழ்ச்சங்கம், இலக்கியப் பேரவை, இந்து மா மன்றம் என்று பல சங்கங்களும் இரங்கல் உரை நிகழ்த்த இடம் ஒதுக்கித் தரும்படி ‘ரெலிபோன்’ அடிச்சுக் கேட்டவை. அவை தம்பி.., வாத்தியர் தமிழுக்கும் சமயத்துக்கும் செய்த சேவை என்று

தெந்தட்டாய் சொல்லிப்போட்டு விட்டிடுவினம். வாத்தியாரின்ரை பெருமைகள் கொஞ்சமோ? நாங்கள் அவற்றை சகல பெருமைகளையும் இங்கிலீஸிலும், தமிழிலும் அடிச்சு விட்டாலென்ன?… வாத்தியாரோட நல்லாப் பழகின தமிழறிவுள்ள ஆள் உம்மை விட்டால் ஆர் இருக்கினம்? எனக்கு நீர் கொஞ்சம் உதவி செய்தால், இரவோடை இரவாக கொம்பியூட்டரிலே போட்டு நாளைக்கு ஈமைக் கிரியைகளுக்கு முன்னம் சீனாக்காரன்ரை பிரஸிலை அடிச்செடுத்திடலாம். வாத்தியார் விஷயத்திலை நான் கேட்டே நீர் செய்ய வேணும்…? என்று வார்த்தைகளிலே தேன் தடவிப் பேசினார் சம்பந்தியம்மா.

சகல பெருமைகளும்’ என்று சம்பந்தியம்மா எதைக் குறிப்பிடுகிறார் என்பதை நான் நன்கு விளங்கிக் கொண்டேன். வாத்தியாரைச் சாட்டாக வைத்துத் தன்னுடைய மகள் மருமகன் எனத் துவங்கி, தன்னுடைய பெருமைகளையும், குடும்பத்தின் மேதா விலாசங்களையும் ஆவணப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்பது எனக்குத் தெரியும். அவர், தான் நினைத்ததைச் சாதிப்பதில் சூரி! அவருடைய கோரிக்கைக்குத் தலையாட்டிய வண்ணம், வாத்தியாருடைய சிட்னி வாழ்க்கையில் நான் நனவிடை தோயலானேன்.

சின்னத்துரை வாத்தியார் சிட்னிக்கு வந்த புதிதில், அவரது வரவைக் கொண்டாட, ஒன்றுகூடல் விருந்து ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்கள். வாத்தியார் தொலைபேசியில் என்னைத் தவறாது வரும்படி அழைத்திருந்தார். மனைவி மகளுடன் நான் குறித்த நேரத்துக்கு அங்கு சென்றிருந்தேன். அன்று தான் வாத்தியார் என் மனைவியையும், மகளையும் முதல் முதலாக பார்த்திருக்க வேண்டும். கண் கலங்கியவாறே மகளைத் தூக்கி உச்சிமுகர்ந்தார்.

எப்படி வாத்தியார், சிட்னி பிடிச்சுக் கொண்டுதோ?’ என்று வாத்ஸல்யத்துடன் கேட்டேன். அவர் தனது பதிலைச் சொல்வதற்கிடையில் கறிச்சட்டிகளுடன் வரத் துவங்கிய விருந்தினர்களைக் கண்டு மலைத்துப் போய் நின்றார் வாத்தியார்.

ஏனப்பா இதுகளைக் காவிக் கொண்டு வாறியள்…? எனக் கேட்டவாறே மருமகள் கறிச்சட்டிகளை வாங்கி மேசையில் அடுக்கத் தொடங்கினாள்.

விருந்துக்கு இன்னும் சமைக்கேல்லை, என்னண்டு ஆக்கள் வந்தாப்போலை எல்லத்தையும் ஒப்பேத்தப் போகினம்’ என்று பயந்த வாத்தியாருக்கு இப்போதுதான் அவுஸ்திரேலிய விருந்தின் சூக்குமம் புரிந்தது. அவருக்கு இந்த B.Y.O. முறை முற்றிலும் புதிசு. திவசம், கலியாணம், நல்லநாள் பெருநாள் என்று அண்டா அண்டாவாக அவித்துக் கொடுத்தவர் சின்னத்துரை வாத்தியார்.

தாங்களே கொண்டுவந்து தாங்களே சாப்பிடுவதற்குப் பெயர் விருந்தில்லை…’ என்று முணுமுணுத்தவாறே ஊரில் ஸ்பெஷலாக சுற்றுவித்து எடுத்து வந்த சுருட்டொன்றைப் பற்ற வைத்துக் கொண்டார் வாத்தியார்.

அங்கு வந்திருந்த மேல்மட்ட பெண்களுக்கு சுருட்டு மணம் ஒத்துப் போகவில்லை. முகத்தைச் சுழித்தவாறே இருமத் தொடங்கினார்கள். குறிப்பறிந்த மருமகளும், ‘மாமா, ‘இனி உந்த சுருட்டுப் புகைக்கிறதை விட்டிடுங்கோ… இங்கை புகையிலை சுருட்டும் வாங்கேலாது. ‘காப்பெற்’ உந்த மணத்தை இழுத்துதோ…, வீடு முழுக்க சுருட்டு மணம் தான் அடிக்கும்’ என்றவாறே வாத்தியார் கையில் புகைந்து கொண்டிருந்த சுருட்டை நாசூக்காய் வாங்கி ரொயிலெற்றுக்குள் போட்டு, தண்ணீர் அடித்துவிட்டாள்.

வாத்தியார் என்னைப் பரிதாபமாகப் பார்க்கவே, நான் அதைக் காணதவன் போல நடித்தேன். வந்திருந்த விருந்தினர்கள் அடுத்த அறையில் ‘சிகரெற்’ புகைத்தாவாறே கையில் மதுக் கிளாசுடன் வம்பளத்து கொண்டிருந்தார்கள். சீமாட்டிகளும் ‘அல்க்ககோல்’ இல்லாத ‘வைன்’ என்று துவங்கி பசியெடுக்குமென ‘ரெமி-மாட்டின்’ குடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

பார்ட்டி களைகட்டத் தொடங்கி விட்டது. வந்திருந்த கூட்டம் CDயில் ஒலித்த இசைக்குத் தாளமிட்டவாறே, ‘மணம், குணம், காரம்’ ஏற்றப்பட்ட bitesஸையும் ஒரு கைபார்த்துக் கொண்டிருந்தது. இதிலே ஒருவகையான சடங்குமுறை பின்பற்றப்படுவதை வாத்தியார் அவதானிக்கத் தவறவில்லை.

வாத்தியாருக்காக ஒழுங்கு செய்யப்பட்ட விருந்தில் அவரைக் கவனிப்பார் யாருமில்லை. மெல்ல வந்து என்னருகில் அமர்ந்து கொண்டார். தவிப்புடன் விரல்களை இறுக மடிப்பதும் விரிப்பதுமாக அவஸ்தைப்படுவது நன்கு தெரிந்தது. கூர்ந்து கவனித்தேன். வாத்தியார் கையில் புதுச் சுருட்டு! மெல்ல எழுந்து வெளியே நின்ற எனது காருக்கு கூட்டிப் போய் காருக்குள் இருந்த ‘லைற்றரை’ எடுத்துத்துக் கொடுத்தேன். எதுவுமே பேசாது சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நீண்டதொரு பெருமூச்சுவிட்டார் வாத்தியார்.

நான் இங்கை வந்திருக்கக்கூடாது… பெரிய பிழை விட்டிட்டன்…!’ கண் கலங்கினார் வாத்தியார்.

