Thursday, 12 November 2026





அங்கூனா - ஒரு மண்ணின் மகள்.





ஆசி கந்தராஜாவின் நாவல்,  அங்கூனா - ஒரு மண்ணின் மகள்.

அசோகன் - சென்னை.

ஒரு காதல் எப்போது ஒரு தனிமனிதனின் கதையாக இல்லாமல், ஒரு சமூகத்தின் கதையாக மாறுகிறது? இந்தக் கேள்வியுடனேயே இந்நாவல் தொடங்குகிறது.

அங்கூனா ஒரு காதல் கதை மட்டுமல்ல. இருவேறு மண்ணைச் சேர்ந்த இரு உயிர்களின் வாழ்வும் விதியும் பின்னிப்பிணையும் கதை. எல்லைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மலரும் காதல், இரண்டு வரலாறுகளின் சந்திப்பாகவும், ஒரு புதிய தலைமுறையின் அடையாளத் தேடலாகவும் விரிவடைகிறது.

அங்கூனா ஆஸ்திரேலிய ஆதிக்குடிப் பெண். சூரி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் படகில் ஆஸ்திரேலியாவை வந்தடைந்த இலங்கைத் தமிழ் அகதி. அவர்களின் சந்திப்பு, இரண்டு மனிதர்களுக்கு இடையிலான காதலாகத் தொடங்குகிறது. ஆனால், காலப்போக்கில் அந்தக் காதல், முற்றிலும் வேறுபட்ட வரலாறுகளையும் அனுபவங்களையும் சுமந்துவரும் இரண்டு உலகங்களின் சங்கமமாக மாறுகிறது.

ஒரு புறம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணோடு பிரிக்க முடியாத உறவுகொண்டு வாழ்ந்த பூர்வகுடி மக்களின் வரலாறு. மறுபுறம், தன் சொந்த மண்ணில் வாழ முடியாமல், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்நிய நாட்டில் தஞ்சம் தேடி வந்த அகதியின் கதை. இந்த இரு உலகங்களும் காதலால் ஒன்றிணைகின்றன. அவர்களின் காதலுக்குச் சாட்சியாகப் பிறக்கும் குழந்தை, இரு வேறுபட்ட வரலாறுகளையும் இணைக்கும் உயிராகிறது. ஆனால், அந்த இணைவு அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில், மனிதர்களின் இதயங்களில் மலரும் காதலுக்கு எல்லைகள் இல்லாமல் இருக்கலாம்; அவர்கள் வாழும் சமூகங்களில் அந்த எல்லைகள் இன்னும் அழியாமல் இருக்கின்றன.

இனம், மொழி, நிறம், பண்பாடு, அரசியல், அதிகாரம் என மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லைகள், அங்கூனாவினதும் சூரியினதும் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைகின்றன. அவர்களின் காதல் எதிர்கொள்ளும் சந்தேகங்களும் நிராகரிப்புகளும் சமூக அழுத்தங்களும், இரண்டு தனிமனிதர்களின் துயரங்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை ஒரு சமூகத்தின் மனநிலையையும், மனித உறவுகளின் மீது அதிகாரம் செலுத்தும் அமைப்புகளின் இயல்பையும் வெளிப்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில், சூரி நாடுகடத்தப்படுவது ஒரு மனிதனை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அனுப்பும் அரச நடவடிக்கையாக மட்டும் அமையவில்லை. அது அவனுடைய காதலை, குடும்ப உறவுகளை, தந்தை என்ற அடையாளத்தை, ஏன், ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக்கூட எவ்வாறு பாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஒரு மனிதனுக்கு நாடு இருக்கலாம். ஆனால், அவனுடைய காதலுக்கு நாடு உண்டா? ஒரு குழந்தைக்குத் தந்தை இருக்கலாம். தந்தை நாடுகடத்தப்படுவதால், அந்தக் குழந்தையின் உரிமைகளும் உறவும் நாடுகடத்தப்பட முடியுமா? ஒரு பெண் இந்த மண்ணின் மகளாக இருக்கலாம். ஆனால், அவள் நேசிக்கும் மனிதன் இந்த மண்ணுக்கு அந்நியன் என்பதற்காக, அவளுடைய காதலும் அந்நியமாகிவிடுமா?

இந்தக் கேள்விகளுக்குத் தீர்ப்பளிப்பது இந்நாவலின் நோக்கமல்ல. மாறாக, அவற்றை வாசகரின் மனத்தில் விதைத்துவிட்டு, அவரவர் மனச்சாட்சியின் முன்னால் நிறுத்துவதே இதன் நோக்கம்.

