Sunday 24 January 2021

 குறுநாவல் 6:

கீதையடி நீயெனக்கு…

ஆசி கந்தராஜா

 

மீண்டும் விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான் சந்திரன்.

சரிகைக் குஞ்சமெல்லாம் வைத்து அந்த அழைப்பிதழ் வெகு ஆடம்பரமாகவே அமைக்கப் பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தபால்காரருக்கு அந்த அழைப்பிதழ் விசித்திரமாகத் தெரியக்கூடும். அது தவறாமல் அந்த விலாசத்துக்கு போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே, தெருவோரமுள்ள தபால்பெட்டி ஒன்றிலே போடாது, வடபழனி தபால் நிலயத்துக்கு அவன் வந்திருக்கிறான்.

அவுஸ்திரேலிய தொடர் மாடிக் குடியிருப்புகளின் முன்னால் வீதி ஓரமாக, தபால் பெட்டிகள் புறாக் கூண்டுகள் போன்று அமைந்திருக்கும். வீதியில் வலம் வரும் விடலைகள் அதன் மினுமினுப்பில் கவர்ந்து அழைப்பிதழை உருவி எடுக்கலாம். இதனால் பாதுகாப்பாக அதனை வேறொரு தடித்த தபாலுறையில் வைத்திருந்தான். தபாலுறையை ஒட்ட முன்பு அழைப்பிதழை விரித்து மீண்டும் படித்துப் பார்த்தான். மணமகளின் பெயருக்கு முன்னால் அச்சடித்திருந்த ‘டாக்டர்’ என்ற பட்டத்துக்கு வந்தவுடன், நின்று நிதானித்து, அந்த எழுத்துக்களை ஒருமுறை தடவிப் பார்த்தான். இப்பொழுதெல்லாம் திருமண அழைப்பிதழில் மணமக்களின் பெயருக்கு முன்னால் பட்டங்களோ அல்லது பெயரின் கீழ் அவர்களின் தொழில் விபரங்களோ அச்சிடுவதில்லை. ஆனால் சந்திரனுக்கு மணமகளின் ‘டாக்டர்’ பட்டம் அழைப்பிதழில் அச்சிடுவது மிகமிக அவசியமாய் இருந்தது. மணமகள் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவளாம். தந்தை இல்லை. ஆரம்பத்தில், தாயுடன் ‘குயில் குப்பத்தில்’ வாழ்ந்தவள். வீட்டில் வறுமை. மாநிலத்தில் சிறந்த புள்ளிகள் பெற்றமையால் புலமைப் பரிசில்பெற்று அவள் மருத்துவம் படித்தாக, திருமண ஏஜென்சிக் குறிப்பில் இருந்தது. டொலர்களில் சம்பாதிக்கும் அவனுக்கு, அவளின் குடும்ப வறுமை ஒரு பொருட்டல்ல. அவனுக்கு தேவையாய் இருந்த தெல்லாம் அவளின் டாக்டர் பட்டமே!

சந்திரனுக்கு அவுஸ்திரேலியாவில் நிறைய நண்பர்கள். அவர்களுக்கெல்லாம் இப்பொழுதே இந்த அழைப்பிதழை அனுப்ப வேண்டிய அவசரம் இல்லை. சிட்னிக்கு வந்தவுடன் எல்லோரையும் அழைத்து தடல்புடலாக ஒரு விருந்துபசாரம் வைத்துவிட்டால் போதும். ஆனால் அந்த ‘வேசை’க்கு இந்த அழைப்பிதழ் நேரத்துடன் போய்ச் சேர வேண்டும். அவளுக்காகவே அழைப்பிதழை இந்தளவு ஆடம்பரமாக அச்சடித்திருந்தான். தபாலுறையை ஒட்டி தன் கைப்படவே தபாலில் சேர்த்தபோது அவனை அறியாமலே அவன் மனசு நிறைந்தது.

அந்த வேசை வாசிச்சுப் பாக்கட்டும்…’ என மனதில் கறுவியவாறு, ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.

வடபழனி முருகன் கோவிலில் அடுத்த வாரம் அவனுக்கு கலியாணம். கலியாணத்தை எளிமையாகச் செய்யவே ஒழுங்கு செய்திருந்தான். அவனுடைய வருமானத்துக்குத் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தியிருக்கலாம். இந்திய மண்ணிலே அத்தகைய ஆடம்பரம் அவனுக்குத் தேவையற்றது. அவனுடைய ஆவேசமெல்லாம் சிட்னியில் வசிக்கும் அந்த ‘வேசை’க்குப் பாடம் படிப்பிப்பதுதான்.

கோடம்பாக்கம் பாலத்தை தாண்டி ஆட்டோ தி.நகர் நோக்கிச் சென்றது. அங்கேதான் மணமக்களுக்கு ஒப்பனை செய்வதில் புகழ்பெற்ற நிறுவனமும், திருமணப் படப் பிடிப்பாளர்களும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் சந்திரனுக்கு மாப்பிளைக்குரிய படபடப்போ குறுகுறுப்போ இல்லை. பெண்பார்த்த பின்பு மணமகளைச் சந்திக்க வேண்டிய தேவையும் அவனுக்கு இருக்கவில்லை. கிணத்துத் தண்ணியை வெள்ளமா அள்ளிக் கொண்டு போய்விடப் போகிறது என்பது அவனுடைய சமாதானம்.

சந்திரனின் அம்மா பாக்கியம், யாழ்ப்பாணத்திலிருந்து வந்துவிட்டார். பாக்கியம் யாழ்ப்பாணத்தில் பணச் செருக்குடன் வாழ்ந்தவர். அயல் அட்டைகளில் கெறுக்குப்புடிச்ச மனுஷி என்கிற பட்டத்தைப் பெற்று பெருவாழ்வு சுகித்தவர். ஆனால் கணவனின் மறைவுக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் பல, அவரை இப்பொழுது நன்றாகவே பக்குவப் படுத்தியிருந்துள்ளது. மகன் கலகலப்பாக இருப்பதைப் பார்த்து பாக்கியத்துக்கு சந்தோஷம். மகளுக்கு சீதனம் குடுத்தது போக, மகனுக்காக வைத்திருந்த கொழும்பு வீட்டையும், கடையையும், யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளையும் விற்று சந்திரனுக்கு டொலரில் அனுப்பி விடவேண்டும் என மனதுக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டார். இவை எல்லாம் சந்திரனின் அப்பா பொன்னையர் கொழும்பில் சுருட்டுக் கடையும் வாழைப்பழக் கடையும் வைத்துத் தேடிய தேட்டங்கள். கலியாணத்துக்கென சந்திரனின் தங்கச்சி, குடும்ப சமேதராகக் கனடாவிலிருந்து வந்து சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலே தங்கியிருக்கிறாள். சென்னை வெக்கைக்கு பிள்ளையளுக்கு ‘வெகிர்க்குரு’ பிடிச்சிடுமாம். அம்மாவின் உறைப்புச்சாப்பாடும் பிள்ளைகளுக்கு ஒத்துவராதாம். இப்படி அவள் சில நியாயங்களை அடுக்கினாள்.

சந்திரனின் அப்பா பொன்னையா தீவுப்பகுதியைச் சேர்ந்தவர். வறுமை காரணமாக சின்ன வயதிலேயே சுருட்டுக் கடையில் வேலை செய்யவென கொழும்புக்குப் போனவர். சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்பில் சீதனம் கொடுத்து தன்னுடைய தங்கச்சி பூரணத்தை, ஊரிலேயே பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவருக்குக் கட்டிக்கொடுத்தபோது ஊரில் அது பெருமையாகப் பேசப்பட்டது. அதற்காகப் பட்ட கடனை அடைக்க அவருக்கு பல வருடங்கள் எடுத்ததென்னவோ உண்மைதான். இருந்தும் அவர் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறியது பாக்கியத்தைக் கட்டிய பிறகுதான். ‘அவள் வீட்டுக்கு வந்த மகாலஷ்மி’ எனச் சொல்வதில் அவர் வாய் அலுத்ததேயில்லை. அவர் சாகும் போது கொழும்பில் மூன்று வீடுகளும் இரண்டு கடைகளும் ஊரில் காணிபூமிகளுமென பல சொத்துக்கள் சேர்ந்தன. அது அவரின் கடும் உழைப்பினால் மட்டுமல்ல, மனைவி பாக்கியத்தின் சிக்கனத்தினாலுமே சாத்தியமாயிற்று என்பது சத்தியமான உண்மை. பொன்னையரின் தங்கச்சி கணவர் இளவயதிலேயே மாரடைப்பால் இறந்தபோது, பொன்னையர் நிலை குலைந்து போனார். ஆனால் மனைவி பாக்கியமோ அசைந்து கொடுக்கவில்லை. ‘உங்கடை தங்கச்சிக்கு குடுத்தது காணும். பூரணத்துக்கும் மகளுக்கும், வாத்தியாற்ரை பென்ஷன் வரும். எனக்கும் பிள்ளையளுக்கும் அந்தப் பென்சனும் வராது. எங்களுக்கும் இரண்டு பிள்ளையள் இருக்குதெண்டதை மறந்து போகாதையுங்கோ…’ என பாக்கியம் தங்கச்சி குடும்பத்தைக் கவனிக்க விடவில்லை. பொன்னையர் குடும்பம் யாழ்ப்பாணத்திலும், பூரணம் தன் மகள் வதனாவுடன் புங்குடுதீவிலும் வாழ்ந்தமை இதற்குத் தோதாகிப் போனது. காலஓட்டத்தில் பிள்ளைகள் வளரவே இரண்டு குடும்பத்துக்கும் இடையே இருந்த கொஞ்ச நஞ்ச உறவும் அடியோடு விட்டுப்போனது. பொன்னையர் கொழும்பிலே கடையே கதியென்று இருந்ததால், பாக்கியம், அண்ணன் தங்கச்சிக்கிடையில் இடைவெளியை அகலிக்கச் செய்வதில் வெற்றியும் பெற்றார்.

கலியாண ஏற்பாடுகள் பற்றிப் பேசவென, கனடாவிலிருந்து வந்திருந்த தங்கச்சி குடும்பம் சந்திரனின் அப்பாட்மென்றுக்கு வந்திருந்தார்கள். இந்த அப்பாட்மென்ரை ‘றெடிகாஷ்’ கொடுத்து கலியாணத்துக்காகவே சந்திரன் வாங்கியிருந்தான். கலியாணம் முடிந்தபின் மணப்பெண் வாணியின் தாயும் தம்பி கலைச்செல்வனும் அதில் குடியிருக்க வேண்டுமென்பது திருமணப் பேச்சின்போது வாணி போட்ட முதல் கொண்டிஷன். இதனால் அவர்களின் பெயரிலேயே அதைப் பதிவு செய்திருந்தான்.

என்ன சந்திரன், அப்பாட்மென்றுக்கு எயர்கொண்டிஷன் போடேல்லையே? என்ன வெக்கையப்பா இங்கை… இதுக்கை எப்பிடி இருக்கிறியளோ தெரியாது’ என வந்த நேரம் தொடக்கம் ‘பிலிம்’ காட்டிக் கொண்டிருந்தான் தங்கச்சி புருசன் கனகராசா. இவ்வளவுக்கும் அவன் கனடாவிலே, பகலில் தொழிற்சாலை ஒன்றிலும், இரவில் ‘பிற்ஸாஹட்’ ஒன்றிலும் வேலை செய்து, ரொரன்ரோவில் இன்னமும் வாடகை வீட்டிலே குடியிருப்பது சந்திரனுக்குத் தெரியும். மச்சானின் எழுப்பக் கதைகளைக் கேட்டு சந்திரனுக்கு புளிப்பத்தினாலும், கலியாணம் எந்தவித பிரச்சனையுமில்லாமல் நடைபெற வேண்டு மென்பதால் எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டான். உண்மையில், அந்த ‘வேசைக்கு’ பாடம் படிப்பிக்க வேண்டும் என்கிற ஆவேசம் மட்டுமே சந்திரனை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.

 

2

பால்களுள் ஒன்று உடைக்கப்பட்டு மேசை மேல் இருந்தது. வதனாவுக்கு வரும் கடிதங்களை தாய் பிரிப்பதில்லை. நன்கு பழக்கமான எழுத்துக்கள் அந்தத் தபால் உறையில் கானப்பட்டதால் பூரணம் அதைப் பிரித்துப் பார்த்திருக்கவேண்டும். ஒரு மூலையில் தாயர் மௌனமாக உட்கார்ந்திருந்தபோதே ஏதோ ஒரு ‘விசேஷ’ செய்தி அதில் வந்திருக்க வேண்டு மென்பதை வதனா புரிந்து கொண்டாள். வதனாவுக்கு தாய்தான் எல்லாம். தன்னை வளர்க்க தாய் பட்ட கஷ்டங்கள் அவளுக்குத் தெரியும். கடிதத்தைப் பிரித்து அழைப்பிதழை மேலோட்டமாகப் படித்தாள். அது அவளில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை மடித்து மேசைமேல் வைத்த பின் மற்றக் கடிதத்தைப் பிரித்தாள். அது கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியிடமிருந்து வந்திருந்தது. அவளின் சேமலாப நிதியைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பியிருந்தார்.