வந்ததும் வராததுமாய் ஏன் இப்படிச் சொல்லுறியள்? போகப் போக இடம் பிடிபட்டிடும். நாங்களும் இங்கைதானே இருக்கிறம். ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ’ என ஆறுதல் சொன்னேன் நான்.

நெடுநேரம் காருக்குள் இருந்து என்னுடன் ஊர் நினைவுகளை மீட்டார் சின்னத்துரை வாத்தியார்!

 

-9-

ரவு முழுவதும் வீட்டிலே பூதவுடலை வைத்திருக்க நகரசபை அனுமதிக்காது. அதனால் இரவு ஒன்பது மணியளவில் அந்திமசேவை நிறுவனத்தினர் பூதவுடலைக் கொண்டு செல்ல வந்திருந்தார்கள். நாளைக் காலை பத்து மணியளவில் வாத்தியார் நேரடியாக சைவச் கிரியைகளுக்கென ஒழுங்கு செய்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்படுவார். பிரேதப் பெட்டியை மூடியவுடன் விக்கி விக்கி அழுதான் பேரம்பலம். அது இறுதி நேர உணர்ச்சிகளின் வெளிப்பாடு. தன் இயலாமைகளுக்காகவும் சேர்த்து அழுகிறானோ என்றுகூட எனக்குத் தோன்றியது.

வாத்தியார் வாழ்ந்தனுபவிச்சுப் போட்டுத்தானே போயிருக்கிறார்! அதுவும் வெள்ளிக்கிழமை நல்ல ‘சா’செத்திருக்கிறார். நீங்களும் அவருக்கு ஒரு குறையும் வைக்கேல்லை. மனவருத்தப்படாமல் பிள்ளையளுக்குச் சாப்பாட்டைக் குடுங்கோ. அதுகளும் நாள் முழுக்க ஒண்டும் சாப்பிடாமல் ‘கோலா’வைக் குடிச்சுக் கொண்டு திரியுதுகள்…’ என்றவாறே உறவினர்கள் சமைத்துக்கொண்டுவந்த சாப்பாடுகளை மேசைமேல் எடுத்து வைத்தார் சம்பந்தி அம்மா. பிள்ளைகள் சோறு கறி வேண்டாம் என்று அடம்பிடித்தபடி பிறீஸரை(Freezer)த் திறந்து ‘சொசேஸை’ வெளியில் எடுத்து மைக்கிறோ வேவில் சூடாக்கினர்.

மைக்கிறோவேவும் குளிர்ப்பெட்டியும் இல்லா விட்டால் சனங்கள் இங்கை பட்டிணி கிடந்து செத்துப் போங்கள்…, கோழிக்குஞ்சுகள் உயிரோடை உலாவின காலத்திலும் பார்க் ‘பிறீஸ்ஸருக்குள்ள (Freezer)கிடக்கிற காலம்தான் அதிகம்’ என்று வாத்தியார் ஒரு தடவை பகிடியாகக் குறிப்பிட்டது சடுதியாக என் நினைவில் உறைத்தது. வந்த சில நாட்களிலே சிட்னியில் தான் பெற்ற அநுபவங்களை வாத்தியார் தொடுத்துக் கோர்த்துச் சொல்லியிருந்தார். அவரின் ஒருநாள் அநுபவமாக அவற்றைத் தொகுத்து மீள்பார்வை செய்வது சுவையானது!

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் துகில் எழுந்த அரவத்தைக் கேட்டு வாத்தியாரும் விழித்துக் கொண்டார். நேரமாற்றம் என்கிற சங்கதிகளை எண்ணிப் பார்க்காமல் ‘புதிய இடம் நித்திரை வரேல்லை’ என்று வாத்தியாரும் எழுந்து விட்டாராம். குளிர்ப்பெட்டிக்குள் இருந்து எடுக்கப்பட்ட பாணில் இரண்டு துண்டுகளை ‘ரோஸ்ற்’ பண்ணி பட்டர் பூசி ஒரு கோப்பையில் வைக்கப்பட்டிருந்தது. வைத்த குறிப்பிலே அதுதான் தமது காலை உணவு என்பதைப் புரிந்துகொண்டார். பாண் ‘ரோஸ்ற்’ செய்வது எப்படி, ‘மைகிறோவேவ்’ எப்படி உபயோகிப்பது என்கிற நுட்பங்களை எல்லாம் மகன் பேரம்பலம் வாத்தியாருக்கு அக்கறையுடன் விளங்கப்படுத்திக் கொண்டிருந்தான். பரிதாபகமாக பார்த்த வாத்தியாரைப் பார்த்து, ‘புதிசில கொஞ்சம் கஷ்டம்தான். பிறகு பழகிப் போகும். இண்டைக்கு இதிலை வைச்சிருக்கிற சோறு கறியை மைக்கிறோவேவிலை சூடாக்கி மத்தியானம் சாப்பிடுங்கோ…, எவ்வளவு நிமிஷங்களுக்கு சூடாக்கிறது என்பது பற்றி கவனமாக இருங்கோ…, எதையும் கருக்கிப் போடாதையுங்கோ’ என்று அக்கறையோடு சொன்னான் மகன்.

மருமகளோ ‘ராபிக் ஜாம்’ வாறதுக்கு முன்னாலே போக வேண்டுமென்று, தனது ஸ்போட்ஸ் மொடல் காரில் வேலைக்குப் போய்விட்டாள். மத்தியானச் சாப்பாட்டைச் சரிக்கட்டிப் பார்ப்போம் என்கிற எண்ணத்திலே குஷினி வேலையிலே வாத்தியார் கொஞ்சம் சிரத்தை எடுத்தார். குளிர்ப்பெட்டியின் மேல் அறையைத் திறந்து பார்த்தார் வாத்தியார். சில் என்ற குளிர் காற்று அவர் முகத்தில் வீசித் துன்புறுத்தியது. இருந்தாலும் அதிலே சேமிக்கப்பட்ட ‘திரவியங்களை’ நோட்டமிட்டார். பிளாஸ்டிக் பெட்டிகளில் கறிகள் திகதியிடப்பட்டு Freeze பண்ணப்பட்டிருந்தன. மனக் கணக்கிட்டுப் பார்த்தார் வாத்தியார். சில கறிகளின் வயது மூன்று மாதங்களை எட்டிப் பிடித்திருந்தன. பச்சைமிளகாய், கறிவேப்பிலை எல்லாம் பொலீத்தின் பைகளிலே இறுகக் கட்டப்பட்டு பாடம் செய்யப்பட்டிருந்தன. கறிப்பெட்டி ஒன்றைத் திறந்து பார்த்தார் வாத்தியார். தக்காளிக் குழம்பாக இருக்க வேண்டும். கல்லு மாதிரி இறுகிக் கிடந்தது.

கோப்பையிலே ஏடுத்து வைக்கப்பட்ட சோறு கறியைப் பேரம்பலம் கற்றுத்தந்த தொழில்நுட்ப முறைகளைப் பிரயோகித்து சூடாக்கிச் சாப்பிட்டுப் பார்த்தார் வாத்தியார்.

சப்’! எல்லாவற்றையும் ‘பின்’(Bin)னுக்குள் கொட்டி விட்டார். மாலையில் மருமகள் வேலைவிட்டுத் திரும்பி வந்து புதிசாக ஏதாவது சமைப்பாள்தானே என்கிற எண்ணத்திலே இரண்டு மூன்று சுருட்டுக்களை வஞ்சகமின்றித் தாராளமாகவே பற்ற வைத்துக் கொண்டார்.

வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த மருமகள் பத்திரகாளியானாள்.

மாமா, உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுறது வீட்டுக்குள்ளை சுருட்டுப் பத்த வேண்டாம் எண்டு. வீடு முழுக்க சுருட்டு நாத்தம். ஆரேன் வந்தால் என்ன நினைப்பினம்…’?