அங்கூனா - ஒரு மண்ணின் மகள் என்ற தலைப்பில் இடம்பெறும் மண் என்பது வெறும் நிலப்பரப்பைக் குறிப்பதல்ல. அது நினைவின் இருப்பிடம்; வரலாற்றின் சுவடு; அடையாளத்தின் ஆணிவேர். அது தலைமுறைகள் கடத்திவரும் அனுபவங்களின் தொகுப்பு; முன்னோர்களின் குரல்களைத் தன்னுள் புதைத்துவைத்திருக்கும் வாழ்வின் ஆதாரம்.

அங்கூனா ஆஸ்திரேலிய மண்ணின் மகள். அந்த மண்ணின் நீண்ட வரலாற்றையும் அதன் பண்பாட்டு நினைவுகளையும் தன்னுள் சுமந்து நிற்பவள். சூரியோ, தான் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து பெயர்த்தெறியப்பட்டவன். உயிர் பிழைப்பதற்காகப் புதிய மண்ணில் காலூன்ற முயல்பவன். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை, இந்த இரு வரலாறுகளின் சங்கமமாகிறது.

ஆனால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் எத்தகையது? அதன் கண்களில் எந்த மண்ணின் நினைவுகள் பதிந்திருக்கும்? எந்த மொழி அதன் தாய்மொழியாக அமையும்? தந்தையின் அகதி வரலாறும் தாயின் பூர்வகுடி வரலாறும் அதன் வாழ்வில் எவ்வாறு ஒன்றோடொன்று பயணிக்கும்? இரு வேறுபட்ட வரலாறுகளின் வாரிசாகப் பிறக்கும் அந்தக் குழந்தை, அவற்றுக்கிடையே பாலமாக அமையுமா? அல்லது, அந்த வரலாறுகள் உருவாக்கிய முரண்பாடுகளின் சுமையையும் தன் தோள்களில் சுமக்க வேண்டியிருக்குமா? இவைதான் இந்நாவல் எழுப்பும் கேள்விகள்.

அங்கூனா ஒரு காதலைப்பற்றிய நாவல் என்ற எண்ணத்துடன் இக்கதையை  வாசிக்கப்படக் கூடாது. இது மண்ணைப் பற்றிய நாவல். மனிதனைப் பற்றிய நாவல். காதலையும் இழப்பையும் பற்றிய நாவல். தமது வேர்களைத் தேடியும், புதிய மண்ணில் தமக்கான இடத்தைத் தேடியும் அலைகின்ற மனிதர்களைப் பற்றிய நாவல்.

அங்கூனா ஒரு தனிப்பட்ட கதாபாத்திரம் மட்டுமல்ல. தன் மண்ணின் வரலாற்றையும் அடையாளத்தையும் இழக்காமல், உலகத்தோடு உரையாட விரும்பும் ஒரு பெண்ணின் உருவகம். சூரியும் ஒரு தனிப்பட்ட அகதி மட்டுமல்ல. தன் கடந்த காலத்தையும் காதலையும் குழந்தையையும் பற்றிக்கொண்டு, புதிய நாட்டில் தன்னை மீண்டும் உருவாக்க முயலும் எண்ணற்ற அகதிகளின் வாழ்வனுபவங்களைப் பிரதிபலிக்கும் ஒரு பாத்திரம். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையோ, கடந்த காலத்தின் இரண்டு வரலாறுகளையும் சுமந்தபடி எதிர்காலத்தை நோக்கி நிற்கும் ஒரு கேள்விக்குறி.

வேர்கள் வேறாக இருந்தாலும், மனிதர்களின் வாழ்வும் காதலும் ஒரே மண்ணில் இடம் பெற முடியாதா? என்ற கேள்விக்கான விடையை ஒரு தீர்ப்பாக முன்வைப்பதைவிட, அதன் சிக்கல்களோடு வாசகரைப் பயணிக்க வைப்பதே இந்நாவலின் அடிப்படை நோக்கம்.

சில கதைகளுக்கு முடிவு எழுதப்பட்டாலும், அவை எழுப்பும் கேள்விகளுக்கு முடிவு இருப்பதில்லை. அந்த வகையில், இக்கதையின் முடிவையும் அதன் வாசகர்களிடம் விடப்பட்டுள்ளது. ஏனெனில், ஒரு கதையின் இறுதிப் பக்கத்தோடு கதாபாத்திரங்களின் வாழ்வு முடிந்துவிடலாம். ஆனால், அவர்கள் எழுப்பிய கேள்விகள் வாசகரின் மனத்தில் தொடர்ந்து வாழக்கூடும்.

அங்கூனா ஒரு மண்ணின் மகள். வேர்களை இழந்தவர்களின் கண்ணீரிலும், காதலால் இணைந்தவர்களின் கனவுகளிலும், அடையாளம் தேடும் மனிதர்களின் மௌனத்திலும் எழுதப்பட்ட நாவல்.