வதனா அவுஸ்திரேலியா வருவதற்கு முன்பு வவுனியா கிளிநொச்சி வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரியாகப் பணிபுரிந்தவள். போர்க்காலத்தில் எல்லோரும் நாட்டைவிட்டோட, இளம் வயதிலேயே தனியாளாக கிளிநொச்சி வைத்தியசாலையை நடத்தியவள். அவளின் தன்னலமற்ற வைத்திய சேவையால் போராடட்டக் குழுக்கள் மத்தியில் மட்டுமல்லாது, அரச அதிகாரிகளிடமும் நல்ல பெயர் பெற்றிருந்தாள். மற்றவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து பழக்கப்பட்டவள். மருத்துவ சேவையே மகத்தான மானிட சேவை என நினைத்து வாழ்பவள். தகப்பன் செத்தபோது வதனாவுக்கு பத்து வயது. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். மாமன் பொன்னையர் உட்பட உறவுகளெல்லாம் அந்திரட்டி முடிந்தவுடன் விலகி ஓட, படிப்பே தனது எதிர்கால மூலதனம் என்றெண்ணிப் படித்து, பத்தாம் வகுப்பில் வட மாகாணத்திலேயே முதலாளாக சித்தி பெற்றாள். இது யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை அவள் காலடியில் வைத்தது. தாய் தயாரித்துக் கொடுத்த தேநீரைப் பருகியவாறே மின்அஞ்சல்களை வாசித்தாள். அதிலொன்று யாழ்ப்பாணத்தில் அவள் படித்த பாடசாலை அதிபர் எழுதியிருந்தார். போர் முடிந்த பின்னரும் போக்குவரத்துச் சீராகவில்லை என்றும், குறிப்பாக தீவுப்பகுதி மாணாக்கர்களின் போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப் படுவதாகவும், இதனால் நெடுந்தொலைவிலிருந்து வரும் மாணாக்கர்களுக்கு உதவும் திட்டமொன்று தங்களால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு உதவுமாறும் அதிபர் கேட்டிருந்தார். இந்தப் பிரச்சினை அவளுக்குப் புதிதில்லை. படிக்கும் காலங்களில் வதனா முற்றுமுழுதாக பிறர் தயாளத்தை அனுபவித்தவள். எனவே தான் படித்த பாடசாலைக்கு தானம் அளிப்பதில் தாராளம் காட்டினாள். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் பதினோராம் வகுப்பு படிக்க இடம் கிடைத்ததும், குமர்ப்பிள்ளையை தீவுப் பகுதியிலிருந்து யாழ்பாணத்துக்கு பஸ்ஸில் தனியே அனுப்ப பூரணம் பலவாறு யோசித்தார். மற்றவர்கள்போல் கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பதற்கும் பொருளாதார வசதியுமில்லை. பலநாள் யோசனையின் பின் அண்ணன் பொன்னையர் யாழ்ப்பாணத்தில் விசாலமாகக் கட்டி வாழும் வீட்டுவாசலில் மகளுடன் வந்துநின்றார்.

பொன்னையரின் வீடு வதனாவின் கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில்தான் இருந்தது. பள்ளிக்கூடத்தில் மணிஅடித்தால் அந்த வீட்டில் கேட்கும். பரீட்சை வைத்தே அந்தப் பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள்.

அருகில் வீடு’ என்ற காரணத்தைச் சொல்லி பொன்னையரின் மகளை அந்தக் கல்லூரியில் சேர்க்கவென பாக்கியம் பலமுறை முயன்றும் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை.

வதனாவின் தகப்பன் நல்ல வெள்ளை. அவரை ‘மாம்பழ வாத்தியார்’ என்றால்தான் ஊரில் தெரியும். அவரின் நிறத்திலே, மூக்கும் முழியுமாக வதனா அழகாகப் பிறந்திருந்தாள். தன்னுடைய மகளுக்கு இந்த நிறம் வாய்க்கவில்லையே என்ற வெப்பிசாரம் பொன்னையரின் மனைவிக்கு எப்பொழுது முண்டு. இந்த பொச்சரிப்பும் தன்னுடைய மகளுக்கு பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்காத எரிச்சலும் ஒன்றுசேரவே, வதனாவையும் தாயையும் வாசலில் நிற்கவைத்தே பதில் சொல்லி அனுப்பினார் பொன்னையரின் மனைவி.

மகளின்ரை வெள்ளைத் தோலைக் காட்டி நடுவீட்டுக்கே வந்து என்ரை மகனை மடக்கப் பாக்கிறாளவை வேசையள்…’ பாக்கியம் சுழட்டிய சாட்டை, கேற்றைத் தாண்டி றோட்டுவரை கேட்டுக்கொண்டிருந்தது. அன்று தாய் வடித்த கண்ணீர்தான் வதனாவைக் கல்லாக்கியது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி, ஐந்து மணி பஸ்பிடித்து புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அந்தக் கல்லூரிக்கு போய்வரத் துவங்கினாள். பிரத்தியேக ரீயூசன் எதுவுமில்லாமல் இரவு பகலாகப் படித்தாள். பன்னிரண்டாம் வகுப்பில் நாடளாவிய ரீதியில் இரண்டாவது ஆளாக வதனா சித்தியடையவே, அவள் படித்த பாடசாலை தங்கள் சாதனையாக இதைப் பத்திரிகைகளில் பிரபலப்படுத்தியது. அவளது பெறுபேறுகளுக்கு இலங்கையிலுள்ள எந்த மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்திருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவக் கல்லூரி முந்திக்கொண்டு ‘ஸ்கொலஷிப்’ கொடுத்து வதனாவை மாணவியாக்கிக் கொண்டது. ஸ்கொலஷிப் காசுடன் தாயின் விதவைப் பென்சனையும் சேர்த்து, திருநெல்வேலியில் மருத்துவக் கல்லூரி அருகே வாடகைவீட்டில் தாயுடன் தங்கிப் படிப்பைத் தொடர்ந்தாள். வதனாவின் நிறம், அழகு, அறிவு, ஒழுக்கம் எல்லாம் பல்கலைக் கழகமட்டத்தில் அவளுக்கு ஒரு மதிப்பைச் சம்பாதித்துக் கொடுத்தது. மாணவர் சங்கங்களில் அவள் முதன்மைப்படுத்தப்பட்டு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டாள். இது தன்னம்பிக்கையுடன் கூடிய தலமைத்துவப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை அளித்தது. அயலட்டைகளிலுள்ள வறிய பிள்ளைகளுக்கு இலவசமாக பல்கலைக்கழக புகுமுக வகுப்புப் பரீட்சைக்கு பயிற்றுவித்தாள். இதனால், பல்கலைக் கழகத்துக்கு அப்பாலும் அவளை உயர்வாகப் பேசினார்கள்.

மாப்பிளை பிடிக்க எடுப்பெடுக்கிறாள்’ என்று பாக்கியமும் மகளும் உறவுகள் மத்தியிலே வதனாவைக் கரித்துக் கொட்ட, ‘வதனா தன் அத்தை மகள்’ என நண்பர்கள் மத்தியில் பீற்றித் திரிந்தான் சந்திரன். யாழ்ப்பாணத்தில் இயக்கங்கள் கொடிகட்டித் திரிந்த காலத்தில், படிப்பில்லாமல் ஊரில் திரிந்த கண்ட நிண்ட காவாலிகளும் ஏதோ ஒரு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட காலமது. இதுவே சமூகத்தில் தமக்கு ஒரு அந்தஸ்ததை ஏற்படுத்தியதாக எண்ணி ஊரில் ஹீரோக் களாகவும் அவர்கள் வலம் வந்தார்கள். இயக்கப் பெடியனைக் காதலிப்பது பெருமையாக விடலைப் பருவத்து பாடசாலைப் பெண்கள் மத்தியில் கருதப்பட்ட காலத்தில், இயக்கமொன்றின் மாநிலத் தலைவனான சந்திரன், வதனாவை தான் இலகுவாக அடைந்துவிடலாம் என்ற கற்பனையில் மிதந்தான்.

இந்தச் சம்பவம் வதனா வைத்தியசாலையில் இறுதியாண்டு மருத்துவப் பயிற்சி எடுக்கும் போது நடந்தது. இரண்டு மருத்துவ மணாக்கர்கள் இணைந்த குழுவாக ஒவ்வொரு துறையிலும் பயிற்சி எடுக்க வேண்டும். இந்த ஏற்பாட்டில், வதனாவுடன் இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்பட்டவன் ரமணன். அவன் யாழ் மாவட்டத்தில் அதியுயர் புள்ளிகள் பெற்று மருத்துவப் படிப்புக்குத் தெரிவானவன். மிகவும் புத்திசாலி. குடும்பத்தில் ஒரே பிள்ளை. ரமணணின் தந்தை இயக்கத்தினரின் மிதிவெடியில் சிக்கி இறந்துவிட, அவனின் தாய் தோசை சுட்டு விற்றே அவனைப் படிப்பித்தார். அவனுக்கும் பல்கலைக் கழகத்தின் ஸ்கொலஷிப் பணம் கிடைத்தது. ரமணனையும் வதனாவையும் வருங்கால மருத்துவத்துறை முன்னேற்றம் கருதியே மருத்துவக் கல்லூரி அவர்களை ஒரே குழுவில் இணைத்திருந்தார்கள். பயிற்சி முடிந்ததும் இருவரையும் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பல்கலைக்கழகம் நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் ஒரு பேச்சு உலாவந்தது.

பன்னிரண்டாம் வகுப்பில் மூன்று முறையும் குண்டடித்த சந்திரன் தகப்பனின் காசில் கொண்டா மோட்டர் சைக்கிளொன்றை வாங்கி ஊதாரியாக ஊரளந்து திரிந்தான். அத்துடன் ஏதோ பெயரைச் சூட்டிக் கொண்ட ஒர் உதிரியான குழுவுடன் தன்னை இணைத்து, ஊரில் நாட்டாமை காட்டித் திரிந்தான். இடுப்பில் அவன் பிஸ்டல் துவக்கை செருகித் திரிவதாகவும் குசுகுசுத்தார்கள். காதல் விவகாரங்களுக்கு பஞ்சாயத்துப் பண்ணுவது, இயக்கப் பெடியளைக் காதலிக்க மறுக்கும் பெரிய இடத்துப் பெட்டையளை அடாவடியாய்த் தூக்கி வந்து தாலிகட்ட வைப்பதென நட்டாமுட்டித் தனங்களைத் தத்தெடுத்து வலம் வந்தான். பயிற்சிக்காக ரமணன் வதனாவுடன் வைத்திய சாலைக்குப் போவதும் வருவதும், சந்திரனுக்கு கடுப்பேற்றியது. ஒரு நாள் ஆஸ்பத்திரிவீதியில் தனியே வந்த வதனாவை வழி மறித்தான்.

உன்னோடை கொஞ்சம் பேசவேணும்…’

வதனா எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றாள்.

ரமணணுடன் நீ சேர்ந்து போறதை இனி நான் காணக்கூடாது…’ எடுத்த எடுப்பிலேயே மொட்டையாகச் சொன்னான் சந்திரன். அவன் வந்து நின்ற முறையும் கட்டளையிடும் தொனியிலே சொன்ன பாணியும் வதனாவுக்கு வெறுப்பேற்றியது.

இதைச் சொல்வதற்கு நீ யார்…?’

நீ என்ரை முறை மச்சாள். ஒழுங்கா இருக்கப் பார்…’ என்று சொன்னவன், அவளின் பதிலுக்கு காத்திராமலேயே மோட்டர் சைக்கிளை ஊன்றி மிதித்து, ஸ்ராட் ஆக்கிச் சென்று விட்டான். வதனாவின் பதில் சந்திரனின் கோபத்தைக் கிளறியிருப்பதை அவன் சென்ற வேகம் காட்டியது. சில வாரங்களுக்குப் பின் ரமணன் நெற்றியில் சுடப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு முன்னாலுள்ள மின்விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தான். ரமணன் எந்த இயக்கத்திலும் சேராதவன். ஈழ அரசியலென்றால் ‘கிலோ என்ன விலை’? என்று கேட்பவன். அவன் ‘துரோகி’ சாயம் பூசப்பட்டு இப்போது கொல்லப்பட்டிருக்கிறான். அவனது கொலை மருத்துவக் கல்லூரியையே உலுக்கியது.

நெற்றிப் பொட்டில் இரத்தம் காய்ந்து, கழுத்து மடிந்து, ரமணன் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தந்த அதிர்வில் வதனா உறைந்து போனாள். ரமணனின் கொலைக்கு வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. சந்திரன்தான் காரணம் என்பதை வதனா பரிபூரணமாக நம்பினாள். தமிழின் பெயரால் துரோகி என முத்திரை குத்தப்பட்டு, அப்பாவிகளும் இயக்கத்தின் பெயரால் வகை தொகையின்றிக் கொல்லப்பட்ட காலமது. தடியெடுத்தவனெல்லாம் தண்டக்காரன் என்ற நிலையில் குடாநாட்டில் சட்டம் ஓழுங்கு முறைமைளெல்லாம் முற்றாக சீர்குலைந்திருந்தது.

ரமணனின் அந்திரட்டி முடிந்த அடுத்த நாள், பல்கலைக் கழகத்தில் அவனுக்கான அஞ்சலிக் கூட்டம் நடந்த அன்று, ரமணனையே நம்பி வாழ்ந்த தாய், அவன் கோவிலுக்கு கட்டும் வேட்டியில் தூக்குப் போட்டு செத்துப் போனது அடுத்த அதிர்ச்சி.