வாத்தியார் வாயடைத்துப் போனார். அவருடைய வாழ்க்கையில் யாரும் அவர் முகத்தைப் பார்த்து குரல் எழுப்பிப் பேசியது கூடக் கிடையாது. படலம் அத்துடன் முடியவில்லை. ‘டொயிலட்’ போய் வந்ததும் மீண்டும் மருமகள் முணு முணுத்தாள். வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை. சமையல் அறை ‘சிங்’கிலே கோப்பைகள் கழுவாமல் கிடந்ததுக்கு ஒரு ‘கமண்ட்’! – ஒரு பாட்டம்

மழை பெய்து ஓய்ந்தது போல!

மருமகள் இரவுச் சாப்பாட்டுக்கென பாண் துண்டுகளை எடுத்து ‘பட்டரை’த் தடவிக் கொண்டு ‘சான்விச்’ தயாரித்தவாறே வாத்தியாருடன் பேச்சுக் கொடுத்தாள்.

மாமா, நாளைக்குப் பிள்ளையளைப் பள்ளிக்கூடம் விட்டவுடன் கூட்டிக்கொண்டு வாருங்கோ. உங்களுக்கும் நடந்தது போல இருக்கும். அதுகளும் பின்னேரப் பிள்ளை பராமரிப்பு நிலையத்திலை கிடந்து களைச்சு விழுந்து வருகுதுகள்…, அதுகளுக்கும் உங்களோட ஒட்டிக் கொள்ளவும் ஆசைவரும் என்றவள், செய்த ‘சான்விச்’சை தானும் பிள்ளைகளும் சாப்பிட்ட பின்னர் மேல் மாடிக்கு சென்று டிவிக்கு முன்னால் அமர்ந்து கொண்டாள்.

மாடிக்கு வாத்தியார் என்றுமே போனதில்லை! வாத்தியார் தனது இரவுச் சாப்பாட்டை எட்டிப் பார்த்தார். குளிர்பெட்டிக்குள் இறுகிக் கிடந்த பழைய தக்காளிக் குழம்பு சூடாக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் சில பாண்துண்டுகள், ‘ரோஸ்’ரரில் போட்டு வாட்டி எடுத்தால் மொறு மொறுப்பாகத் தின்னலாம் என்ற எண்ணத்தில் போலும், ரோஸ்ரரும் மேசைமேல் வைக்கப்பட்டிருந்தது.

பேரம்பலம் நேரம் சென்றுதான் வீடு வந்தான். தந்தையைக் கண்டதும் ‘சாப்பாடு முடிஞ்சுதோ’ என்று கேட்டவாறே, பதிலுக்குக் காத்திராமல், மாடிக்குப் போய்விட்டான். பின்பு இறங்கவேயில்லை. அவன் இரவில் ‘ஸ்போட்ஸ்’ கிளப்பில், ரெனிஸ் முடிந்தவுடன் சாப்பிட்டு விட்டு வரும் சங்கதியைப் பல நாள் கழித்தே வாத்தியார் அறிந்து கொண்டார்.

ஊரிலே மாமி என்கிற மகராசி வாழ்ந்த காலத்தில்… வாத்தியாரின் சாப்பாட்டு விஷயங்களிலே எவ்வளவு கரிசனை? பழையது என்ற பேச்சுக்கே இடமில்லை…, ‘சூடாகச் சாப்பிட்டால்தான் இவருக்கு பத்தியம்…’ என்று சொல்வதிலே வாத்தியார் மாமி அடையும் புளகாங்கிதத்தை நான் அறிவேன்.

 

-10-

காலையிலே வாத்தியாரின் ஈமக்கிரியை நடைபெறும் மண்டபத்திற்கு கிரியைச் சாமான்கள் சகிதம் போனேன். மனைவியையும் மகளையும் கூடவே அழைத்துச் சென்றிருந்தேன். வாத்தியாருக்கான – என்னை ஆளாக்கிய கல்விமானுக்கான – இறுதி அஞ்சலி அது!

அதிலே குடும்பமாகக் கலந்துகொள்வதை என் மனசு விரும்பியது. என் மனைவியும் மகளும் ஒரு கட்டத்திலே வாத்தியாருடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கிவிட்டார்கள். நேற்றிரவு முழுவதும் என் மனைவி சலிப்புச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். இந்தப் பரிவும் பாசமும் பாவனையல்ல என்பது எனக்குத் தெரியும்.

காலம் செல்லச் செல்ல வாத்தியார் என் வீட்டுக்கு நடந்தே வரத் துவங்கினார். இங்குள்ள Formalityகளை மதிக்காமல், உரிமையுடன் வருவது எனக்கு மன நிறைவினைத் தந்தது. ‘நடைக்கு நடையுமாச்சு…, உங்களை வந்து கண்டதுமாச்சு,’ என்று அவர் பூசி மெழுகிச் சொன்னாலும் அவரது மன வெப்பிசாரங்கள் முழுவதையும் நான் அறிவேன். என் மனைவி சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். எனவே அவள் சீக்கிரமே வாத்தியாரைத் தனது தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பாராட்டத் துவங்கினாள். வழக்கமாக வெளியில் எங்குமே சாப்பிடாத வாத்தியார் என் மனைவி அழைத்ததும் மறுப்பேதும் கூறாது சாப்பிடுவார். அவருக்கென்றே குத்தரிசியும் சுருட்டும் இங்குள்ள தமிழ்க் கடையொன்றில் வாங்கி, வீட்டிலே ‘ஸ்டொக்’ வைத்திருந்தேன். இதுபற்றி என் மனைவி கொண்டிருந்த அக்கறை எனக்குத் திருப்தி தந்தது.

வீட்டில் என் மகளுடன் நானும் மனைவியும் தமிழிலே பேசுவதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்தோம். எமது வீட்டிலே கமழ்ந்த தமிழ் மணத்தை வாத்தியார் மிகவும் அநுபவித்தார். வாத்தியாரின் அக்கறையினால் தமிழ்ப் பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டிகளில் என் மகள் பரிசுகள் பல பெற்று தமிழிலே நல்ல ‘கெட்டிக்காரி’ என்கிற பெயரையும் சம்பாதித்தாள்.

ஏன் வாத்தியார், உங்கடை பேரப்பிள்ளையளை தமிழ்ப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பலாமே…’? என்று என் மனைவி ஒரு நாள் வஞ்சகமில்லாமல் கேட்டுவிட்டாள். அவள் சிட்னியில் வார இறுதி நாட்களில் நடைபெறும் தமிழ்ப் பாடசாலையொன்றின் தொண்டர் ஆசிரியை. நீண்ட பெருமூச்சொன்றே வாத்தியாரிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. மனைவி அந்தக் கேள்வி மூலம் அவருடைய மனைச வருத்திவிட்டாளோ என்று நான் மனம் புழுங்கினேன்.

மனைவி கண்ணீர் விட்டு அழுகிறாள். அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. றொக்வூட் மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களில் சில எனது காருக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. நான் வெளியே வந்தேன். என் மனம் ஏன் இப்படித் தவிக்க வேண்டும்? இறுதிப் பிரிவு மகா கொடுமையானது…!