 

3

பொன்னையர் இப்போது யாழ்ப்பாணத்துக்கு வருவதில்லை. வந்தால் போராட்டக்குழுக்கள் பெருந்தொகை பணம் கேட்பார்கள் என்ற பயம். புங்குடுதீவு முருகன் கோவிலின் ஆறாம் திருவிழா பொன்னையரின் உபயத்தில் தடல்புடலாக நடக்கும். இந்தியாவிலிருந்து மேளக் கோஷ்டிகள் இறக்குமதியாகும். அவர்களுடன் இலங்கையிலுள்ள பிரபல மேளகாரக் குழுக்களும் இணைந்து இரவுத்திருவிழாவை அமர்க்களப்படுத்துவார்கள். மல்லாகத்துச் சிகரம், சப்பரம், தெருவெல்லாம் வண்ண விளக்குகள், வாணவேடிக்கை என அன்று புங்குடுதீவே சொர்க்க பூமியாகும். புலிப்பல்லுப் பென்ரன் கோத்த இரட்டைப்பட்டுச் சங்கிலி தொப்புள் வரை தொங்க, பட்டுவேட்டி சகிதம் படு ஆரம்பரமாகவே பொன்னையர் திருவிழாவில் வலம்ருவார். பூரணத்துக்கும் தமையன் பொன்னையரின் ஆடம்பரமான தோற்றத்தைக் கண்டு ஆனந்தந்தான். இருப்பினும் பூரணம் தன்னையோ மகளையோ திருவிழாவில் முன்னிலைப் படுத்துவது கிடையாது. கோவிலின் அருகேயுள்ள பனை வடலிக்குள் மேளகாரருக்காக தயாராகும் கோழிக்கறி சமையலிலே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுவார். அவளையொத்த இளவட்டங்கள் திருவிழா பார்க்க, வதனா பனை வடலிக்குள் ஓடியாடி தாயாரின் சமையலுக்கு உதவி செய்வதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். ஆனால் பாக்கியமோ அதற்கு நேர்மாறு. தன் பிள்ளைகளை ஊபயகாரரின் வாரிசுகள் என ஆடம்பரமாக அறிமுகப்படுத்தும் வகையிலேயே கோவிலில் வலம் வரச் செய்வாள்.

சந்திரன் சாராத போராட்டக் குழுவொன்று வைத்த கெடுவினால் பொன்னையரால் இந்த வருடத் திருவிழாவுக்கு வரமுடியவில்லை. தகப்பனின் இரட்டைப்பட்டுச் சங்கிலியைப் போட்டுக்கொண்டு சந்திரனே திருவிழாவில் முன்னிலை வகித்தான். அவனருகில் ‘பொடிகாட்டாக’ இரண்டு பெடியள் நின்றார்கள். திருவிழா பார்க்க வந்த ஆக்களை அதட்டி உருட்டி ‘பவுசு’ காட்டிக் கொண்டு அங்குமிங்குமாகத் திமிர் வழிந்தோடத் திரிந்தான்.

வதனாவும் தாயும் அந்தத் திருவிழாவுக்கு யாழ்ப் பாணத்திலிருந்து வந்திருந்தார்கள். பருத்திப் புடவை கட்டி எந்தவித ஆடம்பரமுமில்லாமல் வெகு எளிமையாகவே வந்திருந்த வதனா தேவதை போல தாயருகே நின்றதும், ஸ்கொலஷிப்பில் மருத்துவம் படிப்பதும், அன்றைய திருவிழாவில் பேசுபொருளாயிற்று. அண்ணன் பெண்சாதியின் குணம் வதனாவும் தாயும் அறியாததல்ல. தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் உருப்படாமல் போன வயித்தெரிச்சலில் எந்தக் கணத்திலும் அவர்கள்மீது பாயக்கூடும். தமையனும் இல்லாத இடத்தில் வதனாவும் தாயும் பட்டும்படாமலுமே திருவிழாவில் பங்கெடுத்துக் கொண்டனர்.

இந்த முறை இந்தியாவிலிருந்து மேளம் வரவில்லை. இரவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் பகலில்தான் திருவிழா. இணுவில், அளவெட்டி, சாவகச்சேரி ஆகிய இடங்களிலிருந்து வந்த தவில் நாதஸ்வரக் கோஷ்டிகள் திருவிழாவை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தன. சந்திரன் தகப்பனின் இரட்டை வடம் சங்கிலியை சற்றுப் பின்னால் இழுத்து புலிப்பல்லுப் பென்ரன் துலக்கமாகத் தெரியும்படி மார்பில் விட்டவாறே சனத்தை ஒழுங்கு செய்யும் பாணியில், வதனாவும் தாய் பூரணமும் நிற்குமிடத்துக்கு வந்தான்.

என்ன மாமி பஸ்ஸிலையே வந்தனீங்கள்? வாறதெண்டு தெரிஞ்சிருந்தால் எங்கடை காரை அனுப்பியிருப்பனே…’! வதனாவின் முன்னால் கிலோக் கணக்கில் வழிந்தான் சந்திரன்.

அதனாலை என்ன தம்பி’ என்ற சம்பிரதாய வார்த்தைகளுடன் சுருக்கமாக பூரணம் முடித்துக் கொண்டார். வதனா அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சுவாமி தரிசனம் செய்யும் பாவனையில் ஆதிமூலத்தைப் பார்த்தவாறு நின்றாள்.

அப்பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது.

அந்தக் கோவில் வழக்கப்படி, கன்னிப்பெண் ஒருத்தி காமாட்சி விளக்குடன் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்தபின், வசந்தமண்டபப் பூசை ஆரம்பமாகும். இற்றைவரை இந்த கௌரவம் உபயகாரர் என்ற முறையில் பொன்னையரின் மகளுக்கே கொடுக்கப்பட்டது. சந்திரன் மாமியுடன் நின்றதைக்கண்ட கோவில் குருக்கள், சந்திரனை குளிர்விக்க எண்ணி மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டிருக்க வேண்டும். காமாட்சி அம்மனின் உருவமாகவே தாய் பூரணமருகே நின்ற வதனாவை திடீரென அழைத்து காமாட்சி விளக்கைக் கையில் கொடுத்தார் குருக்கள். முறைப்படி வதனாவும் தாயும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள்தான். வாத்தியார் இருக்கும்வரை அவரும் திருவிழாவுக்குக் காசுகொடுத்து வந்தார். அவர் இறந்தபின் பூரணம் சரீர உதவியுடன் தன் பங்களிப்பை நிறுத்திக் கொண்டார். இருப்பினும் காமாட்சி விளக்கு வதனாவின் கைக்கு இற்றைவரை வந்ததில்லை. மேளதாளத்துடன் வதனா பிரகாரத்தைச் சுற்றி மேற்குவீதி மூலைக்கு வரவே, அங்கு இதற்காகவே காத்திருந்த பாக்கியம் வெகு லாவகமாக காமாடசி விளக்கைப் பறித்து தன்னுடைய மகளின் கையில் கொடுத்தார். கூடவந்த குருக்களுக்கு இது அதிர்ச்சி. அவர் எதுவும் பேசவில்லை. மௌனமானார்.

மகள் டாக்குத்தருக்குப் படிக்கிறாளெண்டுதானே இந்தளவுக்கு தாயும் மோளும் ஆட்டம் போடுறாளவை. என்ரை மகளுக்கு நான் ஒரு ‘ஸ்பெஷலிட்’ டாக்குத்தர் மாப்பிளை எடுக்கேல்லை எண்டால் நான் பொன்னையர் பெண்சாதியில்லை’ என்று சபதம் எடுத்துக்கொண்டே திருவிழா முடிந்து வீட்டுக்குப் போனார் பாக்கியம்.

இப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணக் கலியாணச் சந்தை முந்தின மாதிரியில்லை. மணவறையில் வைத்தே பெம்பிளையைப் பார்த்த காலம் போய், பெம்பிளை பார்த்து ஒரு சில நாள்கள் கதைத்து கலியாணம் செய்யும் நடைமுறை வந்தது. பின்னர் விடுதலைப் போராட்டம் கொண்டுவந்த சமூகப் புரட்சியில் பெண்களே மாப்பிளைகளைப் பொறுக்கியெடுக்கும் காலம் வந்து விட்டது. சீதனத்தை விசுக்கினால் டாக்குத்தர் மாப்பிளை தானாய் வருமென்றிருந்த பொன்னையர் பெண்சாதிக்கு, களத்தில் இறங்கிய பின்புதான் கஷ்டம் தெரிந்தது. இந்தக்காலத்தில் டாக்குத்தர் என்ஜினியர் மாப்பிளையள், சீதனத்துக்காகக் குறைந்த படிப்புள்ள பெட்டையளைக் கட்டத் தயாராக இல்லை. எல்லா இடமும் ஓடிஆடிக் களைத்து கடைசியில் கனடா மாப்பிளை என்று புங்குடுதீவுப் பெடியன் ஒன்றைக் கட்டி வைத்தார்கள். மகளுக்கு வாய்க்காத நல்வாழ்க்கை வதனாவுக்கு கிடைக்கக்கூடாது என்ற வெப்பிசாரத்தில் ஊரெல்லாம் வதானாவைத் எதாவது ஒரு பெடியனுடன் சேர்த்து கதைகட்டித் தூற்றுவதிலேயே பாக்கியத்தின் பெரும்பகுதிக் காலம் கழிந்தது.

போன வருடத் திருவிழாவிலை நடந்தது, இந்த வருடமும் நடந்தால் மானம் போய்விடுமென்று பொன்னையரை வலுக்கட்டாயமாக திருவிழாவுக்கு வரவழைத்தார் பாக்கியம். போராட்டத்துக்கு காசுதராமல் இவ்வளவு நாளும் டிமிக்கி குடுத்த பொன்னையரின் கதையை திருவிழாவன்று வடக்குவீதியில் வைத்து முடித்தது போராட்டக் குழுவொன்று. பாக்கியம் மட்டுமல்ல பூரணமுந்தான் நொருங்கிப் போனார். தமையனின் மறைவை மறக்க தாய்க்கொரு மாற்றம் நல்லதென எண்ணி, வதனா மருத்துவப் படிப்பு முடித்ந்ததும் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு பணிபுரியச் சென்றாள். சிறிது காலத்தில் ஆனையிறவுடன் யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட, யாழ்ப்பாணத் தொடர்புகளும் முற்றாக அறுந்துபோயிற்று.

படிப்புமில்லாமல் தத்தாரியாக இயக்கமொன்றுடன் ஊர் சுற்றித்திரிந்த சந்திரனை, வெளிநாடுகளுக்கு ஆக்களைக் கடத்தும் தொழிலை ‘சைற்பிஸ்னஸ்’ஸாகச் செய்த மருமகனின் உதவியுடன் பாக்கியம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைத்தார். அப்பொழுதெல்லாம் பிளேனில் ஏறுவதற்கு முன்பு, விமானத்தின் வாசலில் பாஸ்போட் சோதிப்பதில்லை. கனடாவில் அகதி அந்தஸ்து கோரி ஜெனிவா ஒப்பந்தப்படி வழங்கப்பட்ட கனேடிய பாஸ்போட் வைத்திருந்திருந்தான் பொன்னையரின் மருமகன் கனகராசா. அவனால் அவுஸ்திரேலியாவுக்கு விசா இல்லாமல் போய்வரமுடியும். இந்த வசதியைப் பாவித்து சிங்கப்பூரிலிருந்து சிட்னிக்கு நேரடி பறப்புக்கான ரிக்கற் எடுத்திருந்தான். இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சந்திரனிடம், சிட்னிக்கான தன்னுடைய ‘போர்டிங்பாசை’க் கொடுத்து சிட்னிக்குப்போகும் விமானத்தில் ஏற்றிவிட்டான். ஆவுஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானம் பறந்தபின், சந்திரனின் கொழும்புக்கான போர்டிங்பாசுடன், கனகராசா ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏறும்போது பிடிபட்டுப் போனான். இந்தக் குற்றத்துக்காக அவனுக்கு ஆறு சவுக்கடியும் எட்டுமாத சிறைத் தண்டனையும் சிங்கப்பூரில் கிடைத்தது. சிங்கப்பூர் தமிழ் முரசில் வந்த மருமகனின் ஆள்மாறாட்டம் பற்றிய செய்தி, யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றில் படத்துடன் வெளிவரவே பொன்னையர் பெண்சாதி வீட்டுடன் சுருண்டு கொண்டார். தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் தன்னுடைய பாடுகளுக்குக் கொழும்பு வீடொன்றைத் தன் பெயருக்கு மாமி பாக்கியத்திடம் எழுதி வாங்கிக்கொண்டே அவரை நிம்மதியாகத் தூங்க விட்டான்.

என்னதான் தில்லுமுல்லுகள் செய்தாலும் ஆக்களை அனுப்பும் விஷயத்தில் கனகராசா கரைகண்டவன். போகும் போது பொன்னையரை இயக்கம் சுட்டபின் அவர் பிணமாய் கிடக்கும் படம், பத்திரிகையில் வந்த செய்தி, சந்திரனையும் மாற்று இயக்கத்தவர்கள் சுடத்திரிகிறார்கள் என்று ஊர் விதானையின் லெற்றர்கெட்டில் கள்ளமாக ரைப்பண்ணிய கடிதம் என பல தஸ்தாவேஸுகளையும் சந்திரனிடம் பத்திரமாகக் கொடுத்து அனுப்பியிருந்தான். அவற்றுடனேயே சந்திரன் சிட்னி விமான நிலையத்தில் இறங்கினான். விசாரணையின்போது பதட்டத்திலும், கேஸ் கொஞ்சம் இறுகட்டும் என்ற எண்ணத்திலும், தன்னுடைய வாக்குமூலத்தில் தாயைச் சாக்காட்டிவிட்டான். ‘தகப்பனைக் கொலை செய்ததுக்கு நியாயம் கேட்கவென இயக்க ‘காம்பு’க்கு போன இடத்தில் தாயும் கொல்லப்பட்டார்’ என்பதை கை கால் மூக்குவைத்து நம்பும் படியாகவே கண்ணீருடன் ஒப்புவித்தான். சந்திரன். இதனால் அவுஸ்திரேலிய சட்டப்படி பொன்னையர் பெண்சாதி செத்துப் போனார். இதனால்தான் சிநேகிதர்கள் எல்லோரும் தங்கள் பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்தபோதும் சந்திரனால் தன் தாயை அழைத்துக் கொள்ள முடியவில்லை.

சிங்ப்பூர் குடிவரவு அதிகாரிகள், கனகராசாவின் விபரத்தைச் சிட்னிக்கும் அனுப்பியியதால் ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் தொடக்கம் அவுஸ்திரேலியா வரை அவன் இப்பொழுது தலை காட்டுவதில்லை. இத்தகைய தில்லுமுல்லுகளின் பின்பே, எல்லா விமான நிலையங்களிலும் விமானத்தின் நுழை வாயிலில் வைத்து கடவுச்சீட்டையும் ‘போடிங்பாசை’யும் சரிபார்க்கும் நடைமுறை அமுலுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

கனகராசா கனடாவில் சொந்தமாக ‘பிட்ஸா ஹட்’ நடத்துவதாக வெளியே பீத்தித் திரிந்தாலும், உண்மையில் அவன் அங்கு சம்பளத்துக்கு வேலை செய்கிறான் என்பது சந்திரனுக்கு நன்றாகத் தெரியும். ஒருவகையில் சந்திரனும் இதே புருடாதான். இருப்பினும் தகப்பனின் கொழும்பு வீட்டை எழுதி வாங்கிய வெப்பிசாரம் உள்ளுக்குத் தணியாது கனன்று கொண்டிருந்தது. சந்திரன் அகதி அந்தஸ்துப் பெற்ற இரண்டு வருடங்களில் சிறிது சிறிதாக அவுஸ்திரேலியாவில் காலூன்றிவிட்டான். குடியுரிமை பெற்று அவுஸ்திரேலிய பாஸ்போட்டும் கிடைத்துவிட்டது. சிறிதாக ஒரு வீடீயோ கடை துவங்கியவன் அதைச் சிறிது சிறிதாகப் பெருப்பித்து இந்தியப் பொருள்கள் அனைத்தும் விற்கும் கடையாக மாற்றினான். இப்பொழுது அவன் ஒரு நகைக்கடை உட்பட நாலு கடைகளுக்குச் சொந்தக்காரன். பொன்னையரின் வியாபாரச் சூக்குமங்கள் அவனுடைய இரத்ததில் நன்றாகவே பாய்ந்தது. இப்பொழுதெல்லாம் இலங்கையிலும் இந்தியாவிலிருந்தும் நேரடியாகவே கொன்ரேயினர்களில் சாமான்கள் இறக்கி வியாபாரம் செய்கிறான். உருவத்தில் அவன் சாட்சாத் பொன்னையர். ஆனால் அவரைவிட பெரிய முதலாளியாக அவுஸ்திரேலியாவில் பரிணமித்தான். ‘ஊரில் றோட்டளந்த நான், இப்ப இருக்கும் நிலையைப் பார்’! என்று ஊருக்குச் சொல்ல இந்தியாவிலிருந்து சினிமாக்காரரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது மட்டுமல்லாமல், அதை இலங்கைப் பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தினான். புங்குடுதீவு முருகன் கோவில் திருவிழாவுக்கு தாராளமாகவே காசனுப்பி ‘பொன்னையற்றை மகன்’ செல்வாக்கைப்பற்றி ஊர்ச் சனங்களைப் பேச வைப்பதிலும் வெற்றி கண்டான். இனியென்ன, அடுத்துக் கலியாணந்தான். தன்னுடைய காசைக் காட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ்ப் பெட்டையளை மடக்கப்பார்த்த அவனுடைய இலங்கை ‘போர்முலா’ வேலை செய்யவில்லை. அவனின் காசை தாராளமாகச் செலவு செய்து அவனுடைய ‘ஸ்போர்ட்ஸ்’ காரில் சில பெட்டையள் பவனி வந்ததுவரை, அவனுடனான தொடர்பை மட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

 

4

வ்ளவு அமளிக்குள்ளும் வதனா கிளிநொச்சியில் தாயுடன் தங்கியிருந்து அங்குள்ள வைத்தியசாலையில் சேவையைத் தொடர்ந்தாள். இயக்கங்களின் கட்டளைகள் ஒருபுறம், இரணுவத்தின் கெடுபிடிகள் மறுபுறம் என எல்லாவற்றையும் தனியனாகச் சமாளித்து வைத்தியத்தை ஒரு தவமாகச் செய்து கொண்டிருந்த வதனாவைப்பற்றி, பத்திரிகைகள் சிலாகித்தன. புலிகள் இலங்கை அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்திருந்த பொழுது, ஆனையிறவுப் பாதை திறந்து யாழ்ப்பாணத்துக்குப் போக்கு வரத்து சீராகவே, புலம் பெயர்ந்த தமிழர்கள் சரமாரியாக இலங்கைக்கு வந்து போனார்கள். அவுஸ்திரேலிய பாஸ்போட்டுடன் கொழும்பில் வந்திறங்கிய சந்திரன் காரொன்றைப் பிடித்துக் கொண்டு தாயிடம் யாழ்ப்பாணத்துக்குப் போகாமல் கிளிநொச்சிக்கு வந்தான். மின்சாரமில்லாமல் கிளிநொச்சி இருண்டிருந்தது. ஆனாலும், டாக்டர் வதனாவின் வீட்டைக் கண்டு பிடிப்பதில் அவனுக்கு சிரமமிருக்கவில்லை. கதவைத் தட்டினான். முன்னெச்சரிக்கையாக யன்னலைத் திறந்து பார்த்த பூரணத்துக்கு, மைம்மல் இருட்டில் பொன்னையர் வந்து நிற்பது போலத் தெரிந்தது.

என்ரை அண்ணை…’ என்று கத்தியபடி கதவைத் திறந்த பூரணம் வாசலிலேயே மயங்கிவிழுந்தாள். சத்தம் கேட்டு அரிக்கன் லாம்புடன் வாசலுக்கு வந்த வதனாவுக்கு விஷயம் விளங்கிற்று. சந்திரனின் உதவியுடன் தாயைத் தூக்கி முதலுதவி செய்தாள். கண் விழித்த பூரணம் சந்திரனை அழைத்து தன்னருகே இருத்தி, அவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார். பூரணத்தின் உடம்பெல்லாம் வியர்த்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தாயின் நிலமை வதனாவுக்குப் புரிந்தது. வதனா வீட்டுக்கு பகல் நேரம் போனால் தேத்தண்ணியுடன் ஆனுப்பிவிடுவார்கள் என்று சந்திரனின் வியாபார மூளை சரியாகவே கணக்குப் போட்டது. இதனால் திட்டமிட்டே மாமியார் வீட்டுக்கு இரவு நேரமாகப் பார்த்து வந்திருந்தான். அப்பொழுதுதான் அங்கு தங்கி சமயம் பார்த்து மாமியுடன் கதைக்கலாம் என்பது திட்டம். மாமி மயங்கி விழுந்ததிலிருந்து தகப்பனே மாமியை வெல்வதற்கான துரும்புச் சீட்டென்பதை உணர்ந்து கொண்டான். இயக்கம் அவரை சுட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தபோது ‘பூரணம்…,பூரணம்…’ எனக் கூப்பிட்டதாக ரீல் விட்டான். இடையிடையே தன்னுடைய வியாபார நிலையங்கள் பற்றியும் அவுஸ்திரேலியாவில் தனக்குள்ள செல்வாக்கு பற்றியும் கதைகளை அவிழ்த்து விட்டான். இவன் எதற்கு அடிகோலுகிறான் என்பது வதனாவுக்கு நன்கு தெரியும். இதனால் வெளியே வராது வேளைக்கே தூங்கச் சென்றாள். காலையில் ஏழு மணிக்கு வதனாவுக்கு வேலை. ஆனால் மறுநாள் ஆறுமணிக்கே எழும்பி ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டாள். சந்திரனுக்கு இது ஏமாற்றந்தான். ஆனாலும் இதை அவன் எதிர்பார்த்தே வந்திருந்தான். காலைச் சாப்பாட்டின்போது சமயம் பார்த்து பக்குவமாகத் தான் வதனாவை மணம் முடிக்க விரும்புவதாகவும், இருவருக்கும் சேர்த்து ஸ்பொன்சர் பண்ணுவதாகவும், தாயின் சம்மதத்துடன்தான் இதைக் கேட்பதாகவும் சொன்னான். பூரணம் எதுவும் பேசவில்லை. கண்கள் கலங்கிவிட்டன. தேத்தண்ணியை ஆற்றி அவன் முன் வைத்துவிட்டு அமைதியாக இருந்தார்.

மாமி…, நீர் அடித்து நீர் விலகாது. அம்மா முந்தி உங்களுக்கு செய்ததெல்லாம் அப்பாவுக்கு தெரியாமல்தான் நடந்தது. நானும் சின்னப்பிள்ளை. கடைசி நேரத்திலை இதெல்லாம் அப்பாவுக்கு தெரிஞ்சதாலைதான், உயிர் போகேக்கை ஒருதரையும் கூப்பிடாமல் உங்களைக் கூப்பிட்டவர்…..’ எனச் சொல்லி ‘சென்ரிமென்ரல்’ பொயின்ரில் கை வைத்தான் சந்திரன். அதற்கு மேலும் பூரணத்தால் அழுகையை அடக்க முடியவில்லை. சந்திரனைக் கட்டிப்பிடித்து விக்கி விக்கி அழுதார்.

அப்பு நீ யாழ்ப்பாணத்துக்கு கவனமாய் போட்டுவா. எல்லாம் நல்லபடியாய் நடக்கும். வதனா இண்டைக்கு ஒப்பிரேசன் செய்யிற நாள். தியேட்டருக்குள் நிப்பாள். அவளுக்கு நான் விபரமாய்ச் சொல்லுறன். மச்சாளையும் விசாரிச்சதாய்ச் சொல்லு’ என வழியனுப்பிவைத்தார் பூரணம்.

சந்திரன் அவுஸ்திரேலியா சென்ற பின் முதல் வேலையாக நல்ல லோயரைப் பிடித்து திருமணம் முடிக்கப்போகும் பெண்ணுக்கும், அவரில் தங்கியிருக்கும் தாயுக்குமான ஸ்பொன்சர் விண்ணப்பப் பத்திரங்களை நிரப்பி, மாமியாரின் பெயர் விலாசத்துக்கு அனுப்பியிருந்தான். சந்திரன் அனுப்பிய கடிதத்தை பூரணம் வாசிப்பதும் பின்பு, அதை ஸ்பொன்சருடன் சேர்த்து தபாலுறைக்குள் வைப்பதுமாக அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். இதைப்பற்றி வதனாவுடன் பேச பூரணத்துக்கு தைரியம் வரவில்லை. உண்மையில் சந்திரனின் பணத்திமிர் இன்னமும் அடங்கவில்லை. பணத்தைக் காட்டினால் இலங்கையில் எல்லாரையும் மடக்கலாம் என்ற அற்ப குணம் அவனுக்கு. இந்தப் புத்தி அவனுக்கு மட்டுமல்ல. எந்தவித படிப்புமில்லாமல் ஊரில் காவாலிகளாகத் திரிந்து விட்டு வெளிநாடுகளுக்கு சென்று கொஞ்சம் காசு உழைத்தபின், இலங்கையில் நன்றாகப் படித்து பட்டதாரிகளாகவும், வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் பணிபுரியும் மச்சாள்மார்களையும், பணவசதியில்லாத வறிய குடும்பத்துப் பெண்களையும் துணிந்து பெண்கேட்கும் பலரை வதனாவுக்குத் தெரியும். கலியாணம் என்பது பிள்ளை பெறுவதற்காக இரண்டு மனித உடல்கள் ஒன்றுசேரும் சங்கதியல்ல. இப்படி மச்சான்மாரை மணம்முடித்து வெளிநாடு சென்ற பலர், கணவர்களின் தாழ்வுச் சிக்கலால் நரக வாழ்கை வாழ்வதை வதனா அறிந்திருக்கிறாள். இருப்பினும் தாயார் படும் வேதனையை எண்ணி சம்மதமோ மறுப்போ தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாள்.

ஆம்பிளைத் துணை இல்லாமல் பூரணம் தனியாளாக வதனாவுக்கு கலியாணம் பேசிய போதுதான் போர் சூழலிலும் கலியாணச் சந்தையிலுள்ள வில்லங்கங்கள் புரிந்தன. வதனாவுக்கு அழகும் படிப்பும் பதவியுமிருந்தும், வங்கியில் பணிபுரியும் மாப்பிளையே சீதனமாக கொழும்பில் வீடு கேட்டார். சீதனம் கேட்கும் எந்த மாப்பிளையையும் தான் கலியாணம் செய்யத் தயாரில்லை என வதனா கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். இதனால் வதனாவுக்கு இப்போது முப்பது வயது நிறைவடைந்தது விட்டது. வன்னிப்பகுதியில் உள்ள ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் அவள் என்பதால் இரவு பகல் பாராது வைத்திய சேவையிலேயே வதனா தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். தனது சேவை வன்னி மக்களுக்கு அவசியந் தேவை என்பதை அவள் உணர்ந்திருந்ததால், வன்னியை விட்டு வேறு இடங்களுக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ போகவும் விரும்பவில்லை.

அப்பொழுதுதான் ஈழப் போராட்டத்தில் மூன்றங் கட்டப் போர் துவங்கியது. திருகோணமலையில் தண்ணீர்விட மறுத்ததில் துவங்கிய சண்டை, படிப்படியாக மன்னார் கிளிநொச்சியென வன்னிப் பிரதேசமெங்கும் வியாபித்தது. கிளிநொச்சிக்கு வந்த சிங்கள இராணுவத்தின் கண்களுக்கு முதலில் பட்டது, வைத்தியசாலையில் டாக்டராக பணி புரியும் வதனாவின் அழகே. காயம் பட்ட இராணுவத்தினருக்கு வைத்தியம் செய்ய முகாமுக்கு வரவேண்டுமென தொல்லை கொடுக்கத் துவங்கினார்கள். ஒருநாள் பின் இரவு நேரத்தில் நிறை வெறியியில் வந்த இராணுவ மேஜர் ஒருவன் இராணுவ முகாமுக்கு உடன் வரவேண்டுமென சண்டித்தனம் செய்தான். சத்தம் கேட்டு அங்குவந்த நோயாளர்கள் அழுது குளறவே ‘திரும்பியும் வருவன்’ என சிங்களத்தில் சத்தமிட்டபடி சென்றுவிட்டான்.