மற்றவர்களின் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் மண்டபத்தின் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் எனது காரை நிறுத்தியிருந்தேன். என் காருக்கு அண்மையில் ஒருவர் சிகரெட் புகைத்துக் கொண்டு நின்றார். அவரும் ஒரு தமிழர் தான். வாத்தியாரின் பூதவுடல் இன்னமும் மண்டபத்துக்கு கொண்டு வரப்படாததால் நேரத்தினைப் போக்காட்ட அவர் சிகரெட் புகையை வளையமாக விட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டிலே என்றைக்கு வாத்தியார் சாப்பிட்டாலும் அன்று ஒரு விருந்து நடப்பதாக என் மனம் குதூகலிக்கும், சாப்பிட்ட கையோடு எனது வீட்டின் பின்புறத்தேயுள்ள வெளி விறாந்தையில் இருந்துதான் அவர் சுருட்டுப் புகைப்பார். வாத்தியார் என்றைக்குமே தமது வீட்டுக் கதைகளை வெளியில் சொல்வது கிடையாது. தன்னால் தாங்க இயலாத நேரத்தில் மாத்திரம் என்னிடம் சொல்லித் தனது மனதைத் தேற்றிக்கொள்வார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர் தமது சுருட்டுக் கட்டுக்கு நடந்த அவலத்தைச் சொன்னார். ஊரில் இருந்து அக்கறையுடன் எடுத்து வந்த சுருட்டுகளின் ஒரு பகுதியை காற்றுப் போகாதாவாறு செப்பமாகக் கட்டி அலுமாரியின் மேல், யார் கண்களிலும் சட்டென்று படாதாவாறு, பத்திரப்படுத்தி வைத்திருந்தாராம். கையிருப்பு முடிந்தவுடன் சுருட்டை எடுக்கப் போனவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே சுருட்டுக் கட்டைக் காணவில்லை. அதனைக் கண்ணாலேகூடப் பார்த்ததில்லை என்று வீட்டிலுள்ள எல்லோரும் சாதித்தார்கள். சில நாட்களின் பின்னர் பேரப் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்த பொழுதுதான், பேரன் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தான்.

மம்மி அறையைச் சுத்தப்படுத்தியபோது சுருட்டுக் கட்டைக் கண்டெடுத்ததாகவும், யாருக்கும் தெரியாதவாறு ‘கராஜில்’ ஒளித்து வைத்து, நகர சபை குப்பை எடுக்கும் நாளாகப் பார்த்து அதைப் ‘பின்’னுக்குள் போட்டதாகவும் சொன்னான். இந்த சமாசாரத்தினை கிழவனுக்குச் சொல்லக்கூடாது என்றும் கண்டித்தும் வைத்திருந்தாளாம். அதன் பின்னர் என் வீட்டிற்கு வந்தால் மட்டும் வாத்தியார் சுருட்டுப் புகைப்பார். அவர் சுருட்டின் அடிமை என்பதல்ல. சுருட்டுப் புகைத்தலைத் தமது சுதந்திரத்தின் குறியீடாகவும், பாத்தியமாகவும் அவர் அனுபவித்தார் என்பதை நான் விளங்கிக் கொண்டேன்.

 

-11-

றொக்வூட் மயானத்தில் அங்கு தேவையான பொருள்களை இறக்கி வைத்தேன். இன்னும் நேரம் இருந்தது. நினைவுகளின் பாரம் நெஞ்சை அழுத்தவே நேரம் ஊர்ந்து செல்வதாகத் தோன்றியது. மீண்டும் ஈமக்கிரியைகள் நடைபெறும் மண்டபத்திற்குச் செல்லும் நோக்கத்துடன் காரில் ஏறி அமர்ந்தேன். அப்பொழுது தான் சம்பந்தியம்மா தயாரித்த வாத்தியாரின் நினைவு மலரை சீனாக்காரனின் அச்சகத்தில் எடுக்க வேண்டுமென்ற சங்கதி நினைவிலே உறைத்தது. அந்த அச்சகம் வெஸ்ற்மீட் (Westmead) ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்தது. பத்து மணிக்கு முன்னதாக ஈமக்கிரியைகள் நடைபெறும் மண்டபத்திற்கு சென்றுவிட வேண்டும். போகும் வழியில் வெஸ்ற்மீட் ஆஸ்பத்திரிக்கு முன்னாற் செல்லும் வீதியில் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதனால் அமுல் படுத்தப்பட்டிருக்கக்கூடிய புதிய வீதி ஒழுங்குமுறைகளிலே மாட்டித் தவிப்பதை தவிர்ப்பதற்காக ‘பரமற்றா’(Parramatta) வீதி வழியாக காரை வேகமாகச் செலுத்தினேன். கார் ஆஸ்பத்திரியை விலத்திச் சென்றாலும், என் நினைவுகள் அதனைச் சுற்றிக் கிளைவிட்டன.

வெஸ்ற்மீட்’ ஆஸ்பத்திரியிலே வாத்தியாருக்கு நிறைய அனுபவம் உண்டு. முதன் முறையாக அவர் அங்கு அனுமதிக்கப்பட்ட பொழுது பேரம்பலம் நான் வேலை செய்யும் கந்தோருக்குப் போன் செய்து விபரம் சொன்னான். அத்துடன் தன் தந்தை என்னை அவசரமாகப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தான். அன்று மாலையே மனைவியுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன். ‘யூறலோஜி’ பிரிவில் குழாய் மூலம் சிறுநீர் கழித்தபடி படுத்திருந்தார் வாத்தியார். எங்களைக் கண்டதும் கண்களில் திரண்ட கண்ணீரை சாமர்த்தியமாக மறைத்தபடி புன்னைகைத்தார்.

என்ன நடந்தது…’? எனக் கேட்டேன். அந்த வர்த்தமானத்தை அவர் தொட்டம் தொட்டமாகத் தான் சொன்னார். அவற்றைக் கோர்வைப்படுத்தி நான் விளங்கிக் கொண்டேன்.

இரண்டு நாட்களின் முன்பு காலையில் பிள்ளைகளை பாலர்வகுப்பிலம் விடுவதற்கு கூட்டிச் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோதுதான் திறப்பை எடுக்காது, கதவை இழுத்துச் சாத்தியதை உணர்ந்து கொண்டார். மருமகள் வரும் வரை வெளியில் உள்ள வாங்கில் அமர்ந்துள்ளார். ‘வின்ரர்’ குளிர் சிறுநீர் பையைத் தாக்கியதால் ‘புரஸ்ரேற்’ சுரப்பி வீங்கி அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. ‘எனக்கு அல்லது பேரம்பலத்துக்கு ரெலிபோன் பண்ணியிருக்கலாமே…’? எனக் கடிந்து கொண்டேன்.

செய்திருக்கலாம்தான். பக்கத்துக் வீட்டு வெள்ளைக்காரனோடை பேசி விஷயத்தை சொல்லுற துக்கும் பாஷைப் பிரச்சினை. வெளியிலை ‘பூத்’திலை இருந்து ரெலிபோன் பண்ணியிருக்கலாம்… அதுக்கு என்னிட்டை காசேது…? வாத்தியார் மறுபுறமாகத் திரும்பி, வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

பேரப்பிள்ளையளும் பின்னேரம் பள்ளிக் கூடத்தாலை வந்து குளிருக்கையே நிண்டதுகள்…’? இது என் மனைவியின் கேள்வி.

பேத்தி அடுத்த வீட்டுக்குச் சென்று தாய்க்கு ரெலிபோன் பண்ணியதாகவும் ‘சோட்’ லீவைப் போட்டுவிட்டு வீட்டை வந்த மருமகள், |வேட்டியைக் கட்டிக்கொண்டு நாள் முழுக்க வெளியே ‘கார்டன்’ பெஞ்சிலை இருந்து மானத்தை வாங்காதையுங்கோ.

போகேக்கை திறப்பை எடுத்துக்கொண்டு போக வேணுமெண்டதும் தெரியாத அளவுக்கு அறளை பேந்து போச்சுது…’ என்று ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணியதாகவும் தெரிந்தது.