வல்லூறுகளுக்கு நடுவில் வதனா இனி கிளிநொச்சயில் பணிபுரிய முடியாது. தாய் பூரணத்துக்கும் ஏக்கத்தில் காச்சல் வந்து புலம்பத் தொடங்கி விட்டார். போட்டது போட்டப் படியிருக்க அடுத்த நாள் கொழும்புக்குச் சென்ற செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் தாயுடன் கொழும்புக்கு வந்து விட்டாள்.

போரில் கிளிநொச்சி முழுவதும் இராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும் இராணுவம் முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் அடுத்தநாள் அரச வானொலி செய்தி வெளியிட்டது. சிலநாள்கள் கழித்து புலிகளின் செய்தித் தளமொன்றில் கிளிநொச்சி வைத்தியசாலை குண்டுவீச்சினால் தரைமட்டமானதாகவும், அங்கிருந்த நோயாளர்கள் பற்றிய விபரம் தெரியவில்லை என்ற செய்தியை வாசித்தபின் ஆடிப்போனாள். அங்கு சிகிச்சைக்காக இருந்த ஒவ்வொரு நோயாளியின் முகங்களும் வரிசையாக வந்து பாடுபடுத்தியது. வாழ்கையில் அவளுக்கிருந்த எல்லா நம்பிக்கைகளும் அழிந்தன. பூரணத்தின் நிலமை மோசமாகி அவர் ‘டிப்பிறெசன்’ நிலைக்குத் தள்ளப்படவே அவுஸ்திரேலியாவுக்குப் போவது தான் இதற்கு இப்போதைய தீர்வு என நினைத்தாள். ஆனால் சந்திரனின் தயவில் அங்குபோவது அவளுக்கு உசிதமாகப்படவில்லை. சந்திரனின் குணம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அவனுடைய விருப்பு வெறுப்புகளும் செயல்பாடுகளும் வதனாவினுடையதுக்கு நேர் எதிர்மாறானது. அவுஸ்திரேலியாவில் டாக்டராக வேலை செய்வதாயின் அங்கு அதற்குரிய பரீட்சையில் சித்தியடைய வேண்டும். கையில் காசுமில்லாமல் உடனே வேலையும் எடுக்க முடியாத நிலையில் சந்திரனின் ஸ்பொன்சரில் போனால் அவன் தங்களை எப்படி நடத்துவான் என்பது அவளுக்குத் தெரியும். தன்னுடைய சொந்த முயற்சியினாலும் உழைப்பினாலும் தன்னுடைய வாழ்க்கையை சீராக அமைத்த அவளுக்கு அது இந்தளவுக்கு சறுக்குமென அவள் கனவிலும் நினைக்க வில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலையில் அடுத்த நாள் செஞ்சிலவைச் சங்கத்திலிருந்து அறிமுகக் கடித மொன்றை பெற்றுக்கொண்டு கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அகதிகளுக்கான வரிசையில் நின்றாள். கிளிநொச்சியில் வதனா செய்த மகத்தான சேவை வீண்போகவில்லை. ஒரு வெள்ளைக்கார அதிகாரி வதனாவை நோக்கிவந்தார்.

நீங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் பணிபுரியும் டாக்டர்தானே? வணக்கம்! என் பெயர் தோமஸ். முதலாவது செயலாளர். உங்களை நான் கிளிநொச்சிக்கு வந்தபோது வைத்தியசாலையில் சந்தித்திருக்கிறேன்…’ என ஆங்கிலத்தில் சொன்னார். போராட்ட காலங்களிலும், போர் உச்சமடைந்த காலங் களிலும் பிறநாட்டு உயர் ஸ்தானிகராலயங்களிலிருந்தும், தூதுவராலயங்களிலிருந்தும் பல உயர் அதிகாரிகள் குறை நிறைகளைக் கேட்கவென வைத்தியசாலைக்கு வந்து போவதுண்டு. எல்லோரையும் அவளுக்கு இப்போது ஞாபகத்திலில்லை. உண்மையைச் சொல்லப்போனால் வெள்ளைக்காரர்கள் எல்லோரும் அவளுக்கு ஒரே மாதிரித்தான் தெரிந்தார்கள். அவர்களை இனங்காண்பதில் அவளுக்கு பாரிய சிக்கல் இருந்தது. இருப்பினும் மரியாதையின் நிமிர்த்தம் அவரை நினைவிருப்பதாக பாவனை செய்து புன்னகைத்தாள். வரிசையில் நின்றவர்கள் எல்லோரும் இவர்களை விடுப்புப்பார்க்கத் துவங்கவே, வரிசை சற்றே குழம்பியது. ‘வாருங்கள், உங்களுடன் பல விடையங்கள் பேச வேண்டும். எனது அலுவலகத்தில் அமர்ந்து பேசுவோம்’ என அவளைத் தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று நிலமையைச் சுமுகமாக்கினார் அதிகாரி. தேநீர் இரண்டு கப் வரவழைத்து, ஒன்றை வதனாமுன் வைத்தவாறு ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

கிளிநொச்சி ஆஸ்பத்திரி தரைமட்டமாக்கப்பட்ட செய்தி படித்தோம். அத்துடன் அங்கு பணிபுரிந்த பெண் டாக்டர் பாலியல் துன்புறத்தல்களுக்கு ஆளாக்கப் படுவதாகவும் எங்கள் செய்திப் பிரிவுக்கு தகவல் வந்தது. அப்பொழுது உங்களைப் பற்றி நினைத்தேன். நல்ல காலம் நீங்கள் தப்பிவந்தது….’

வதனா எதுவும் பேசவில்லை. பிரமை பிடித்தவள்போல் அதிகாரியின் முன் அமர்ந்திருந்தாள். குளிரூட்டப்பட்ட அறையிலும் அவளுக்கு வியர்த்தது.

டாக்டர், உங்களுடைய சேவை அர்ப்பணிப்பை, நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். உங்களைப் போன்றவர் களுக்காகத்தான் ஐ.நா.சபை, அகதி அந்தஸ்துக்கான சட்டத்தை உருவாக்கியிருக்கிறது| என்றவர், கணினியில் அவளது விண்ணப்பத்தை தயாரிக்கத் தொடங்கினார். வதனாவின் கண்முன்னே நம்பிக்கையின் ஒளிக்கீற்று மின்னலடித்தது.

சேர், என்னைச் சார்ந்தே என்னுடைய அம்மா இருக்கிறார். நான் தனித்துப் போக முடியாது. அவரும் என்னுடன் வரவேண்டும். இங்கு நிலமை சீரானால் திரும்பி வந்துவிடுவேன். அதுவரை உங்கள் அரசாங்கத்தின் உதவியில் தங்கியிராது ஏதாவது வேலை செய்து வாழ வழியிருக்குமா…’?

அவளின் கோரிக்கை, அதிகாரிக்கு அவள்மேலிருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது. இணையத்தில் மேலும் சில தகவல்களைத் திரட்டியபின் அதிகாரி சொன்னார்.

அவுஸ்திரேலியாவின் புறநகர் வைத்திய சாலைகளில், வைத்தியர்களின் பற்றாக்குறை உண்டு. அங்கே வெளிநாட்டு வைத்தியர்கள் அவுஸ்திரேலிய மருத்தவ சபையின் பரீட்சையில் சித்தியடையாமலே பணியாற்ற எங்கள் சட்டம் அனுமதிக்கிறது. மருத்துவ சபையின் பரீட்சையில் சித்தியடைந்தபின் நீங்கள் விரும்பிய இடத்தில் பணிபுரிய முடியும். இது சம்மந்தமாகவும் முயற்சி செய்கிறேன்’ என நம்பிக்கையூட்டி விடைகொடுத்தார்.

அங்கு நடந்த விபரங்களை வதனா தாய்க்குச் சொல்லவில்லை. விசா வந்தபின்பு மேற்கொண்டு யோசிப்போம் என அமைதியாகவே இருந்தாள். சில வாரங்கள் கழிந்தபின் அகதி அந்தஸ்துக்கான விசாவும், சிட்னியின் புறநகர் பகுதியிலுள்ள வூலன்கொங் வைத்தியசாலையில் டாக்டராக பணியாற்ற அனுமதியும் வந்துசேர்ந்தன. பூரணத்துக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அடிக்கடி தமையன் பொன்னையரும் கனவில் வந்து போனார். இந்த அவதியில், வதனா வெளியே சென்ற நேரம் பார்த்து சந்திரனுக்கு போன்பண்ணி ‘உன்ரை ஸ்பொன்சருக்கு உடனை விசா குடுத்திட்டாங்கள் தம்பி…’ எனச் சொல்லி ஆனந்தத்தில் மிதந்தார் பூரணம்.

நான் இவங்களுக்கு கட்டிற வருமான வரிக்கு உடனை விசா குடுத்திராட்டி, பிறகு தெரியும் எம்பசிக்காரனுக்கு ஆர் சந்திரனெண்டு…’ என சந்திரன் மாமியாருக்கு பீலா விட்டான்.

நாங்கள் வாறநேரம் உங்கை தங்கிறதுக்கு குறைந்த வாடகையிலை ஒரு இடம்பாத்து வையப்பு’ என சந்தர்ப்பத்தை தவறவிடாது ஆழம் பார்த்தார் பூரணம்.

என்ன மாமி சொல்லிறியள்…? நீச்சல் குளத்தோடை ஆறு அறையிலை விசாலமான புது வீடு கட்டியிருக்கிறன். நீங்கள் வாடகை வீட்டுக் கதை பேசிறியள். இதெல்லாம் ஆருக்கு…’?

வதனாவுக்கு தாலிகட்டி வீட்டுக்கு அழைத்துவரும் தோரணையில் பேசினான் சந்திரன். இவையெல்லாம் நடக்குமென்று தெரிந்தே, சந்திரன் ரிக்கற் அனுப்புவதற்கு முன்பு வதனா முந்திக்கொண்டாள். தன்னிடமுள்ள சேமிப்பில் ரிக்கற் வாங்கிக்கொண்டு தாயுடன் சிட்னியில் வந்திறங்கினாள்.

 

5

ந்திரன் புத்தம் பதிய பென்ஸ் காரில் வெகு ஆடம்பரமாகவே விமானநிலையம் வந்திருந்தான். அவன் உடம்பில் பூசியிருந்த நறுமண வாசனை நூறடிகள் பின்னால் வந்த வதனாவுக்கு மணத்தது. கார் தரிப்பிடத்திலிருந்த காரை அணுகு முன்பு சாவியுடன் இணைந்திருந்த குமிழை அழுத்தி சந்திரன் ‘ஷோ’க்காட்டவே, ஏ. ஆர். ரஃமானின் மியூசிக்குடன் விளக்குகள் எரிய, கார்க் கதவுகளும் ‘டிக்கியும்’ தானாகவே திறந்து கொண்டன. ‘ஜெனுவின்-லெதரில்’ இருக்கைகள் செய்யப்பட்டு பொலிஷ் போடப்பட்டிருந்தது. உள்ளேயிருந்து புதிய லெதரின் மணம் சந்திரனின் ‘பெர்பூ’மை மீறிக்கொண்டு மூக்கைத் துளைத்தது. மகளுக்கு சுவர்க்க வாசல் திறந்துவிட்டதாக எண்ணி பூரணத்துக்கு மகா சந்தோஷம். ஆனால் வதனா, சந்திரனின் குறளி வித்தைகளைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவாறு தாயின் பின்னே அமைதியாக நின்றாள்.

மாமி, பின்னாலை ஏறுங்கோ. வதனா, முன்சீற்றுக்கு வா…, வசதியாக இருக்கலாம்’ என்று முன் கதவைத் திறந்தபடி நின்றான் சந்திரன்.

விமானப் பறப்பு முழுவதும் அம்மாவுக்கு சத்தியும் தலையிடியும். நான் பின்னுக்கு அம்மாவுடன் இருக்கிறேன்’ எனச் சாட்டுச் சொல்லியபடி பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள் வதனா. சந்திரனுக்கு இது விளங்காமலில்லை. இருப்பினும் ‘என்ரை ஸ்பொன்சரிலை தானே மச்சாள் வந்திருக்கிறாள். போகப் போக நான் ஆரெண்டு காட்டிறன்…’ என்று மனதுக்குள் கறுவியவாறே காரை ஸ்ராட் செய்தான்.

கார் பாதுகாப்புக் கடவையில், ஒரு ஆங்கிலேய பெண்மணி கடமையிலிருந்தாள். சந்திரன் தன்னுடைய வலது கையின் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே நூறு டொலர் காசை இறுக்கிப் பிடித்தபடி அவளின் முகத்துக்கு நேரே தாளை நீட்டினான். மிகுதிப் பணத்தை தருவதற்கு தன்னிடம் சில்லறை இல்லை என்றதும், வேண்டு மென்றே அவளுடன் வாக்கு வாதத்திலீடுபட்டான். அவள் கோபப்படவில்லை. அமைதியாக புன்னகைத்தாள். சந்திரனின் ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு புரியவில்லையெனத் தெரிந்தது. சந்திரனின் ஒழுங்கற்ற ஆங்கில வசன அமைப்பும், அதைப் பேசிய தோரணையும் வழக்கமான அவனது திமிர்க் குணம் இன்னமும் மாறவில்லை எனத் தெரிந்தது. அவன் சிட்னியில் வாழும் தமிழர்கள் மத்தியிலே, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை வதனா புரிந்து கொண்டாள்.

சந்திரனின் வீட்டைக் கண்ட பூரணம், திறந்த வாயை மூடவில்லை. சும்மா சொல்லப்படாது. சிட்னியின் செல்வந்தர்கள் வாழும் புறநகர்ப் பகுதியில், அரை ஏக்கர் காணியில் நீச்சல் குளத்துடன் ஆடம்பரமாகவும் விசாலமாகவும் வீட்டைக் கட்டியிருந்தான். வீதியிலிருந்து வீட்டு வாசல்வரையுள்ள வண்டிப்பாதைக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிரனைற் கற்கள் பதித்திருந்தான். மிகுதி இடங்களில் உயர்ந்தரக புல்வகை வளர்க்கப்பட்டு, கம்பளம் விரித்ததுபோல வெட்டப்பட்டிருந்தது. பூமரங்களுக்கும் பழ மரங்களுக்குமிடையே, மின் விளக்குகள் ஒளிபரப்பின. வீட்டு வாசலில் பல வண்ணங்களில் கோலம் போடப்பட்டிருந்தது. அதனருகே அகலக் கரைபோட்ட காஞ்சிபுரம் சேலையில் இரண்டு பெண்கள் ஆலாத்தித் தட்டுடன் தயாராக நின்றார்கள். வாசலை நிறைத்து இன்னும் சில பெண்கள் அவர்களை வரவேற்க குடும்ப சமேதரராக நின்றார்கள். அவர்களுள் புங்குடுதீவு உறவினர்கள் சிலர் நிற்பது தெரிந்தது. பூரணத்தின் கால்கள் தரையில் படவில்லை. ஆகாயத்தில் மிதந்தார். அண்ணர் பொன்னையருக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டார்.

ஆனால் வதனாவுக்கு…?

சிட்னிக்கு வந்தது முதல் நடப்பவை எல்லாமே கோமாளிக் கூத்துக்களாக தெரிந்தன. அவள் எதுவும் பேசவில்லை. அமைதி காத்தாள். அடுத்தநாள் இரவுச் சாப்பாட்டின்போது சந்திரன் தானாகவே கதையைத் துவங்கினான்.

திருமணம் செய்யவெனக் கொடுக்கப்படும் விசா உபபிரிவு 300இல் வருபவர்கள், வந்து தொண்ணூறு நாள்களுக்குள் திருமணம் செய்ய வெண்டுமென்பது அவுஸ்திரேலிய அரச விதி. நாளைக்கு நல்லநாளெண்டு கோவில் குருக்கள் சொன்னவர் மாமி. கலியாணத்துக்கு ‘நோட்டீஸ்’ போடவேணும்…’

அதுக்கென்ன தம்பி, உங்கடை வசதிப்படி ஒழுங்குகளைச் செய்யுங்கோவன்…’ என்ற தாயை இடைமறித்த வதனா, ‘நாங்கள் அந்த விசாவில் வரவில்லை’ என்றாள்.

சந்திரனுக்கு ஆத்திரம் சிரசிலடித்தது. ‘பின்னை எந்த விசாவிலையடி வந்தனி வேசை…’ என்று வாயில் வந்த வசனத்தில், ‘வேசை’ என்பதை சந்திரன் கஷ்டப்பட்டு விழுங்கினாலும், அதன் முழு அர்த்தத்தையும் வதனா விளங்கிக்கொண்டாள்.

எனக்கும் அம்மாவுக்கும் கொழும்பிலேயே அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டு நிரந்தரப் பிரஜைகளுக்கான விசா தந்திருக்கிறார்கள்.’ பதட்டப்படாமல் அமைதியாகவே சொன்னாள் வதனா.

அகதியாகவா…’? ஏளனமாகச் சிரித்தான் சந்திரன், முன்பு தான் அகதி அந்தஸ்து கேட்டு கள்ளமாக அவுஸ்திரேலியா வந்திறங்கியதை மறந்து.

அதிலென்ன தப்பு? நான் உண்மையான அகதி. அகதி அந்தஸ்து பெற எங்களுக்கு பூரண தகுதியுண்டு’ என குத்தலாகச் சொன்னவள், ‘அடுத்த வாரம் நான் வேலைக்கு போக வேண்டும்’ என்றாள்.

வூலன்கொங் வைத்தியசாலையில் தனக்கு வேலை கிடைத்த விபரத்தை சொல்ல சந்தர்ப்பம் கொடுக்காத சந்திரன் தன் தொனியை உயர்த்திச் சொன்னான்.

இஞ்சை இருக்கிறவங்களுக்கே வேலையில்லை, இவவுக்கு தட்டிலை வேலை வைச்சுக்கொண்டு வரச்சொல்லி அழைக்கிறாங்கள். நாளைக்கு கடைக்கு வரச் சொல்லுங்கோ, எங்களுக்கும் சாமான் அடுக்க ஆள் வேணும். இங்கை நடக்கிறதெல்லாம் நல்லதுக்கில்லை மாமி. இது ஸ்ரீலங்கா இல்லை எண்டதை சொல்லி வையுங்கோ. இங்கை சுழியோடுறதுக்கு ஒரு கெட்டித்தனம் வேணும்.’

வதனாவுக்கு இரண்டு ‘போடு’ போடுவமோ எனவும் சந்திரனுக்கு கைகள் துருதுருத்தன. தன்னைக் கட்டுப்படுத்துவதென்றால் அங்கிருந்து போவது நல்லதெனத் தோன்றியது. பேர்சை எடுத்து பின் பொக்கற்றுக்குள் செருகியபடி வெளியே சென்று விட்டான். பூரணம் பேயறைந்தது போல வியர்த்து விறுவிறுக்க ஒரு மூலையில் நின்றார். வதனா எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று படுத்துக்கொண்டாள். தாய் பூரணம் தூங்கவில்லை. சந்திரன் வரும்வரை காத்திருந்தார். அதிகாலை மூன்று மணிக்கு நிறை வெறியில் வந்த சந்திரன், ஹோலிலுள்ள ஷோபாவில் விழுந்து இரவு முழுதும் புசத்திக் கொண்டு இருந்தான். அவனது புசத்தலில் தமிழிலும் ஆங்கிலத்திலுமுள்ள கெட்ட வார்த்தைகளெல்லாம் தாராளமாகவே வந்தன.

சந்திரனின் வீட்டிலிருப்பது நல்லதல்ல, ஆபத்தானதும் கூட. சந்திரன் துணிந்து எதையும் செய்யக்கூடியவன். இது வதனாவுக்கு நன்கு தெரியும். மாறுநாள் காலையில், இலங்கையிலிருந்து கொண்டுவந்த சர்வதேச அழைப்பு களுக்கான ‘றோமிங்’சிம் காட்டைப் பொருத்தி, தான் சிட்னியில் தங்கியிருக்கும் விலாசத்தை வூலன்கொங் வைத்தியசாலை நிர்வாகிக்குத் தெரிவித்து, உடனே தான் அங்கு வரவிரும்புவதாகச் சொன்னாள். அடுத்த ஒரு மணித்தியாலத்துள் ஆஸ்பத்திரியிலிருந்து குறுஞ் செய்தி வந்திருந்தது. வைத்தியர்களுக்கான வைத்திய சாலைக் குடியிருப்பில் அவளுக்காக தளபாடங்களுடன் கூடிய ஒரு அப்பாட்மெனற் ஒதுக்கியிருப்பதாகவும், வதனா சொன்ன விலாசத்துக்கு மாலை நான்கு மணிக்கு வாகனம் அனுப்பவதாகவும் குறுஞ்செய்தி தெரிவித்தது. என்னதான் இருந்தாலும் சந்திரனுக்கு சொல்லாமல் போவது முறையல்ல. அவன் தன்னுடைய கடைகளின் கணக்குகளை முடித்துவர இரவு எட்டு மணியாகிவிடும். தன்னுடைய அலை பேசியிலேயே அவனைத் தொடர்பு கொண்டாள். வதனாவின் குரலைக் கேட்டவுடன், ‘மச்சாள் பதத்துக்கு வந்திருக்கிறா’ என்ற நினைப்பில், ‘என்ன, கடைக்கு வேலைக்கு வாறியோ’? என்றான் மறுமுனையில் பரிகாசமாக.

தனக்கு வேலை கிடைத்த விபரத்தையும், மாலை நான்கு மணிக்கு வாகனம் வரவிருக்கும் தகவலையும் சொன்னாள். மறுமுனையில் இரண்டு தூஷண வார்த்தைகள். சிறிய மௌனம். பின்பு இணைப்புத் துண்டிக்கப்பட்டது. அறிவித்தபடி நான்கு மணிக்கு வைத்தியசாலை வாகனம் வந்தது. உறவினர் வரவேண்டுமென்ற காரணத்தை சாரதிக்கு சொல்லி ஐந்து மணிவரை சந்திரனுக்காகக் காத்திருந்தார்கள். அலைபேசியில் பலமுறை அழைத்த போதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரனுக்கு நன்றிசொல்லி ஒரு கடிதமெழுதி மேசையில் வைத்தபின் முன்கதவை இழுத்துச் சாத்தினாள்.

மகளா, அண்ணன் மகனா’? என்ற மனப்போராட்டத்திலே பிரமை பிடித்து வெளிவாசலில் நின்றார் பூரணம். நிலமையை உணர்ந்த வதனா தாயைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து வாகனத்தில் அமரச்செய்தாள்.

புதிய சூழ்நிலை. புதிய வேலை. நவீன தொழில் நுட்பம். எல்லாம் வதனாவுக்கு நன்கு பிடித்துக் கொண்டன. வேலையில் அவளுக்கிருந்த அர்ப்பணிப்பும் சுறுசுறுப்பும் வைத்தியசாலை வட்டாரத்தில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. பூரணத்துக்குப் பொழுது போகவில்லை. மனப்புழுக்கம் நரக வேதனையைத் தந்தது. அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டுமென்பது வதனாவுக்கு தெரியாததல்ல. இந்த பிரச்சினையிலிருந்து தாய் தானாகவே மீண்டு வரவேண்டு மென்று அவள் அமைதியாக இருந்தாள். சந்திரன் வீட்டில் வதனா வாழாததும், வூலன்கொங் வைத்தியசாலையில் அவள் பணிபுரிவதும், கொழும்பில் அகதி அந்தஸ்து பெற்று வந்ததும், கிசுகிசுவென சிட்னிவாழ் தமிழர்களிடையே பரவியது. சந்திரனின் திமிர்க் குணத்தைப் பிடிக்காத புங்குடுதீவு ஊரவர்கள் மேலதிகமாக காது-கண்-மூக்கு வைத்து கிசுகிசுத்தார்கள். இந்தச் செய்தி உறவினர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்திலும் பரவியது. தான் இவ்வளவு நாளும் கட்டிக்காத்து வந்த செல்வாக்கும் அந்தஸ்தும் வதனாவால் முற்றாக அழிந்துபோனதாக சந்திரன் எண்ணினான். ஏமாற்றம், கோபம், திமிர்க்குணம், கேலிப் பேச்சுகளுக்கு நடுவே, நண்பர்கள் உசுப்பேத்த வதனாவை ‘தூக்கிவர’ முடிவு செய்தான். நேரகாலம் தெரியாது ஒரு நாள் ‘தண்ணி’யைப் போட்டுவிட்டு, அடியாட்களுடன் வதனா பணிபுரிந்த வைத்தியசாலை வாட்டுக்குள் நேராகவே சென்றான். அங்கு கலாட்டாவில் ஈடுபட்டு வதனாவை கடத்த முயல, பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியுடன் வைத்தியசாலை நிர்வாகம் அவர்களை பொலீசில் பிடித்துக் கொடுத்தது. திறமான வழக்கறிஞர்கள் வைத்து வழக்கை நடத்தியும் வைத்தியசாலை நிர்வாகம் ஆதாரங்களுடன் வாதாடியதால், ஆறுமாத சிறைத்தண்டனையும், தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு, வதனா வசிக்கும் மூன்று மைல் சுற்று வட்டாரத்துக்கு சந்திரன் போகக்கூடாது என்றும் தீர்ப்பாயிற்று.

சிறை வாழ்க்கை முடிந்து பல்லிழந்த புலியாகவே சந்திரன் வெளியே வந்தான். வதனாவால் சந்திரன் சிறை சென்றது தங்கள் எல்லோருக்கும் நேர்ந்த அவமானமாகவே கனகராசா உணர்ந்தான். இந்தியாவில் ஒரு டாக்டரைப் பார்த்து கணக்குத் தீர்க்கும் யோசனையை அவன் கனடாவிலிருந்து முன்மொழிந்தது மட்டுமல்லாமல் கலியாண ஏஜன்சிமுலம் இந்தியாவில் டாக்குத்தர் பெம்பிளை ஒன்றையும் தேடிப்பிடித்தான். இதன்மூலம் கொழும்பிலுள்ள பொன்னையரின் வாழைப்பழக் கடையை எழுதிவாங்க அவன் பிளான் போட்டது சந்திரனுக்கும் அவனுடைய தாய்க்கும் தெரிய, வாய்ப்பில்லை.