ஒரு மனுஷனுக்கு மறதி வாறதில்லையே…? எனக்கெண்டாத் தம்பி, எல்லாம் வெறுத்துப் போச்சுது’ என்று நாத் தளதளக்கக் கூறியவாறு கண்ணீரை மறைக்க மீண்டும் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டார் வாத்தியார். மனப்பாரத்தைத் தாங்க முடியாத போதெல்லாம் வாத்தியார் தான் பெற்றுவரும் மனக்காயங்களை இப்படித்தான் வெளிப் படுத்துவதுண்டு. அந்த நேரங்களில் நானும் அவருக்கு ஒரு சுமைத்தாங்கியாக மாறுவேன். ‘புரஸ்ரேற்’ சுரப்பியை ஒப்பரேசன் செய்து அகற்ற வேண்டும் என்கிற வைத்திய ஆலோசனையின் பேரில் தான் டாக்டர்கள் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சாஜ்’ செய்தார்கள். இந்த ஆஸ்பத்திரி விஜயத்துக்குப் பின்னர் வாத்தியார் சிறுநீர் கழிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

 

-12-

ரமற்றா றோட்டை நான் எடுத்தது மொக்குத்தனமான வேலை என்பதைப் பின்னர்தான் உணர்ந்தேன். தேவையில்லாத அலைச்சலுக்கு உள்ளாகி, ஈமக்கிரியை மண்டபத்துக்கு வரச் சுணங்கிவிட்டது. நான் மண்டபத்தை அடையவும் அந்திம சேவை

நிறுவனத்தினர் வாத்தியாரின் பிரேதப் பெட்டியைக் கொண்டு வந்து மேடையில் வைக்கவும் சரியாக இருந்தது. ஒரு மூலையிலே அமர்ந்து விஸ்வலிங்கம் மாஸ்டர் உருக்கமாகத் தேவார திருவாசகம் பாராயணம் செய்து கொண்டிருந்தார். அவரையே ‘சுண்ண’ப்பாடலையும் பாடுமாறு நான் முன்னரே கேட்டிருந்தேன்.

எனது ‘மோபைல்’ ரெலிபோன் கிணுகிணுத்தது.

சைவக் குருக்கள், தான்’On the way’ என்றும், பத்துப் பதினைந்து நிமிடங்களில் மண்டபத்துக்கு வந்து விடுவதாகவும் சொன்னார்.

வாத்தியாருக்குச் செய்யப்பட்ட அலங்காரத் திருத்தங்கள் என் பார்வையில் விழுந்தன. இப்பொழுது மஞ்சள் நிற புதிய குர்தா ஒன்று அணிவித்திருந்தார்கள். இது மிக நாகரீகமான சில்க் குர்தா. எத்தனையோ தலைமுறைகளுக்கு இப்பாலாகச் சினிமா யுகத்தின் உடையலங்காரத்திற்குள் வாத்தியார் கொண்டு வரப்பட்டிருந்தார். நெஞ்சுப் பகுதியிலே பெரிய பூ வேலைப் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாத்தியாரின் இயல்பான தோற்றம் மாற்றி அமைக்கப்பட்டு விட்டதான மனக்குறை எனக்கு. வெள்ளைக்கார நண்பர்களும் வாற இடத்திலே, எங்கள் பழைமையும் ஸ்டையிலானதுதான் எண்டு தெரிய வேணும்’…, என்கிற சம்பந்தியம்மாவின் வாதங்களுக்கு எதிராக யாரால் அப்பீல் செய்ய முடியும்?

சிட்னியிலும் தமது வழமையான தோற்றத்தைப் பேணுவதிலே வாத்தியார் பலவிதமான கஷ்டங்களை எதிர்நோக்க நேர்ந்தது. வகுப்பில் உள்ள ஏனைய பிள்ளைகள் காரில் வந்து இறங்குவதாகவும், தாத்தா வேட்டியைக் கட்டிக்கொண்டு வருவது ‘Funnyயாக’ இருப்பதாகவும் தினமும் பேரப்பிள்ளைகள் முறைப்பாடு செய்தன.

பாம்பு தின்னுகிற ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு எண்டு சொல்லுறது போலத்தான் இதுவும். ஊரிலை வேட்டியிலை திரிஞ்ச எத்தினை பேர் இங்கை காற்சட்டை போட்டுக்கொண்டு திரியினம். இந்த நாட்டின்ரை வின்ரருக்கும் குளிருக்கும் வேட்டி சரிப்பட்டு வருமே’? என்று மகன், மருமகள் – ஏன் சம்மந்தி அம்மா கூட-பலவிதத்திலும், பல தொனியிலும் சொன்ன போதிலும் வாத்தியார் மசியவில்லை.

காலாதி காலமாய் நான் வேட்டியோடைதான் திரியிறன். உங்களுக்காக இந்த வயதிலை காற்சட்டை போடச் சொல்லுறியளோ…’? என்று வாத்தியார் இந்த விஷயத்தில் பிடிவாதமாகவே இருந்தார். முதல் வின்ரர் கழிந்தபிறகு வாத்தியாருக்கு ஓரளவு பயம் தீர்ந்துவிட்டது! இந்தக் கட்டத்திலேதான், இனிப்பான ஒரு செய்தியை மாலதி, வாத்தியார் காதிலே போட்டு வைத்தாள். மாலதி, ஊரிலே வாத்தியாரிடம் படித்தவள். அவள் ‘சென்ர லிங்கில்’ வேலை செய்பவள். வேலையற்றவர்கள், வயோதிபர், ஒற்றைத் தாய் ஆகியோருக்கு உதவிப்பணம் வழங்கும் அரச திணைக்களம் அது.

நீங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு வருஷமும் ஒன்பது மாதமுமாகுது வாத்தியார்! ‘ஸ்பொன்ஸரில்’ வந்தால் இப்போதைய சட்டப்படி இரண்டு வருஷத்துக்குப் பிறகுதான் உதவிப்பணம் கிடைக்கும். இன்னும் மூன்று மாதத்திலை நானே எல்லா ஒழுங்கும் செய்து விடுகிறன். உங்களுக்கு இரண்டு கிழமைக்கு ஒருக்கால் ‘சோசல்’ காசு வரும் என்று சொன்னாள். இதற்குப் பிறகு வாத்தியார் ஒரு நாள் என் மனைவியிடம் பேசிய போது ‘சோஷல்’ பணம் கிடைத்தவுடன் தான் செய்யவிருக்கும் விஷயங்களை மனந்திறந்து சொன்னார்.

ஒரு டொலர் ரிக்கற்றிலை நாளெல்லாம் ரெயினிலும் பஸ்ஸிலும் பயணம் செய்யலாம். தமிழ்க் கடைகளுக்குப் போய் தமிழ்ப் புத்தகங்களும் பேப்பர்களும் வாங்கி வாசிக்கலாம்…’ எனத் தன்னுடைய தன்மானத்தினை ஓரளவேணும் காப்பாற்றலாம் என்கிற கனவுகளிலே மிதந்தார்.

ஆனால் அந்தக் கனவுகள்…!

 

-13-

சைவக் குருக்கள் இறுதிக் கிருத்தியங்களைச் செய்யத் துவங்கிவிட்டார். ஊதுவத்திகளும், சாம்பிராணி வில்லைகளும் இலேசாகச் சுகந்த மணத்தினை அறையெல்லாம் பரப்பிக் கொண்டிருந்தது.