 

6

டபழனி முருகன் கோவிலில் கலியாணம் இனிதே நடந்தது. எட்டு மாதங்களின் முன்பே சந்திரன் றிஜிஸ்ரார் கந்தோரில் திருமணத்தைச் சட்டபூர்வமாக பதிந்திருந்தான். இந்தக் கால எல்லைக்குள் விசா நடைமுறைகள் பூர்த்தியாக்கப்பட்டு மனைவி வாணிக்கு அவுஸ்த்திரேலியா செல்ல விசா கிடைத்துவிட்டதால், மறுநாளே வாணியுடன் சிட்னி வந்து இறங்கினான். சரிந்த செல்வாக்கை நிமிர்த்தி எடுக்க, சிட்னி ‘ஒப்ரா ஹவுஸ்’ அருகே, ‘ஹாபர்’ பாலத்தின் கீழே உள்ள பூங்காவில் வண்ண விளக்குகள் ஒளிர, திருமண வரவேற்பு உபசாரத்தையும் வெகு ஆடம்பரமாக நடத்தி முடித்தான். புங்குடுதீவு உறவினர்கள் மூலம் மாமி பூரணத்தை அழைக்க முனைந்தபோதும் அது கைகூடவில்லை. சகல புதினங்களும் உறவினர்கள் மூலமாக, வதனாவுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டான். கடையில் சாமான் அடுக்க, வதனாவை அழைத்தவன் சந்திரன்! இன்றைய நிலையில் தன்னுடைய மனைவி வாணி, சிட்னி வைத்தியசாலை ஒன்றில் வதனாவுக்குச் சமமாக டாக்டராக பணிபுரிய வேண்டுமென்று அவதிப்பட்டான். இதற்காக மலைகள் பலவற்றை புரட்டியெடுத்த பொழுதிலும் சுண்டெலியே அகப்பட்டது போல, சகல மட்டங்களில் அவன் முயற்சி செய்தும், நெடுந்தொலைவிலுள்ள கிராமப்புற வைத்தியசாலைகளிலேயே வாணிக்கு இடம் கிடைக்கலாம் என்கிற நிலையே மிஞ்சியது. முன்பின் தெரியாத வாணியைக் கலியாணம் செய்து ‘ஷோ’க்காட்டிய சில நாள்களுக்குள், பிரிந்திருக்க சந்திரன் விரும்பவில்லை. இப்படித் தூரத்தே மனைவியை வேலைக்கு அனுப்பிய சிலருடைய வாழ்க்கை ‘கிலிசகேடாகி’ போனதை சந்திரன் அறிவான். அவனுக்கு இப்பொழுதுதான் வாழ்க்கையின் உண்மையான ‘தாத்பரியம்’ புரிந்தது. பிறந்த நாள் தொடக்கம் பணத்திமிருடனேயே வாழ்ந்து பழக்கப்பட்ட அவனுக்கு இப்பொழுது மங்குசனி போலும். எல்லாமே சாணேற முழம் சறுக்கின. கஷ்டங்களின் மத்தியிலே வாழ்ந்து பழக்கப்பட்டவள் வாணி. சிட்னிவாழ்கை அவளுக்குப் புதிசு. கடல்போன்ற சந்திரனின் வீடும் அங்கு தாராளமாகப் புழங்கும் ‘டொலர்களும்’ அவளுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. வருமான வரி ஏய்ப்புக்கு வசதியாக, கடைவருமானத்தின் பெரும்பகுதியை வங்கியில் வைப்புச் செய்யாமல், வீட்டிலுள்ள இரும்பு அலுமாரியில் கட்டுக்கட்டாக அடுக்கியிருந்தான். கட்டுகளுக்கு நடுவே நகைக்கடை நகைகளும் பெட்டிபெட்டியாக அடுக்கப் பட்டிருந்தன. சகல வசதிகளும் வீட்டிலிருக்க தான் ஏன் வேலை செய்ய வேண்டும்? என்ற எண்ணத்தில் வேலைக்காக வாணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சந்திரனிடமுள்ள பண வசதிகளை அவள் தாராளமாகவே அனுபவித்தாள். இந்தியாவிலுள்ள தம்பிக்கும் தாய்க்கும் மாதந்தோறும் பணமனுப்பினாள்.

வாணியைத் திருமனம் செய்த நோக்கம் சரியாக நிறைவேறாத ‘அந்தரம்’ சந்திரனுக்கு. அவளுடன் தான் இல்லற சுகம் அனுபவிப்பதிலும் பார்க்க, வதனாவுக்கு பாடம் படிப்பிப்பதே அவனுக்கு முக்கியம். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் துவங்கின. மதுவெறியிலே இரவுகளில் வாணியை அடிக்கவும் துவங்கினான். மொத்தத்தில் புங்குடுதீவுக் கலாசாரமும், சென்னை ‘குயில்குப்ப’த்து வாழ்கைமுறையும் அடியோடு ஒத்துப் போகவில்லை. சந்திரனுக்கு மனச் சஞ்சலங்களும் கஷ்டங்களும் வரும்போதெல்லாம் ஹவாய் இந்துத் துறவிகள் மடத்துக்கு சென்றுவிடுவான். இந்த மடம் இந்துப் பெயரைச் சூட்டிய ஒரு வெள்ளைக்கார துறவியால் ஆரம்பிக்கப்பட்டது. அவரது மறைவின் பின் தற்பொழுது அவரது சீடரால் நிர்வகிக்கப்படுகிறது. அவரும் ஒர் அமெரிக்க வெள்ளையர். இவர்கள் இந்துமத தத்துவங்களின் ஈடுபாட்டினால் துறவி களானவர்கள். ஆரம்ப காலத்திலிருந்தே அவன் ஹவாய் துறவிகள் மடத்துக்குச் செல்வதுண்டு. தனது வியாபார முன்னேற்றத்துக்கு மடத்திலுள்ள சுவாமியின் ஆசியே காரணமென பரிபூரணமாக நம்பினான். இதனால் மடத்துக்கு நிறையவே நன்கொடைகளும் வழங்கியிருக்கிறான். சந்திரன் வாழ்க்கையில் செய்யும் நல்ல காரியம் இது ஒன்றுதான் என நண்பர்கள் அவனுடைய முதுகுக்குப் பின்னால் குசுகுசுப்பதுண்டு.

சந்திரன் தன்னை ‘ஏன் கட்டினான்…’? என்ற விபரத்தை வாணி விரைவில் அறிந்துகொண்டாள். இந்த வர்த்தமானத்தை வாணிக்கு சொல்வதற்காகவே ஊரவர்கள் அடிக்கடி சந்திரனின் வீட்டுக்கு வந்துபோனார்கள். சந்திரனின் ‘கதைக்கு’ கண்-காது-மூக்கு வைத்துச் சொல்லி வாணிக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.

சந்திரனின் ஆய்க்கினை தாங்காமல் மூன்றுமுறை அவுஸ்திரேலிய மருத்துவ சபையின் அங்கீகாரம் பெற, பரீட்சை எழுதியும் வாணியால் சித்திபெற முடியவில்லை. மூன்று முறைக்குமேல் இந்த சோதனை எடுக்கமுடியாது என்பதைக் கனகராசா கனடாவில் இருந்தவாறே இணையத்தில் சுழியோடி அறிந்து கொண்டான். தில்லுமுல்லுகளின் மொத்த உருவம் கனகராசா. சந்திரன்-வாணி திருமண விடயத்திலும் தன் கைவரிசையைக் காட்டியிருந்தான். சந்திரனை அலை பேசியில் தொடர்பு கொண்டவன், வாணி பற்றிய சில உண்மைகளைக் கக்கினான்.

வாணி எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் படிக்கவில்லையாம். ஆதிதிராவிடர்களுக்கான கோட்டாவில் உதவிப் பணம் பெற்று, குறைந்த புள்ளிகளுடனேயே தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்தவளாம். ஐந்துவருடப் படிப்பை எட்டுவருடங்களில் முடித்து, தட்டுத்தடுமாறி டாக்டரானவளாம். அதனால்தான் அவுஸ்திரேலிய மருத்துவ சோதனையில் சித்திபெற முடியவில்லை’ எனச் சொல்லிச் சிரித்ததன் மூலம், கொழும்பிலுள்ள வாழைப்பழக் கடையை எழுதித் தராததுக்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.

வாணியின் தம்பி கலைச்செல்வன் சென்னை திரைப்படக் கல்லூரியில் டிப்ளோமா படித்தவன். சில படங்களுக்கு உதவி இயக்குனராய் பணிபுரிந்தவன். சினிமாப் படம் ஒன்றினைத் தானே இயக்கவேண்டுமென்பது அவனுடைய ஆசைகளும் கனவுகளும். அவன் உதவி இயக்குனராய் பணிபுரியும் மெகா பட்ஜெட் படமொன்றின், பாடலுக்கான ஸூட்டிங் சிட்னியில் நடந்தது. அதற்கு கலைச்செல்வனும் சிட்னி வந்திருந்தான். வழமைபோல சந்திரன் இதுபற்றி சிட்னி எல்லாம் பீற்றித் திரிந்தான். சந்திரனின் சிபார்சில் பலர் ஸூட்டிங் பார்த்தார்கள். தமிழ் வானொலிகளுக்கு, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை களுடன் பேட்டியும் ஒழுங்கு செய்தான். மொத்தத்தில் கலைச்செல்வனின் வரவால் சந்திரன் புத்துணர்ச்சி பெற்று வலம் வந்தான் என்பது உண்மை. ஸூட்டிங் முடிந்ததும் ஒரு கிழமையாவது தங்களுடன் இருந்து போகுமாறு கலைச்செல்வனை வற்புறுத்தித் தங்கவைத்தான். இதன் மூலம் தனக்கும் தனது கடைகளுக்கும் சினிமா விளம்பரம் கிடைக்குமென்பது சந்திரனின் கணக்கு.

சந்திரன் ஒரு படம் தயாரிக்கலாமே…’ என சகோதரியிடம் ஆழம் பார்த்தான் கலைச்செல்வன். இதன் மூலம் தான் இயக்குனராய் வந்து விடலாமென்பது அவனது கனவு. குறுகிய காலத்துக்குள்ளேயே சந்திரனை முற்றாக படித்து வைத்திருந்தாள் வாணி. ‘மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது’ என்பது வாணிக்குத் தெரியும். சந்திரன், வியாபாரத்தில் எதில் காசுபோடவேண்டும், எதில் போடக்கூடாது என்பதிலே மிகவுந் தெளிவாக இருந்தான். பொன்னையரின் இரத்தமென்றால் சும்மாவா? சந்திரனின் கதைகளை ஆதியோடு அந்தமாக தம்பியாருக்குச் சொன்னாள் வாணி. அவனுக்கு மது வெறியேறும் போதெல்லாம் மருத்துவப் பரீட்சை சித்தியடையாததைச் சொல்லி தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் சொல்லி அழுதாள். கலைச்செல்வனின் கோடம்பாக்க மூளை, தனது வாழ்க்கைக்கான புதிய ‘கதை-வசனம்’ தயாரிப்பதிலே தீவிரமாக ஈடுபடலாயிற்று!

 

7

ன்றும் இல்லாத அளவுக்குக் கலைச்செல்வன், வாணியின் துன்பங்களையும் சோகங்களையும் கேட்டு மனம் வருந்துவதாக நடித்தான். தங்கக் கூட்டிலே அவள் அடைக்கப் பட்டிருப்பதை உணரச் செய்தான். அவுஸ்திரேலியாவில், சந்திரனின் கெடுபிடிகளையும் அவனுடைய உறவினர் வட்டத்தையும் மீறி அவளாலே எதுவும் செய்ய முடியாதென்பதை எடுத்துச் சொன்னான். எதிர்காலத்தில் எல்லோரும் ஆச்சரியப் படும் வகையிலே, வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனை யிலும் பார்க்கச் சிறந்த மருத்துவமனையிலே, அதன் உரிமை யாளராக வலம் வரும் கலர்கலரான கனவுகளிலே வாணியைச் சஞ்சரிக்கச் செய்தான். இதன் மூலம், சந்திரனின் சொத்துக் களைச் சூறையாடிச் செல்வதற்கான அனைத்துத் திட்டங் களையும், அவன் கெட்டித்தனமாகவும் கோடம்பாக்க நண்பர் களின் அமோகமான ஆலோசனைகளுடனும் கச்சிதமாக வகுத்தான். இவற்றைச் செய்யும் பொழுதெல்லாம், தமிழில் முதலாவது கலர்படமான ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்கிற படம் மனத்திரையில் ஓடியது. ‘பொலிவூட்’ வெற்றிப் படங்களையும் விஞ்சும் வகையிலே ஒரு மெகா படம் எடுப்பது பற்றிய கனவுகளிலே கலைச்செல்வன் ஈடுபடலானான். திரவியம் உள்ள குகையை அவன் அடைந்தாகிவிட்டது. அதிலுள்ள திரவியத்தைச் சுருட்டிக்கொண்டு சென்னைக்கு எஸ்கேப் ஆவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிறின்றி, மிகவும் கமுக்கமாகச் செய்து முடித்தான்.

தன் முதுகின் பின்னால் இத்தகைய கலர் கனவுகளைச் சுமந்து கொண்டு இவர்கள் அலைவதை அறியாத சந்திரன், தன் வியாபாரங்களிலே சந்தித்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியிலே அல்லாடிக் கொண்டிருந்தான். சென்னையில் கலியாணம், சிட்னியில் ஆடம்பர வரவேற்பு, குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி, கலைச்செல்வனின் வரவு, சினிமாக்காரர்களுடன் கூத்தடித்தல் எனப் பல பிற ஜோலிகள் குறுக்கிட்டதினால், கடைகள் அவனுடைய நேரடி முகாமையின்றி தடம்மாறி ஓடிக்கொண்டிருப்பதை, அவன் காலம் தாழ்த்தியே உணரக் கூடியதாக இருந்தது. கடையிலே வேலை செய்தவர்கள் பெருந்தொகை பணத்தினைக் கையாடல் செய்தது தெரிய வந்தது. நகைக்கடைக் கணக்கில் ஏராளமான குளறுபடிகள். சந்திரன் தீயை மிதித்தவன் போலானான். வியாபார நஷ்டங்களை தோராயமாகக் கணக்கிட்டு முடிய நள்ளிரவு தாண்டிவிட்டது. சோர்வினையும் வலியையும் போக்கக் குடித்தான். வழக்கத்திலும் அதிகமாகவே அன்று குடித்தாலும் வெறியேறவில்லை. அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குத் திரும்பினான். வீடு அமைதியில் உறங்கியது. வாணியைக் காணவில்லை. கலைச்செல்வனின் அறையை எட்டிப் பார்த்தான். அவன் அங்கு தங்கி இருந்ததற்கான எந்தவித அடையாளமும் தென்படவில்லை. ஏதோ அவனுடைய பிடரியில் ஓங்கி உதைத்ததுபோல இருந்தது. பணம் நகைகளைத் தேடினான். அவை பத்திரப்படுத்தியிருந்த இரும்பு அலுமாரி வழித்துத் துடைக்கப் பட்டிருந்தது.

புதிய வாழ்வு தேடி ஆவுஸ்திரேலியாவுக்கு வந்த வாணி, தன் தம்பி கலைச்செல்வன் ஊட்டிய புதிய கனவுகளைச் சுமந்து கொண்டு இந்தியாவுக்கு சென்றுவிட்டாள். பொலீசுக்கும் செல்ல முடியாது. இவையெல்லாம் வரி ஏய்ப்புக்காக வீட்டில் பத்திரப்படுத்திய பணமும் நகைகளும். வாணிமீதும் தம்பிமீதும் எப்படிப் பழிதீர்ப்பது என்று சந்திரன் மூளையைக் கசக்கிக் கொண்டு பைத்தியம் பிடித்தவன் போலத் திரிந்தான். இந்த நிலையிலேதான் யாழ்ப்பாணத்திலுள்ள உறவுகளிடமிருந்து அந்தத் தொலைபேசிச் செய்தி வந்தது.

பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற பொன்னையாவின் அன்பு மனைவியும், அவுஸ்திரேலியா சிட்னியிலே வர்த்தகப் பிரமுகராக வாழும் சந்திரனின் தாயாருமாகிய பாக்கியம் யாழ்ப்பாணத்தில் காலமானார்…!’

தாயாரின் உடலைப் பாதுகாக்கும்படியும், தான் ஊர்வந்ததும் மரணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ளலாமெனவும் உரிமை உடையவர்களுக்கு அறிவுறுத்தல் செய்தான். ஊர் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதிலே சந்திரன் தனி மரமாகிவிட்ட போதிலும், மனம் தளராது துரித நடவடிக்கைகளிலே இறங்கினான். ‘எல்லாம் அந்த ‘வேசை’ வதனாவால் வந்தது’ என்று திட்டவும் சுரத்து இல்லாமல் போனது. வயிற்று வலியை விலைபேசி வாங்கிவந்த மோட்டுத்தனம் பூதமாக எழுந்த நின்றது. இந்த மனக் கவலைகளிலும் பார்க்க, மண்பற்றும், புங்குடுதீவிலே பொன்னையர் ஆட்சி செய்த செல்வாக்கும் அவனுள் சடைத்தது. அவருடைய பெயரை நிலைநாட்ட, அவருக்கு சகல செல்வங்களும் பொங்க இல்லாளாய் வாழ்ந்த பாக்கியத்தின் ஈமைச் சடங்குகள், பிறந்த மண்ணிலே ராஜ மரியாதைகளடன் நடத்தப்பட வேண்டும் என்கிற ரோஷமும் ராங்கியும் அவன் மனசுள் ஒவ்வொரு நிமிஷமும் வியாபிக்கலாயிற்று. அதற்கு அப்பால் எவ்வித ஆசையும் இல்லை என்கிற வெறுமையையும் உணர்ந்தான்.

வந்து பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற தீர்மானத்துடன் பெரிய கடன் தொகையை வசப் படுத்திக் கொண்டு ஊருக்குச் சென்றான். பாக்கியத்தின் ஈமச் சடங்கும், ஏனையனவும் அந்திரட்டி உட்பட ஊர் மெச்சும் வகையில், எந்தவித குறையும் வைக்காமல் டாம்பீகமாகச் செய்து முடித்தான். தன் பணச்செருக்கும், அது தந்த அதிகார வெறிகளும் தாயின் சிதையிலே பொசுங்கிச் சாம்பலானதை சந்திரன் திடீரென உணர்ந்தான். சுடலை ஞானம் பெற்ற பக்குவம் அவனுக்கு. சின்ன வயதிலே கட்டி எழுப்பிய கனவுகளின் சிதையிலே, அவநம்பிக்கைகளை அடித்தளமாகக் கொண்டு தான் எழுப்பிய கனவு மாளிகைகள் மணலிலே கட்டப்பட்டது போன்று சிதைந்துபோனதை சிட்னி திரும்பியதும் தெரிந்து கொண்டான்.

போதுமடா சாமி’ என்கிற விரக்தியில் மனம் பக்குவமடைந்திருந்தது. சந்திரனின் இரண்டு கடைகளும் நகை மாளிகையும் திவாலாகும் நிலையிலிருந்தன. வந்த விலைக்கு வட இந்திய வியாபாரி ஓருவனுக்கு விற்றான். அந்தப் பணவரவு அவனுக்கு இருந்த கடன்களை அடைக்கப் போதுமானதாக இருக்கவில்லை. தன் வீட்டையும் விற்று எல்லாக் கடன்களையும் பொன்னையர் மானம்’ என்கிற ராங்கியுடன் அடைத்தான். கையிலே ஒரு கணிசமான தொகை தேறியது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு. மீண்டும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் சாதுர்யம் சந்திரனிடமிருந்தது. ஆனால் தாயின் சிதையிலே ஏற்பட்ட ஞானம் கற்பித்த வழியையே அவன் தேர்ந்தெடுத்தான். கையிலிருந்த பணத்துடன் அவன் நேரே ஹவாய் இந்து துறவிகள் மடத்தில் வந்திறங்கினான். கடைகள் விற்ற காசை துறவிகள் மடத்தின் கணக்கில் வரவு வைத்த பின்பே அவனால் நிம்மதியாகத் தூங்க முடிந்தது.

புங்குடுதீவில் ‘ன்’ ஆகத் துவங்கிய சந்திரன், இப்பொழுது ‘ர்’ ஆக அழைக்கப்படலானார்.

சந்திரர் இப்பொழுது ஹவாய் இந்து துறவிகள் மடத்தில், சந்திரானந்த சுவாமிகள் என அன்புடனும் மரியாதையுடனும் நடத்தப்படுகிறார்.

 

 

8

பாக்கியம் மாமி இறந்த செய்தி காலம் தாழ்த்தியே வதனாவுக்கு தெரிய வந்தது. வேண்டாத தொடர்புகளைத் தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தனால், சிட்னியிலுள்ள ஊரவருடனான தொடர்புகளை வதனா கூடுமானவரையில் தவிர்த்தே வந்திருந்தாள். ஆனாலும், தாயின் மனப்புழுக்கம், மன அழுத்தமாக மாறிவிடக்கூடாது என்பதிலே மிகக் கவனமாகச் செயற்பட்டாள். அவுஸ்திரேலிய மெடிக்கல் கவுன்ஸில் நடத்திய பரீட்சைகள் எல்லாவற்றிலும் தேறி, சிட்னியில் தனியாகவே மருத்துவமனை ஒன்றினை நடத்துவதற்கான அனைத்து தகைமைகளையும் வதனா பெற்றிருந்தாள். அவளுடைய வைத்திய சேவையின் பெருமை வூலன்கொங்கிற்கு அப்பாலாகவும் பரவியது. அவளைத் தங்களுடன் வந்து சேவையாற்றும்படி பிரபல வைத்தியசாலைகளே தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருந்தன. ஆனால், அவள் வைத்திய சேவையை, பணம் காய்க்கும் மரமாக மாற்ற விரும்பவில்லை.

வதனா எதிர்பாத்திராத நிலையில், அன்று இலங்கையிலிருந்து ஒரு மின்அஞ்சல் வந்திருந்தது. வடமாநில சுகாதாரத்துறை அமைச்சு வதனாவுக்கு விலாசமிட்டு அதை அனுப்பியிருந்தது. போருக்குப்பின் துரிதகதியில் அபிவிருத்தி வேலைகள் வடமாகாணத்தில் நடைபெறுவதாகவும், கிளிநொச்சி மக்கள் வதனாவின் சேவையை பெரிதும் விரும்புவதாகவும் அவர்கள் சார்பாகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாகவும் அந்த மின் அஞ்சல் தெரிவித்தது. தாய் தற்பொழுதுள்ள நிலையில் இலங்கைக்குச் செல்வது நல்லதென வதனாவுக்குத் தோன்றியது. அம்மாவின் ஆரோக்கியம் என்பதுதான் வதனாவின் விருப்பு வெறுப்புகளிலே முதலிடம் பெற்றது. வூலன்கொங் வைத்தியசாலை நிர்வாகம் அவளுடைய சேவையை இழக்க விரும்பவில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், வதனா தன் பக்கத்து நியாயங்களை பக்குவமாக விளக்கினாள். நிர்வாகம் அவளுடைய நியாயங்களை அநுதாபத்துடன் அணுகவும், அவள் இலங்கைக்கான பயண ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.

வூலன்கொங் வைத்தியசாலைக்கு வதனா வந்தபோது வைத்தியராகச் சேர்ந்தவன் றொபேட், ஆங்கிலேய அவுஸ்திரேலிய இளைஞன். ஒரு கனவானுக்குரிய அத்தனை குணங்களும் அவனிடமிருந்தன. சிலவருடங்கள் ஆப்கானிஸ்தானில் இராணுவ வைத்தியனாகப் பணிபுரிந்தவன். ஆசிய ஆபிரிக்க நாடுகளெங்கும் பரவலாக பயணம் செய்தவன். கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவராலயம், கிளி நொச்சியில் வதனாவின் வைத்திய சேவைகள் பற்றி எழுதிய குறிப்புக்களை அவன் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதன்பின் வளர்முக நாடுகளில் உள்ள அரசியல் பிரச்சினைகள், அதனால் சீர்குலைந்த வைத்திய சேவைகள் பற்றி அடிக்கடி அவளுடன் உரையாடுவான். வதனாவின் விவேகமும் வைத்திய அறிவும் அவனை மேலும் பிரமிப்பில் ஆழ்த்தின. தேநீர் இடைவேளையின்போது ஒய்வறையில் தனித்திருந்தாள் வதனா. அங்கு வந்த றொபேட் வைத்திய சம்பந்தமான விடயங்களைப் பேசியபின் தன் விருப்பத்தைச் சொன்னான்.

வதனா…, என் மருத்துவப் பணியின் பெரும்பகுதியை அல்லற்படும் மக்களுக்காகவே செலவு செய்திருக்கிறேன். இங்குள்ள மருத்துவ வசதியின்கீழ் பணிபுரிய பல மருத்துவர்கள் முன் வருவார்கள். ஆனால் கிளிநொச்சி போன்ற இடங்களில் பணிபுரிய, இங்குள்ள வசதிவாய்ப்புக்களை உதறிச் செல்லக்கூடிய, உன்னைப் போன்ற ஒருசிலரே இருப்பார்கள். உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நானும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உன்னுடன் வருகிறேன். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யமுடியுமா…’?

உன்னால் அங்கு தாக்குப்பிடிக்கமுடியுமா, றொபேட்’? ‘

ஆப்கானிஸ்தான் கிராமங்களிலும் பார்க்க கிளிநொச்சி வாழ்க்கை கடுமையானதா’? என்று றொபேட் கேட்டுச்சிரிக்க, வதனாவும் அச்சிரிப்பிலே ஒன்றினாள்.

9

வாய் துறவிகள் மடத்திலே சந்திரானந்த சுவாமிகள் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கிறார். அங்கு அவர் ஆன்மீக சேவைகளிலும் தியானதிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். மடத்து முகவரிக்கு உற்றாரும் ஊர்க்காரர்களும் எழுதும் கடிதங்களை அவர் பிரித்துப் பார்ப்பதில்லையாம். கொழும்பிலுள்ள வாழைப்பழக் கடையை தன்பெயருக்கு எழுதி எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிற கனவுகளுடன் கனடாவிலிருந்து கனகராசா எழுதும் கடிதங்கள், மடத்திலே துயில் பயிலுகின்றன. பென்னம் பெரிய கனவுகளை வளர்த்துக் கொண்டே, கலர் கலரான கனவுகளுடன் கோடிகள் கொட்டி எடுத்த அலிபாபாவும் ‘நவீன’ திருடர்களும் என்கிற படம் ஊத்திக் கொண்டது. இதனால் கோடம்பாக்கத்து சினிமா பைனான்ஸர்களுடைய தொந்தரவு தாங்காமல், கலைச்செல்வன் ஒளிந்து திரிவதாக கோடம்பாக்கத்துக் கிசுகிசுக்கள் பட்டையைக் கிளப்புகின்றன.

அவுஸ்திரெலியா ரிற்றேன்ட்’ என்கிற விளம்பரத்துடன் வடபழனியில் சிறிய டிஸ்பென்சரி நடத்தும் வாணி, முந்திய திருமணத்தை மூடிமறைத்து, புதிய வாழ்க்கை அமைக்கும் கனவுகளைத் துறக்காது வாழ்ந்து கொண்டிருக்கிறாள்!

சுவாமி சந்திரானந்தரின் தியானத்தினை, வதனா பற்றிய மங்கலான நினைவுகள் மட்டும் இடையிடையே குழப்ப முனைகின்றன.

ஆனாலும், ‘பக்குவம்’ பெறுவதற்கான அவரின் பயணம் தொடர்கிறது…!

ஆசி கந்தராஜா (2013)

4 comments:

  1. சந்திரன் சந்திரானந்தரான கதை மிக சுவையான அழகான கதை. யதார்த்தமான கதை அமைப்பு, பேச்சு வழக்கில் உள்ள சொற்றொடர் மெருகூட்டுகிறன. வாழ்துகள்.

    ReplyDelete
  2. Australia embassy யில் இருக்கும் அதிகாரி வதாகவுக்கு உதவிகளை செய்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பது போன்ற சம்பவங்கள் உண்மையிலேயே பலருக்கு நடந்திருக்கிறது இந்த விஷயத்தில் தான் மேற்கு நாடுகளின் அரசு மக்களுக்கான அரசு இன்றைய விஷயம் முதல் முதலாக நமது மக்கள் பலருக்கு புரிந்திருக்கிறது நானும் கூட உயர் கல்வி கற்க வந்தவன் நான் மலையகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தவுடன் எந்த கேள்வியும் இல்லாமல் என்னை இங்கே நிரந்தரமாக இருப்பதற்கு அனுமதித்தார்கள்

    ReplyDelete