இந்தப் புகையும் மணமும் அவுஸ்திரேலிய மண்ணுக்கு அந்நியமானவை. இருப்பினும் இவற்றின் மூலம் வாத்தியாரின் இறுதிச் சடங்கிலே தமிழ் மணம் ஊட்டப்படுவதாக அங்கு குழுமியிருந்தவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

மீண்டும் குளிர் சிறுநீர் பையைத் தாக்கிய தால் அவராலே சிறுநீரை கட்டுப்படுத்த முடியவில்லை. மன உழைவுகளும் சேர்ந்து வாத்தியாரை உருக் குலைத்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கிடையில், சடுதியாக பத்து வயசுகளின் மூப்பு உடலிலே புகுந்து கொண்டதாக அவர் அவதிப்பட்டார்.

வீடு முழுக்க மூத்திர வாடையடிக்குது. வீட்டுக்கு ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாறதுக்கும் வெக்கமாய் இருக்குது…’ என்று புறுபுறுக்கத் தொடங்கினாள், மருமகள்.

மூத்திரவாடை’என்ற பிரச்சினையை முதலில் கிளப்பியவர் சம்பந்தியம்மாவே. எதையும் திட்டம் போட்டு தந்திரமாக நிறைவேற்றுவதில் அவர் மகா கெட்டிக்காரி! அவுஸ்திரேலியாவில் மூத்த பிரஜைகளுக்குள்ள வசதி அமேரிக்காவில் இல்லை என்பது சம்பந்தி அம்மாவுக்கு நன்கு தெரியும். இதனால் மகளின் ஸ்பொன்ஸரில் நிரந்தரப் பிரஜையாக விசா கிடைத்து சிட்னியில் ‘என்றிமேக்’ பண்ணியவர் கடந்த இரண்டு வருடங்களாக நியூயோக்-சிட்னி-கொழும்பு என்று பறந்து திரிந்துவிட்டு ‘சோசல்’ பணம் எடுக்கும் காலம் வந்தவுடன் நிரந்தரமாகத் தங்க சிட்னி வந்துள்ளார். மகளின் வீட்டருகே கொழும்பு மணியத்தின் உதவியுடன் இரண்டு அறை அப்பாட்மென்ற் ஒன்றையும் வாடகைக்கு அமர்த்தி, சின்னக் கார் ஒன்றும் வாங்கிவிட்டார். பேரப்பிள்ளைகளும் இப்போது அம்மம்மாவின் காரிலேயே பள்ளிக்கூடம் போய்வரத் தொடங்கி விட்டன.

சிட்னியிலும் சம்பந்தி அம்மா மெல்ல மெல்லத் தனது சமூக சேவைகளை ஆரம்பித்தார். இடையிடையே மகள் வீட்டிற்கு மிஞ்சிய கறிகளை பிளாஸ்ரிக் பெட்டியில் போட்டுக்கொண்டு வந்து போகவும் துவங்கிவிட்டார். வந்த அலுவலைப் பார்த்துக்கொண்டு போகும் சுபாவம் அவருக்கு எப்பொழுதும் இல்லை. எதிலும் மூக்கை நுழைக்காமல் எப்படிச் சமூக சேவை செய்வது…?

ரொயிலெற்றை கழுவி சுத்தமா வைச்சிருங்கோ வாத்தியார். பிள்ளையளுக்கும் வியாதிவரப் போகுது…’ என சாதுவாகச் சொல்லித்தான் விவகாரத்திற்கு அத்திவாரம் போட்டார். வாத்தியார் ஒரு ஊர்ச் சட்டம்பி என்றும், தான் கொழும்பில் கல்லூரி அதிபராக இருந்தவர் என்கிற ‘கெறு’ சம்பந்தியம்மாவுக்கு எப்பொழுது உண்டு.

வாத்தியாருக்கு ‘சோஷல்’ உதவிப்பணம் கிடைக்க இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன.

வாத்தியாரை வீட்டிலை வைச்சுக் கஷ்டபடப் படுகிறதிலும் பார்க்க ‘நேசிங்ஹோமிலை’ (Nursing Home) விட்டால் ஒழுங்காய் கழிவித்துடைச்சு பாத்துக் கொள்ளுவினம். மணி அண்ணற்றை சம்பந்தியையும் அங்கைதான் கொண்டுபோய் விட்டிருக்கினம். நேரத்துக்கு நேரம் நல்ல சாப்பாடாம்!’ என்று வாத்தியார் கேக்கக் கூடியதாக மகளுக்கு ஆலோசனை கூறினார் சம்பந்தியம்மா. அப்பொழுது பேரம்பலமும் அங்கிருந்தான். சமய சந்தர்ப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் சம்பந்தியம்மா மகா கெட்டிக்காரி. இதனை வாத்தியாரால் தாங்க முடியவில்லை.

என்னை ஒரு இடமும் கொண்டு போய் விடவேண்டாம். யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிடுங்கொ. என்ரை பென்சன் காசிலை நான் வாழுவன். ஒரு நேரக் கஞ்சி வைச்சுத் தாறதுக்கு எனக்கு ஆக்கள் இல்லையே’? என்று வாத்தியார் குரல் எழுப்பிச் சொன்னார்.

உந்தச் சண்டையுக்கை ‘பாஸ்’ எடுத்து ஆர் இப்ப உங்களைக் கூட்டிக்கொண்டு போறது? அங்கை இருந்து கொண்டு மகன் கவனிக்கிறான் இல்லை’ எண்ட அவப்பெயரை அதுகளுக்கு தேடித்தராமல் பேசாமல இங்கை இருக்கோ.’ தன் மருமகன் சார்பாக சம்பந்தியம்மா பேசினார்.

சாதாரணமாகவே வீட்டில் பேரம்பலத்தின் பேச்சு எடுபடாது. மாமியாரின் சந்நிதானத்திலே அவன் எப்பொழுதும் வாயில்லாப்பூச்சி.

அந்த ஆலோசனைக்கு தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், திடீரென பற்றீரியா இன்பெக்ஸன் வந்து வாத்தியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சுகமானதும் நேரடியாக, வாத்தியார் நேர்ஸிங் ஹோமிலே விடப்பட்டார். எல்லா ஒழுங்குகளையும் சம்பந்தியம்மாவே முன்னின்று செய்திருக்க வேண்டும். அவரை அங்கு கொண்டுபோய் விடும்வரை மகளும் தாயும் யாருக்கும் விஷயத்தை அவிட்டுவிடவில்லை. செய்தி கேட்டவுடன் நான் அடுத்த சனிக்கிழமை வாத்தியாரைப் பார்க்க நேர்ஸிங் ஹோம் போயிருந்தேன். என்னைக் கண்டதும் வாத்தியார் உடைந்து போனார். மத்தியானம் கொண்டு வந்து வைத்த அவித்த உருளைக் கிழங்கும் இறைச்சித்துண்டும் ஆறிக் குளிர்ந்திருந்தது. வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை கோப்பையில் வைத்து இருந்தார். சாப்பாட்டுக் கோப்பையை எடுக்க வந்த வெள்ளைக்கார பெண்மணி ‘சாப்பாடு ருசிக்கவில்லையா…’? என ஆங்கிலத்தில் கேட்டாள்.

வாத்தியாரிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் விளங்காதா’? என ஆச்சரியத்துடன் கேட்டாள் அவள்.

அப்பொழுது நான் அவரின் பெருமைகளைச் சொல்லி, அவராலே பலர் முன்னுக்கு வந்ததையும் எடுத்துக்கூறி அவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி அவளைக் கேட்டுக்கொண்டேன். வாத்தியாரின் நிலையைப் பரிவோடு புரிந்துகொண்ட அவளும் அவரின் கன்னத்தை அன்புடன் தடவிக் கொடுத்தாள்.

பாஷை புரியாத பிறமொழிச் சூழலில் வாத்தியாரின் நிலையை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. மகளின் பரதநாட்டிய வகுப்பு நேர்ஸிங் ஹோமுக்கு பக்கத்திலேயே நடப்பதால் சனிக்கிழமைதோறும் சாப்பாட்டுப் பார்சலுடனும், தமிழ்ப் பத்திரிகையுடனும் தவறாது அவரிடம் போகத் தலைப்பட்டேன். இந்தக் கடமையிலே நான் ஆத்ம திருப்தி அடைந்தேன்.

அன்று Father’s day!

மனைவி ரிபன் கரியர் ஒன்றில் போட்டுத்தந்த குத்தரிசி சோறு கறியுடன் வாத்தியாரிடம்போயிருந்தேன்.மகன் பேரம்பலம் தனது இல்லாள் சகிதம் ரோஜாப் பூங்கொத்தொன்றுடன் வந்திருந்தான். நான் கொண்டு சென்ற ரிபன் கரியர் அவர்கள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

என்ன மாமா…, இங்கைதானே நாங்கள் நல்ல ‘பலன்ஸ்-டயற்’ குடுக்கச் சொல்லி ‘எக்ஸ்ரா’ காசு கட்டிறம். எங்கடை ஊர்க் கறிசோறு தின்ன இங்கை இருக்கிற மற்றவையெல்லே, கறி மணக்குதெண்டு ‘கொம்பிளேன்’ பண்ணப்போகினம்..’ என்றாள் வாத்தியார் மருமகள்.

அப்பா…, வந்த இடத்திலை அதுக்கேற்ற மாதிரி வாழப் பழகுங்கோ. நீங்கள் என்ன சின்னப் பிள்ளையே…’? மனைவி முன் வாயைத் திறந்தான் பேரம்பலம்.

வாத்தியாரின் உதடுகள் துடித்தன. நிலைமையப் புரிந்து கொண்ட நான், ‘அதுக்கென்ன பேரம்பலம், இண்டைக்கு ஒரு நாளைக்குத்தானே? அவர் சாப்பிட்டவுடனை யன்னலை வடிவாய் திறந்துவிட்டு, ‘எயர் பிறெஸ்னர்’ அடிச்சு விடுறன்’ என்று சமாதானம் கூறினேன்!

சிறிது நேரம் எவரும் பேசவில்லை. மௌனத்தை கலைத்தபடி ‘நாளைக்கு, உன்ரை அம்மாவின்ர திவசம். அண்டைக்குத்தான் பேத்தி திவ்வியாவின்ரை பிறந்த நாளும் வருகுது… ‘என்று வாத்தியார் மகனுக்கு மெதுவாக சொன்னார்.

இங்கை ஆர் மாமா திவசம் குடுக்கினம்? நான் அம்மாட்டை சொல்லி முருகன் கோவிலிலை மாமி பெயருக்கு ஒரு அருச்சினை செய்விச்சு விடுறன்…’ என்று மருமகள் குறுக்கிட்டாள்.

அண்டைக்கு இவை திவ்வியாவின்ரை பிறந்த நாளுக்கு ஆக்களையும் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கினமாம்…’ என் இழுத்தான் பேரம்பலம்.

பேத்டே வீட்டிலையே கொண்டாடுறியள்? பிள்ளையளையும் பார்க்க ஆசையாய்த்தான் இருக்கு…’வாத்தியார் தனது ஆசையை வாய் திறந்து சொன்னார்.

பேரம்பலத்திடமிருந்து என்ன பதில் வரப் போகிறது என்ற ஆவலுடன் காத்திருந்தேன் நான்.

‘Happy Fathers Day….! எப்பிடி வாத்தியார் இருக்கிறயள்’? என்று கேட்டவாறே அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் சம்பந்தியம்மா.

என்ன இங்கை நிண்டு மினக்கெடுகிறயள்…? சாமான் வாங்கிறேல்லையே…? நாளைக்கிடையிலை ஊரிப்பட்ட வேலையள் செய்து முடிக்கவேணும். திவ்வியா தன்ரை கிளாஸ் மேற்ஸையும் வரச்சொல்லி கூப்பிட்டிருக்கிறாளாம். அவளின்ர ‘பேர்த்டே’ கேக்குக்கு ஐஸிங் செய்யவே எவ்வளவு நேரம் எடுக்கப்போகுது’ என அவசரப்படுத்தினர் சம்பந்தியம்மா.

மானிடம் இவ்வளவு தாழ்ந்ததை நான் என்றுமே அனுபவித்ததில்லை!

 

-14-

சுண்ணப் பாடலை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் விஸ்வலிங்கம் மாஸ்ரர். பேரம்பலம் தந்தைக்குக் கடமை செய்யும் அருந்தவப் புதல்வன் போன்ற தோற்றம் எல்லோர் மனதிலும் படியுமாறு சுண்ணமிடிக்கத் துவங்கினான். ஆனால் என் மனம் அன்று நேர்ஸிங் ஹோமில் நடந்த நிகழ்ச்சியிலேயே சுழன்று கொண்டிருந்தது. என் மண்டைக்குள் உலக்கை கொண்டு இடிப்பது யார்? எது? வாத்தியாருடைய அந்தச் சின்னக் கோரிக்கைகூட நிராகரிக்கப்பட்டது மனசை அரித்துக் கொண்டிருந்தது.

மகளின் பரதநாட்டிய வகுப்பு முடிந்து அவள் வரும் வரையில் காரிலே காத்திருந்தேன். ஆனால் நினைவுகள்…?

வாத்தியார் நேர்ஸிங் ஹோமில் வாழ்ந்த காலத்தில் ஒரு தடவையேனும் வீட்டுக்கு கொண்டு செல்லப் படவில்லை. நாளைக்கு வாத்தியாரைக் கோவிலுக்கு கூட்டிச்சென்று அவர் கையால் வாத்தியார் மாமிக்கு திவசம் கொடுக்க வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்தேன். என்னை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்த குருவுக்குச் செய்ய வேண்டிய கடமை அதுவென நான் தெளிவு பெற்றேன். மகள் காரிலே ஏறினாள். அவளுக்கு அருகில் உள்ள மக்டொனால்ஸில் ‘யூனியர் பேகர்’ வாங்கிக் கொடுத்ததும், அவளுக்கு சந்தோஷம். நான் மீண்டும் நேர்ஸிங் ஹோமுக்குச் செல்லக் காரை திருப்பினேன். அங்கு இப்பொழுது சீனன் ஒருவனே மனேஜராக நியமிக்கப்பட்டு இருந்தான். அவன் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவன். இந்துக்களின் பழக்கவழக்கங்கள் நன்கு தெரியும். அவனிடம் சகல விபரங்களையும் எடுத்துச் சொல்லி, நாளைக்கு வாத்தியாரை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டேன்.

முருகன் கோவிலுக்கா’? என்று மகிழ்ந்த சீனன், சிங்கப்பூர் சிறங்கூன் றோட்டில் தைப்பூசத்துக்கு நடைபெறும் காவடி பற்றிக் கூறியவாறே வாத்தியாரின் கையெழுத்தைப் பெற்றுவருமாறு ‘போம்’ ஒன்றைத் தந்தான். வாத்தியாரிடம் விஷயத்தை விளக்கி கையொப்பம் கேட்டேன். அதில் கையொப்பமிட்டபோது அழுதே விட்டார். வாத்தியார் குழந்தைப்பிள்ளைபோல தேம்புவார் என்று நான் நினைத்ததில்லை. இறுதியில் சமாளித்துக்கொண்டு, என் மகளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தார்.

அடுத்த நாள் காலை குருக்களுக்கு கொடுக்க வேண்டிய திவஷ சாமான்கள் சகிதம் வாத்தியாருடன் சிட்னி முருகன் கோவிலுக்கு சென்றேன். கோவிலில் வாத்தியார் சின்னப்பிள்ளைபோல் அங்குமிங்கும் சுற்றித் திரிந்த பின் ஒரு தூணில் சாய்ந்து வெகு நேரம் மௌனமானார்.

திவசம் முடிந்து நேர்ஸிங் ஹோமுக்கு வரும்போது வாத்தியார் நன்கு களைத்து விட்டார். இருப்பினும் அவரது முகத்தில் ஒருவித அமைதி குடிகொண்டிருந்தது. வரும் வழியில் சித்திரலேகா பற்றியும், மாமி பற்றியும் வாயோயாது கதைத்தவாறே வந்தார்.

சித்திரலேகா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது… நான் இப்ப உன்னோடை இருந்திருப்பன். எல்லாத்துக்கும் ‘குடுப்பினை’ வேணும்…’ எனக் கண் கலங்கினார் வாத்தியார்.

அன்று அவரைப் பிரியும் போது என் கையினை வாஞ்சனையுடன் பற்றிக்கொண்டு, ‘நான் இன்னும் எத்தனை நாள் இருப்பனோ தெரியாது. உவன் பேரம் பலத்தை நம்பேலாது. அவன் பெண்டுகளின்ரை சொல்லுக்கை நிண்டு ஆடுறான். நான் செத்தால் நீதான் எல்லாத்தையும் பொறுப்பெடுத்துச் செய்ய வேணும்…, செய்வாய்தானே….’? என்று கேட்டார் வாத்தியார். சம்மதத்திற்கு அறிகுறியாக தலையை ஆட்டிக் கொண்டே என் கண்களில் பனித்த கண்ணீரை அவர் பார்த்து விடக்கூடாதென்பதற்காக வாசல் பக்கம் திரும்பினேன்.

வேலை விடயமாக அடுத்த இருவாரங்கள் நான் வெளிநாடு சென்றிருந்தேன். திரும்பி வந்ததும் கந்தோரில் பல வேலைகள் எனக்காகக் காத்திருந்தன. இருப்பினும் நான் இல்லாத காலங்களில் என் மனைவி நேர்ஸிங் ஹோம் செல்லும் பணியைச் செய்து வந்தாள்.

இந்த ஞாயிற்றுக்கிழமை எப்படியும் வாத்தியாரைச் சென்று பார்க்க வேண்டும்’ என்கிற அக்கறையுடன் தமிழ்ப்பத்திரிகைகள் சிலவற்றையும் எடுத்து வைத்து இருந்தேன். தற்செயலாகத்தான் செய்திக்கு பின், தமிழ் முழக்கத்தின் சமூக அறிவித்தலுக்குச் செவிமடுத்தேன்.

சின்னத்துரை வாத்தியார் சிட்னியில் நேற்றுக் காலமானார்…’

 

-15-

ண்டபம் கொள்ளாத கூட்டம் திரண்டிருந்ததில் சம்பந்தியம்மாவுக்குப் பரம திருப்தி. எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் ஒரு தோறணை. பேரம்பலத்தின் பிள்ளைகள் இருவரும் தாத்தாவுக்கு பந்தம் பிடிப்பதற்கு வந்தார்கள். நீண்ட மெழுகுவர்த்திகளையே பந்தமாகப் பாவிக்கும்படி சைவக் குருக்கள் கேட்டுக்கொண்டார். வாத்தியாரைத் தாத்தா என்று வாஞ்சையுடன் அழைக்கும் என் மகளுக்கும் வாத்தியார் மீதுள்ள என் ஆத்மார்த்த உறவை நிலைநாட்ட ஒரு பந்தம் கொடுத்தேன். பிரேதப் பெட்டியருகே குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்த வாத்தியாரின் மருமகளைச் சுற்றிப் பலர் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்கள். எங்கிருந்துதான் இந்த கண்ணீர் மடை திறந்ததோ?

மாமாவுக்கு நாங்கள் என்ன குறை வச்சம்? இன்னும் கொஞ்சநாள் அவர் உயிரோடை இருந்து பேரப் பிள்ளையளின்ரை வளர்ச்சியைப் பார்த்திருக்கலாம்’ என்றவாறே விக்கி விக்கி அழுதாள் மருமகள்.

பிள்ளை, பிறந்தவை ஒரு நாள் சாகத்தானே வேணும்? நீ பார்த்தது போலை இங்கை ஆர் மாமன்மாரைப் பார்த்திருக்கினம்? அவர் உயிரோடை இருக்கேக்கை நீ செய்ய வேண்டியதெல்லாத்தையும் நிறைவாய் செய்திட்டாய்..’ என்று, வாத்தியார் மருமகளின் கண்ணீரைத் தனது சேலைத் தலைப்பால் துடைத்தார், மரகதம் மாமி.

றுக்வூட் மயானம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.

சின்னத்துரை வாத்தியாரின் பூதவூடல் செல்லும் ஊர்வலம் அது.

கொழும்பிலே பிரபல கண் டாக்டராக விளங்கிய பொன்னம்பலம் தம்பதிகளுடைய மருமகன் – டாக்டர் பேரம்பலம் – சிட்னியிலே சம்பாதித்துள்ள செல்வாக்கினைப் பறைசாற்றும் ஊர்கோலமாக அது மயானத்தை நோக்கிச் செல்கிறது.

றுக்வூட் மயானத்திலே இரங்கலுரைகள் துவங்கின. பிரேதப் பெட்டியிலே மட்டும் வாத்தியாரின் முக தரிசனம் பெற்ற கொழும்பு மணியமும் பேசினார்.

இந்தப் படைபோதுமா, அல்லது இன்னும் படை வேணுமா’? என்று கேட்பது போல ஊர்வலத்தின் சிறப்பையும் மரண வீட்டின் பிரமாண்டத்தையும் குறிப்பிட்டார். சிட்னித் தமிழர் கலாசார சங்கத்தின் அடுத்த தேர்தலிலே சம்பந்தியம்மாவின் வெற்றிக்கு இது முதல் படியாய் அமைகிறது என்று அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், அவரது உரையூடே அது மறைபொருளாய்த் தொனித்தது.

நினைவு மலரின் பிரதிகளை சம்பந்தியம்மா ஒவ்வொருக்கும் அக்கறையுடன் விநியோகித்துக் கொண்டிருந்தார்.

சின்னத்துரை வாத்தியாரின் பெருமைகளைப் பேசுவதற்கு இவர்கள் யார்? இரங்கலுரை நிகழ்த்தும் சம்பிரதாயங்களுக்குள் சிக்குண்டு நான் என் ஆன்மாவை இழக்கத் தயாராக இல்லை.

பிரேதப்பெட்டியின் அருகே ஊதுவத்திகள் எரிந்து சாம்பல் உதிர்த்துக் கொண்டிருந்தன. சில தணல் கங்குள் அங்குள்ள ‘கார்பெற்’றில்(Carpet) விழப்பார்த்தன. பிரேதப்பெட்டியுள்ளே, வாத்தியார் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த ஒற்றை வாழைப்பழத்திலே, எரியும் அந்த ஊதுவத்திக் குச்சிகளை சொருகி, கிழே இறங்கினேன்.

வாத்தியார் மூலம்தான் நான் பாரதி பாடல்களைக் கற்றவன் என்பது அப்பொழுது ஏனோ என் நினைவுக்கு வந்தது…!

சிட்னியில் காலமான சின்னத்துரை வாத்தியாரின் நினைவுகள் மெல்லக் கனவாய் பழங்கதையாய் போவதை நான் விரும்பவில்லை. அவர் கற்றுத்தந்த தமிழையும், இலக்கிய ஆர்வத்தையும் துணைப்பற்றி, அவர் சமர்ப்பணமாகவே இக்கதையை எழுதினேன்.

ஆசி கந்தராஜா (2000)

No comments:

Post a Comment